
இந்தியாவின் தலைமுடியான காஷ்மீரில், இந்தியாவே தலைகுனிந்து நிற்கும்படியான கொடூர நிகழ்ச்சி நடந்திருக்கிறது. படித்தால் கண்கள் குளமாகிறது. உடல் நடுங்குகிறது! அந்த பச்சிளம் குழந்தை என்ன பாவம் செய்தது?
மேய்க்கச் சென்ற குதிரையை வீட்டுக்கு திரும்ப அழைத்து வர சென்றாள் அந்த பச்சிளம் பெண். அவள் அழைக்கும் குரல் கேட்டால், குதிரைகள் விரைந்து வந்து அவள் அருகே நிற்கும்!
அன்று அவள் அழைக்கவில்லை. அவளது அழுகுரல்கள் கேட்டிருந்தால் ஒரு வேளை அந்த குதிரைகளாவது அவளை அந்த படுபாவிகளிடமிருந்து காப்பாற்றியிருக்குமோ என்னவோ?! இதோ...இன்னொரு மழலை நிர்பயாவை மனிதர்கள் எனும் போர்வையில் திரியும் சில கொடூர ராட்சஸர்கள் துளி கூட இரக்கமின்றி உருவாக்கி விட்டார்கள். நம் தேசத்தின் மீது இன்னுமோரு அழியாத
களங்கத்தை சுமத்தி விட்டார்கள். நடந்து முடிந்த இந்த கொடூரம் குறித்து சமூகத்தின்பால் அக்கறையும் அபிமானமும் கொண்டவர்கள் கொட்டித் தீர்த்திருக்கும் சில குமுறல்கள் இங்கே:

கமல்ஹாசன்
அவள் உங்கள் சொந்தப் பெண்ணாக இருந்தால்தான் உங்களுக்குப் புரியுமா என்ன? அந்தச் சிறுமி என் குழந்தையாகவும் இருந்திருக்கலாம். நான் ஒரு ஆணாக, அப்பனாக, இந்த தேசத்தின் குடிமகனாக மிகுந்த கோபத்தில் இருக்கிறேன். இந்த தேசத்தை உனக்கு நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கவில்லையே என வருந்துகிறேன் மகளே! நாங்கள் நீதிக்கு போராடுவோம்... குறைந்தபட்சம் உன்னைப் போன்ற எதிர்காலக் குழந்தைகளுக்காகவாவது!
துக்கத்தில் இருக்கிறோம். உன்னை மறக்க மாட்டோம்.

எழுத்தாளர் சுரேஷ் (சுபா):
ஓர் ஆணாக அவமானத்தில் என் தலை குனிகிறது.
அசிஃபா எட்டு வயதுச் சிறுமி. அவளுக்கு நேர்ந்ததை மகளைப் பெற்ற எந்தத் தந்தையாலும் தாங்க முடியாது.
FIR விவரங்களைப் படிக்கையில் தானாக ரத்தக்கொதிப்பு வருகிறது. கண்கள் நனைகின்றன. இதயம் பிசையப்படுகிறது.
மரியாதை தந்து, பெண்களை தெய்வங்களாக மதித்த இந்த தேசத்திலா இந்த அவலம்?
ஓர் ஆணாக அவமானத்தில் என் தலை குனிகிறது.
எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், அவர்களை எப்படி மன்னிக்க இயலும்..? உண்மையிலேயே, குற்றவாளிகளுக்கு ஆதரவாக தேசியக்கொடி பிடித்து 'பாரத் மாதாக்கி ஜே' என்று கோஷம் வேறா?
'மாதா' என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட இவர்களுக்கு ஏது அருகதை?
ஓர் ஆணாக அவமானத்தில் என் தலை குனிகிறது.
இந்த மிருகங்களை (வேண்டாம், மிருகங்களை ஏன் அவமானம் செய்ய வேண்டும்..?) - இந்த மனிதமற்ற உயிரினங்களை வேட்டையாட துர்கைகளும், காளிகளும், மகிஷாசுர மர்த்தினிகளும் களம் புகவேண்டிய தருணம் வந்துவிட்டது.
(நான் பார்த்துப் பதைத்த புகைப்படங்களைப் பதிவு செய்ய மனம் வரவில்லை.)

