
“ஜாடிக்கு ஏத்த மூடி.. மோடிக்கு ஏத்த எடப்பாடி” என்று நடைபயணத்தில் மு.க.ஸ்டாலின் கேலி செய்து பேசினார்! ஆனால் முதல்வர் எடப்பாடி ரகசியமாக மு.க.ஸ்டாலினுக்கு உதவிகள் செய்தார்!” என்று சொல்லிவிட்டு அமர்ந்தார் ஷெர்லக்!
“அது என்ன தகவல்?”
“ஸ்டாலின் நடைபயணத்தில் செல்லும் சாலை வழித்தடங்கள் எல்லாம் பற்றி அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு அரசு தகவல் அனுப்பியது. அவர் செல்லும் சாலைகளை நல்ல முறையில் புதுப்பித்து சீராக அமைக்குமாறு முதல்வரால் ரகசிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இரவு பகலாக அதற்கான வேலைகள் அந்தந்த பகுதிகளில் நடந்தன. சின்ன மேடுபள்ளங்கள் கூட சரிசெய்யப்பட்டன!”
“பரவாயில்லையே! இதன் அர்த்தம் என்னவோ?”
“அர்த்தம் அனர்த்தம் எல்லாம் அரசியல் புரிந்தவர்களுக்கு புரியும்! பொதுவாக தி.மு.கழக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் உருப்படியாக ஏதாவது செய்யக் கேட்டால், அதை நிறைவேற்றுமாறு சொல்லப்பட்டிருக்கிறது!”
“மக்களுக்கு நன்மை கிடைத்தால் சரி!”
“இருந்தாலும் எடப்பாடியும், அமைச்சர்களும் நிம்மதியாக இல்லை! மாநிலத்தை ஆய்வு செய்வதாக கிளம்பிய கவர்னர் பன்வாரிலாலிடம் ஏகப்பட்ட மனுக்கள். அதில் 11 அமைச்சர்கள் பற்றி புகார்கள். மணல் கொள்ளை, நில அபகரிப்பு மாதிரி புகார்கள்! கவர்னர் தீவிர விசாரணை நடத்தி பல புகார்களுக்கு ஆதாரங்கள் இருப்பதையும் திரட்டி வைத்திருக்கிறாராம்! அது எப்போது டெல்லியை எட்டும் என்கிற `பகீர்` அமைச்சர்களுக்கு!”
“அந்த `பகீர்` ரொம்ப நாளாகவே இருந்து வருகிறதே!”
“தி.மு.கழத்துடன் தமிழக காங்கிரஸ் நெருங்கி வருகிறதாலோ என்னவோ, தி.மு.க.விடமிருந்து சில வழிமுறைகளை பின்பற்றப் போகிறது! கோஷ்டி பூசலுக்கு தீர்வு காணும் முயற்சியாக அது இருக்குமாம்!”
“தமிழக காங்கிரஸ் கோஷ்டி பூசல் முடிவுக்கு வருமா என்ன?”
“காங்கிரஸுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்தபோது, சோ.பாலகிருஷ்ணன் தலைவராகவும், இளங்கோவன் செயல் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். கோஷ்டி பூசல் தவிர்க்க அப்படி ஒரு முயற்சி! மீண்டும் அதே போல ஒரு செயல் தலைவரை நியமிக்கலாம் என்ற எண்ணம் வந்திருக்கிறது! திருநாவுக்கரசர் தலைவராக இருந்துவிட்டு போகட்டும்! செயல் தலைவராக இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், டாக்டர் செல்லகுமார் யாராவது வரலாம்! ஆனால் அவர்களுக்கு ஒதுக்கப்படும் அறை விஷயத்திலும் ஜாக்கிரதை தேவை!”
“அது என்ன தமாஷ்!”
“முன்பு தலைவர் சோ.பா.வுக்கு கீழ் தளத்தில் அறையும், செயல்தலைவர் இளங்கோவனுக்கு மாடியில் அறையும் தரப்பட்டது! தலைவர் கீழேயா, செயல்தலைவர் அவர் தலைக்கு மேலேயா என்ற சச்சரவு ஏற்பட்டது!”
“கோஷ்டி பூசலுக்கு ஏதாவது ஒரு காரணம் தேவை!”
“சுப்பிரமணியன் சுவாமி முழுக்க முழுக்க பி.ஜே.பி. அரசுக்கு எதிராக மாறிவிட்டார் போலிருக்கிறது! அமெரிக்க கொலம்பியாவில் ஒரு வர்த்தக அமைப்பில் சுவாமி பேச்சு மத்திய அரசை எரிச்சலூட்டியிருக்கிறது. `பி.ஜே.பி. அரசின் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற திட்டத்தால் ஒரு லாபமும் ஏற்படவில்லை.. அவசரமாக நிறைவேற்றப்பட்ட ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் ஒரே குழப்பம். மக்கள் பெரிய அளவில் இவற்றால் பாதிக்கப்பட்டார்கள்! வங்கி மோசடிகள் இந்தியாவுக்கே பெருத்த அவமானம்` என்று சுவாமி பேசியிருக்கிறார்!”
“அது அவர் சுபாவம்! சுவாமியை பி.ஜே.பி. பொறுத்துக் கொள்வார்களா?”
“அப்படி அல்ல.. அவர் பேச்சு பரபரப்பு ஏற்படுத்திவிட்டது. அவரை கட்சியை விட்டு நீக்க பி.ஜே.பி. முன்னணி தலைவர்கள் துடிக்கிறார்கள்!”
- ஷெர்லக் விடைபெற்றார்.

Leave a comment
Upload