தொடர்கள்
பொது
ஹார்வர்ட் தமிழ் இருக்கை உறுதி! -சுசித்ரா ஸ்ரீனிவாஸ்
2018031318050428.jpg
ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் மொழி இருக்கை அமைய 6 மில்லியன் டாலர் வைப்புத்தொகை திரட்டும் பணி வெற்றிகரமாய் முடிவடைந்தது.
இத்துடன் அமெரிக்காவின் தலை சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு குறிப்பாக சங்க இலக்கிய ஆராய்ச்சிக்கு ஒரு நிரந்தர இருக்கை உறுதி செய்யபட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாகப் பல நாடுகளில் வசித்து வரும் 7000த்திற்கும் மேற்பட்ட மொழிப்பற்றுள்ள தமிழர்கள் ஒன்று கூடி தம்மால் முடிந்த நிதி உதவிகளை அளித்துள்ளனர்.
இந்த வெற்றிக்கான முழு பாராட்டுக்கள் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கை (Pittsburg) சேர்ந்த இருதய மருத்துவர் விஜய் ஜானகிராமன் மற்றும் ரோடு ஐலேண்ட் (Rhode Island) சேர்ந்த (oncologist) மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தம் இருவரைச் சேரும்.
இருவரும் ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்பதைத் தமது கனவாகக் கருதி பல்கலைக்கழகத்தை அணுகி இதற்கான 6 மில்லியன் டாலர் வைப்புத்தொகை தேவைப்பட்டவுடன் ஒரு மில்லியன் டாலர் தங்களது பங்காக உடனடியே கொடுத்து மீதம் உள்ள 5 மில்லியன் தொகையை திரட்டுவதில் முழு மூச்சுடன் மூன்று ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தனர்.
உலகெங்கும் இருக்கும் தமிழ்ச் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், தமிழ்ப் பள்ளிகள் என்று பலரும் உதவினார்கள். தமிழக அரசு 1.5 மில்லியன் டாலர் கொடுத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் தமிழ் நாட்டில் வசிக்கும் தொழில் அதிபர்கள், நடிகர்கள் என்று பல துறையினர் பண உதவி புரிந்தனர்.
20180313180525173.jpg
"அடுத்த மாதத்திற்குள் ஹார்வார்ட் யூனிவர்சிட்டியுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது, அதன் படி தமிழ் மொழி ஆராய்ச்சிக்கு ஒரு நிரந்தர ப்ரொபஸர்ஷிப் (professorship) அமைக்கப்படும். அதன் மூலம் தமிழ் மொழியின் சிறந்த நூல்களின் ஆராய்ச்சி விரிவடையும். தமிழ் இலக்கிய கருத்தரங்கங்கள், உரையாடல்கள் என்று உலக மொழி அறிஞர்கள் பலருடன் சேர்ந்து ஆராய்ச்சிகளை விரிவடைய செய்யும் வாய்ப்புகள் ஏற்படும்.
உலகப் பல்கலைக்கழகங்களில் இருந்து மொழி ஆராய்ச்சியாளர்கள் தங்களின் ஆராய்ச்சியை ஹார்வர்டில் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுவார்கள். அதன் படி இதியாவில் இருந்தோ, சிங்கப்பூர், அல்லது ஐரோப்பாவின் தமிழ் மொழி வல்லுநர்கள் ஹார்வர்ட் பல்கலைகழகம் வந்து தனது மொழி ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை உலகெங்கும் தெரியப்படுத்த வாய்ப்புகள் ஏற்படும்." என்று ஜானகிராமன் கூறினார்.
உலகமயமாக்கப்பட்ட இந்த நாட்களில் பயன் தரும் பல வாழ்க்கை உண்மைகளும், வணிகக் கூறுகளும் ஒளிந்து இருக்கும் ஒரு மொழி தமிழ். இருப்பினும் இன்று வரை தமிழ் மொழி ஆராய்ச்சி வாழ்வியல் சம்பந்தப்பட்டதாகவே உள்ளது. இதில் இருக்கும், தொழில் நுட்ப நுண்ணறிவு, அறிவியல் உண்மை, கட்டிடக்கலை, விண்வெளிப் பதிவுகள் என்று எவ்வளவோ வணிக கண்ணோட்டத்துடன் காண முடிகின்ற உண்மைகளை ஆராய்ந்து தமிழ் மொழியின் பெருமை உலகெங்கும் பரவச்செய்யும் வாய்ப்பு இந்த இருக்கையினால் அமையும் என்று நம்புவதாகவும், பல தொல்பொருள் ஆராய்ச்சிக்கான பண ஒதுக்கீடும் ஏற்படுத்தி தர வாய்ப்பு உள்ளதாகவும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் கூறினார். தமிழக அரசின் பண உதவி ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்குக் கிடைக்க உதவி செய்தவர்களில் பாலச்சந்திரன் குறிப்பிடத்தக்கவர்.
"தமிழ் மொழி நூல்கள் இன்று டிஜிட்டலாக்கப்பட்டுள்ளது. அதனால் நமது நூல்களின் மேல் நமக்கிருக்கும் உரிமைகள் பறிக்கப்படும் என்ற பயத்திற்கு இடம் இல்லை. மேலும் ஹார்வர்ட் யூனிவர்சிட்டியின் ஆராய்ச்சி checks and balances மிகவும் கடுமையானவை. தமிழ் மொழி வளர இந்த இருக்கை உதவும் என்பதில் ஐயம் இல்லை" என்று நம்புவதாக நௌஷாத் கதிர் கூறினார். இவர் ஹார்வர்ட் யூனிவர்சிட்டி அலும்னி. தான் படிக்கும் காலங்களில் க்ரீக் மொழியிலும் , சீன மொழியிலும் நடக்கும் கருத்தரங்களை பார்க்கும் பொழுது தமிழுக்கும் இத்தகைய வாய்ப்புக் கிடைக்காதா என்று ஏங்கிய காலங்கள் தனக்கு இருந்ததாகக் கூறினார்.
இன்று அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தமிழ்க் குடும்பங்கள் 300000த்துக்கும் மேற்பட்டது . இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பல தமிழ்ப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்று நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தருணத்தில் ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைந்தது இங்குள்ள இளைய தலைமுறையினர் தமிழ் பயின்று மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட மிகவும் உதவும் என்று எல்லோரும் நம்பிக்கை தெறிவிக்கின்றனர்.
மேலும் ஜானகிராமன் தமிழ் நாட்டு பல்கலைகழகங்களை அமெரிக்காவின் மொழித்துறை ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களுடன் இணைக்கவும் பல ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.
தமிழ் மொழி உலக அரங்குகளில் நிரந்தர இடம் பிடிக்க இந்த மருத்துவர்கள் எடுக்கும் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.