

விஜி நாகராஜன், நெசப்பாக்கம்
கேள்வி: உலக வரலாற்றில் நட்புக்கு இலக்கணமாக கர்ணன் போல் திகழ்ந்தவர்கள் உண்டா?
பதில்: நட்பு என்பது விசித்திரமானது. உலகெங்கும் நமக்குத் தெரியாத உயிர் நண்பர்கள் இருக்கக் கூடும். துரியோதனன் ஒரு வில்லன். அவனுக்குப் போய் கர்ணன் போன்ற சிறந்த நண்பன் கிடைத்தான்! அதேபோல ஹிட்லருக்கு கோயபல்ஸ் நெருக்கமானவனாக இருந்தான். ஹிட்லர் தன் காதலியுடன் தற்கொலை செய்துகொண்ட செய்தி வந்தவுடனே கோயபல்ஸ் தன் மனைவி, ஆறு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டான். ஹிட்லரும் துரியோதனன் மாதிரிதானே! இங்கே செஞ்சியில் தேசிங்குராஜன் அவருடைய தளபதி மொகமத் கானுக்கு நெருக்கமான நண்பன். மொகமத் கான் திருமண மேடையில் அமர்ந்திருந்தபோது போர்ச் செய்தி வருகிறது. அப்படியே எழுந்திருந்து நண்பனுக்காக போர்க்களம் செல்கிறான். போரில் உயிர் துறக்கிறான். இது நிகழ்ந்தவுடன் அதைத் தாங்காமல் தேசிங்குராஜன் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் உண்டு. அப்படிப்பட்ட நட்பு!
ராதிகா வசந்த், திருவான்மியூர்.
கேள்வி: சமீபத்திய காவிரி போராட்டங்கள் அற வழியில் நடந்தவைதானா?
பதில்: அறவழியிலா – தெரியாது! ஆனால் அரை வழியில் நடந்து கொண்டிருக்கிறது ஒட்டுமொத்தமான தமிழக மக்களும் சாத்வீகமான போராட்டத்தில் ஈடுபட்டால்தான் முழு வழி!

டாக்டர் கோபால், பெர்த், ஆஸ்திரேலியா.
கேள்வி: இதுவரை இந்தியா பார்க்காத அளவுக்கு பிரதமர் மோடி முற்றிலும் மாறுபட்டவராகத் தோன்றுகிறாரே... உங்கள் கருத்து என்ன?
பதில்: மோடியின் மனதில் என்ன ஓடுகிறது என்பது தெரியாத அளவுக்கு மர்மமாக, கண்களில் சிரிப்பு இல்லாமல் அவர் தோற்றமளிப்பதுதான் அதற்குக் காரணம்.

லலிதா சம்புகுமார், பெங்களூர்
கேள்வி: மகாபாரதம், ராமாயணம் சாகா வரம் பெற்ற காவியங்களாக திகழ்வது எதனால் ?
பதில்: மிகச் சிறந்த நாகரிகம் வழியே வந்த நாடுகளில் இப்படிப்பட்ட புராணங்களும், காவியங்களும் இருக்கும். இராக், சீனாவில் கூட இதிகாசங்கள் உண்டு. இத்தனைக்கும் ஆரம்பத்தில் வாய்மொழியாகத்தான் ராமர் கதையும், பாண்டவர் கதையும் சொல்லப்பட்டிருக்கும்! மகாபாரதத்தில் போகப்போக புதுக்கதைகளை சேர்த்துக்கொண்டே போனதும் உண்மை. இரண்டுமே மிகச் சிறந்த படைப்புகள் என்பதையும் சொல்ல வேண்டும்!

