தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் -பிரதமர் வந்த நேரம்!

20180313194548478.jpg

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த `இந்தி எதிர்ப்பு` கிளர்ச்சியை நினைவூட்டியது காவிரி பிரச்னை போராட்டங்கள்! அப்போது நிகழ்ந்த விபரீதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை ஏற்படவே செய்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்குப் பிறகும், காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்காமல் இருப்பது அநீதியானது. ஒருவேளை `வழக்கு, தாவா` என்று போகாமல் தமிழகமும் – கர்நாடகமும் திரும்பத் திரும்ப அமைதியாக பேசி காவிரி நீர் பங்கீட்டுக்கு வழி கண்டிருக்கலாம்! குரங்கு மத்தியஸ்த கதை போல இந்த விவகாரத்தில் அரசியல் புகுந்து விளையாடிவிட்டது உண்மை!

தமிழகத்தில் இப்போது நடக்கும் கிளர்ச்சியை அரசியலும், வரப்போகும் தேர்தலும் இன்னும் சூடேற்றுகிறது என்பதை மறுக்க முடியாது.

பிரதமர் மோடியை `திரும்பிப் போ` என்று கறுப்புக்கொடி காட்டினார்கள். ஆனால் பிரதமர் மோடி வந்த நேரம் மிக முக்கியமானது. சென்னையில் இருந்து திருச்சி, கோவை, சேலம், ஓசூர் வரை ஒரு நாற்கரம் போல ராணுவ தொழில் வழித்தடத்தை அமைக்கும் பணி நடக்கிறது! அதன்படி பார்த்தால் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அதற்கு ஒரு தூண்டுகோலாக – தொடக்கமாக திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார் பிரதமர்!

திருக்குறளையும், தமிழன் பெருமையையும் குறிப்பிட்டு பிரதமர் இந்த விழாவில் பேசினார்! இந்த நிகழ்ச்சி, தமிழகத்தை அவர் நேசிப்பதை எடுத்துக் காட்டியது.

போராட்ட முறையை அன்று ஒரு நாள் மாற்றி, `பிரதமரே வருக! எங்களுக்கு நியாயம் கிடைக்க பாருங்கள்!` என்று பதாகை ஏந்தி உணர்ச்சியை காட்டியிருக்கலாம்! போராட்டம் என்றால் வெறுப்பைத்தான் காட்ட வேண்டுமா?

அதேபோல ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை விரோத பாவத்துடன் விரட்டியடித்திருப்பதும் சம்பந்தமற்ற செயல்.


20180313194727186.jpg

ஆவேசப் பேச்சுக்கள்

காவிரி போராட்டத்தில், அதை வழிநடத்தியவர்கள் உணர்ச்சியின் உச்சக்கட்டத்துக்கே போய், ஆத்திர ஆவேசப் பேச்சுக்களை கொட்டித் தீர்த்தனர். இது எப்படி அறவழி போராட்டம் ஆகுமோ?

இனிய சொல்லால் எதிர்ப்பு காட்ட வழியில்லாவிட்டாலும், கடும் சொல் தவிர்ப்பதுதான் நல்லது. போராட்டம் முடிவுக்கு வரும்போது ஆர அமர யோசிக்கும் பொதுமக்கள், வன்முறை பேச்சுக்களையும், பேச்சாளர்களையும் நிராகரிக்கவே செய்வார்கள்!

`இந்தியா ஒரு தேசமல்ல.. வெள்ளைக்காரன் உருவாக்கியது` என்று ஒருவர் முழக்கமிடுகிறார். பழுத்த அரசியல்வாதியான வைகோ, ரஷ்யா போன்று இந்தியாவும் தனி நாடுகள் ஆகிவிடும் என்று பேசுகிறார். அந்த நேரத்தில் கூடியிருந்தவர்கள் அதற்கு ஆதரவாக முழக்கமிடலாம்! ஆனால் இம்மாதிரி பேச்சுக்களை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.

போராட்டங்கள் வேறு, தேர்தலில் வோட்டு போடுவது வேறு என்பது மக்களுக்கு தெரியும்.