குமரப்பா, விருகம்பாக்கம்
கேள்வி: ராஜாஜி, பெரியார் இன்று இருந்திருந்தால் ?!
பதில்: இருவருமே தங்களின் தனித்தன்மையோடு, அறிவாற்றலோடு கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் அவர்கள் இருந்தபோது தரப்பட்ட மரியாதையை இப்போதைய தமிழகம் தருமா என்று கவலையாக இருக்கிறது!
ஜார்ஜ், சேலம்
கேள்வி: போலீஸ் தற்கொலை, போலீஸ் அத்துமீறல் ஆகியவை இன்று அதிகரிக்க எது காரணம் ?
பதில்: யு.எஸ். போன்ற மேலை நாடுகளில் கூட போலீஸுக்கு மன அழுத்தம் உண்டு. அங்கேயெல்லாம் துப்பாக்கி சுலபமாகக் கிடைப்பதால் மன அழுத்தம் ஏற்படுகிறவர்கள் துப்பாக்கியுடன் ஒரு `மாலு`க்கோ பள்ளிக்கூடத்துக்கோ சென்று சரமாரியாக சுட்டுத் தள்ளிவிட்டு தற்கொலையும் செய்து கொள்ளும் கொடூரம் நிகழ்கிறது. இங்கே துப்பாக்கி ஈஸியாகக் கிடைப்பதில்லை. ஆகவே தற்கொலை, அல்லது அத்துமீறல் நிகழ்கிறது. எல்லோருக்குமே வடிகால்கள் தேவை. போலீஸுக்கு அது இங்கு இல்லை!
பிரேம்நாத், திருநெல்வேலி
கேள்வி: விடியற்காலை - மயக்கும் மாலை ... இதில் எது அழகு?
பதில்: விடியற்காலை நான் மிக மிக அரிதாகத்தான் பார்க்கிறேன்! மாலை ஓகே! அதைவிட நிசப்தமான இரவு எனக்குப் பிடிக்கிறது. படிக்க, எழுத.. தொல்லையில்லாத, அமைதியான நேரம்!
ராம் மனோகர், சிவகங்கை
கேள்வி: கிரிக்கெட் விளையாட்டில் உங்களுடைய சின்னவயசுஅனுபவம் பற்றி எங்களுக்கு சுவாரஸ்ய தகவல்கள் எதுவும் உண்டா?
பதில்: பள்ளியில் படித்தபோது, திருவல்லிக்கேணியில் ஒரு கிரிக்கெட் டீமில் என்னைச் சேர்த்துக் கொள்ளவில்லை. எனக்கு அவமானமாகப் போய்விட்டது. அயோத்தியா குப்பத்துக்கு சென்று நண்பன் எட்டியப்பனிடம் அந்த கிரிக்கெட் விளையாட்டு நடக்கக் கூடாது என்று சொன்னேன். அவன் உடனே சில குட்டி தாதாக்களை அழைத்துக் கொண்டு மெரீனா பீச்சுக்குக் கிளம்பினான். அங்கே புதரிலிருந்து கிளைகளை ஆளுக்கு ஒருவர் பறித்துக் கொண்டு கௌபாய் படங்களில் வரும் கொள்ளைக்காரர்களைப் போல `டாய்` என்று குரல் கொடுத்தவாறு பாய்ந்து சென்றார்கள். குத்துச் சண்டை! டீமில் விளையாடிய பலர் பயந்து போய் சிதறி ஓடினார்கள். குடுமி, நெற்றியில் நாமம் சகிதம் இருந்த ஒரே ஒரு பையன் மட்டும் ரௌடிப் பையன்களை எதிர்த்து நின்று பல குத்துகள் விட்டான். என் ‘ஆட்கள்’ இதை எதிர்பார்க்கவில்லை. பிறகு ஒருவழியாக சமாதானப் பேச்சுகள் நடந்து என்னையும் டீமில் சேர்த்துக் கொண்டார்கள். ‘ரௌடிகளை அழைத்து வந்தவன்தானே நீ!’ என்று பிற்பாடு அவ்வப்போது சொல்லிக்காட்டிக் கொண்டும் இருந்தார்கள். இது இன்னும் பசுமையாக நினைவிலிருக்கிறது!

சிவசண்முகம், நெய்வேலி
கேள்வி: காவிரிப் பிரச்சனையில் மு.க.ஸ்டாலின் மாட்டு வண்டியெல்லாம் ஓட்டுகிறாரே? இந்த பயிற்சி எப்போது எடுத்தாரோ? உங்களுக்கு மாட்டுவண்டி ஓட்டிய அனுபவம் இருக்கிறதா?
பதில்: கயிறைப் பிடித்துக் கொண்டால் போதும். மாடு நேர் வழியில் போகும். திருப்புவது எல்லாம்தான் சற்றுக் கற்றுக்கொள்ள வேண்டும். தஞ்சாவூரில் என் தாத்தா நிலங்கள் வைத்திருந்தார். வீட்டில் இரண்டு மாட்டு வண்டிகள் உண்டு. ஒன்று இரட்டை மாட்டு வண்டி. சின்னப் பையனாக இருந்தபோது அதை நான் ஹாய் ஹாய் என்று குரல் கொடுத்தவாறு சாட்டையை சொடுக்கிக் கொண்டு ஓட்டியிருக்கிறேன். நிஜம் இது!
பஞ்சாபகேசன், திருநெல்வேலி
கேள்வி: அதிக கோபம் வந்தால் அந்த தருணத்தை எப்படி சமாளிப்பீர்கள்?
பதில்: முன்பெல்லாம் கோபம் வந்தால் சாப்பிட மாட்டேன். ‘மன்னிப்பு கேள்’ என்று கலாட்டா பண்ணுவேன். குரல் உச்சத்தில் கத்துவேன். இப்பொதெல்லாம் அமைதி அமைதி. அப்படியே கோபப்பட்டாலும் வீட்டில் என் மனைவி, ரெண்டு பெண்கள் இருக்கிறார்கள், என் பாச்சா பலிப்பதில்லை!
வைத்தியநாதன், சீர்காழி
கேள்வி: காவிரி தண்ணீர் நம் நாட்டிற்கு வருமா? வராதா?
பதில்: நதி நீர்களை இணைத்தால் இந்தப் பிரச்னையெல்லாம் வராது. நம் நாட்டின் துரதிருஷ்டம் ஒரு மாநிலத்தில் வெள்ளம், இன்னொன்றில் வறட்சி! இந்த அபத்தம் எப்போது போகும்? நதிகளை இணைத்தால் கங்கையே கூட தமிழ்நாட்டுக்கு வரக்கூடும்!
சியாமளா, தூத்துக்குடி
கேள்வி: விளையாட்டுக்கும், தண்ணிக்கும் என்ன சார் சம்மந்தம்?
பதில்: விளையாட்டு முடிந்தபின் `ப்ளேயர்`கள் ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள வேண்டாமா?! அதான் சம்பந்தம்!
சண்முகம், மதுரை.
கேள்வி: உங்களை பிரமிக்க வைத்த ஹாலிவுட் டைரக்டர் யார்?
பதில்: ஹிட்ச்காக், ஜேம்ஸ் காமரூன், ஸ்கார்ஸஸே, கிறிஸ்டொபர் நோலான். இவர்கள் எல்லாருமே சிறந்த டைரக்டர்கள். நோலானின் லேட்டஸ்ட் படம் ‘டன்கிர்க்’ அண்மையில் பார்த்தேன், ரசித்தேன்!
ரமேஷ், திருவான்மியூர், சென்னை
கேள்வி: இன்றைய காலகட்டத்தில் சினிமா ஸ்டிரைக் தேவையா?
பதில்: இந்தக் காலகட்டத்தில் எந்த ஸ்டிரைக்குமே தேவையில்லை என்பது என் கருத்து. அநேகமாக எல்லா ஸ்டிரைக்குமே கடைசியில் மக்களைத்தானே பாதிக்கிறது? சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் மோதிக் கொண்டால் நல்லது. சடுகுடு விளையாட்டின் மூலம் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்!
ராஜகோபால், திருநீர்மலை
கேள்வி: ‘இந்தியாவுக்கு ஏன் வரி செலுத்தவேண்டும்? ராணுவம் வந்தாலும் அஞ்சமாட்டோம்...’ என்றெல்லாம் கூக்குரல்கள் எழுப்புவது சரிதானா?!
பதில்: நீங்களே இதெல்லாம் ‘கூக்குரல்கள்’என்று சொல்லிவிட்டீர்களே! ‘ராக்கெட், அணு ஆயுதம் எல்லாம் கொண்டு வந்தாலும் அஞ்ச மாட்டோம்?’ என்று ஏன் ஒரு மாறுதலுக்கு குரல் கொடுக்கக் கூடாது?!

Leave a comment
Upload