எழுத்தாளர் தமிழ்நதி:
சாதியும் மதமும் களமாடும் இடங்களிலொன்றாய் பெண்ணுடல் இருந்துவருகிறது. இனவெறி தன் குறியைக் கூர்தீட்டிச் கொள்வதும் பெண்ணுடலிலேயே என்பதற்கு இலங்கை, பொஸ்னியா, ருவாண்டா, மியன்மார் இன்னபிற சாட்சியமாயிருக்கின்றன. அமெரிக்கா போன்ற நவகாலனித்துவ பாசிசவாதிகள், வளத்தைச் சுரண்டப் போன ஈராக் போன்ற நிலங்களிலுள்ள பெண்களுள் தம் விந்தைச் சொரிந்து ‘ஆண்மை’யை (இந்தச் சொல்தான் எவ்வளவு அருவருப்பூட்டுகிறது) நிரூபித்திருக்கிறார்கள். நிரூபித்து வருகிறார்கள். இவற்றோடு பெண்ணை உடலாய் மட்டும் பார்க்கிற பாலியல் வெறியையும் வக்கிரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
கயர்லாஞ்சியில் சுரேகா, பிரியங்கா, விழுப்புரத்தில் ஆராயி, டெல்லியில் நிர்ப்பயா, செம்மணியில் கிருசாந்தி, புங்குடுதீவில் சாரதாம்பாள், தர்ஷினி மற்றும் வித்யா, முள்ளிவாய்க்காலில் இசைப்பிரியா, அம்பாறையில் கோணேஸ்வரி, மன்னாரில் மேரி மெற்றலின், கொட்டதெனியாவில் சேயா சவ்தமி (ஐந்து வயது), சென்னை முகலிவாக்கத்தில் ஹாசினி… இன்று, காஷ்மீரில் ஆசிஃபா (எட்டு வயது) என பாலியல் வக்கிரத்தின், வன்முறையின், அதிகாரத்தின் வாள்களாக குறிகள் நீள்கின்றன.
இவை தொடர்வதற்குக் காரணம், தண்டனை குறித்த பயமின்மை. அரசாங்கங்கள் குற்றம் இழைத்த தன் படை ‘வீரர்’களைக் காப்பாற்றுகின்றன. மஞ்சள் உடுத்திய மதங்கள் தம் ‘பக்தர்’களுக்காகப் பதறுகின்றன. சாதி(சா)மான்களாகிய வெள்ளை வேட்டிக்காரர்கள் ‘எவ்வளவு செலவானாலும் பரவால்லடா’என்றபடி பணப்பையைக் கக்கங்களில் செருகிக்கொண்டு சாதியைக் காப்பாற்ற நீதிமன்றங்களில் ஆஜராகிவிடுகிறார்கள்.
எட்டு வயதுச் சிறுமி ஆசிஃபாவை, அந்தக் கண்கெட்ட கடவுளின் கர்ப்பக்கிரகத்தினுள் எட்டுநாட்கள் அடைத்துவைத்து பாலியல் சித்திரவதை செய்து கொன்றவர்களைக் காப்பாற்ற இப்போதே மதம் சன்னதங் கொண்டு புறப்பட்டுவிட்டது.
என்ன செய்யப்போகிறோம்?

வாசுகி உமாநாத் : ஜனநாயக மாதர் சங்கம்
அசீஃபாவுக்கு நியாயம் கேட்போம். சே.. என்ன உலகம் இது! மனிதம் மறந்து போனதா, மரத்துப் போனதா? 8 வயது குழந்தையை ஒரு வார காலம் கூட்டு பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த குற்றவாளிகள் (துணை போன காவலர்கள் உட்பட)தண்டனை பெற வேண்டும். குற்றவாளிகள் மீது குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய விடாமல் தடுத்த வழக்கறிஞர்களை வன்மையாக கண்டிப்போம். குழந்தை பிற்படுத்தப்பட்ட இசுலாமிய குடும்பம் என்பதால் பலி/பழி வாங்க பட்டிருக்கிறாள் என்பதாக செய்திகள் வருகின்றன. பாரதமாதா வெறும் பார்வையாளர் தானா?

ஹன்ஸா - வக்கீல்
எல்லா மதங்களிலும், எல்லா சாதியிலுமே, இரு வெவ்வேறு தரப்பிடையில் சண்டை நடந்தால், எதிரி வீட்டு பெண்ணை அசிங்கமாகபேசுவது, முடிந்தால் கை வைப்பது.
*ஒட்ட நற்ற்ற்ற்ற்ற்றுக்கணும்.

ராஜேஷ்குமார்- எழுத்தாளர்:
அரபு சட்டம் அரங்கேற வேண்டும்.
ரோஜா மொட்டுக்களை குதறும் கயவர்களை முச்சந்தியில் நிறுத்தி வைத்து
அவர்களின் முக்கியமான இடத்தை சுக்கு நூறாய் சிதறும்படி சுட்டுத் தள்ள வேண்டும்.
What is going on in our india ?
I'm not proud to be born in India.

பட்டுக்கோட்டை பிர்பாகர்- எழுத்தாளர்:
எட்டு வயது பெண் குழந்தை ஆசிஃபாவின் கற்பழிப்பு விவகாரத்தில் ஈடுபட்டவர்களுக்குத்தான் இதயம், இரக்கம், நியாயம், தர்மம், மனிதம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையென்றால்..இதில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், வக்கீல்கள் இவர்களுக்கும் இவை இல்லையெனும்போது பதைப்பு இரட்டிப்பாகிறது.
இது காமத்தின் விளைவாக நடந்ததல்ல..இன எதிர்ப்பால் எச்சரிக்கும் வெளிப்பாடாக சில கேவலமான ஜென்மங்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
ஆணவக் கொலை போல இது ஒரு ஆணவ கற்பழிப்பு. மதம் இனம் மொழி தாண்டி மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டிய விவகாரம். வெட்கப்பட வேண்டிய விஷயம்.
தனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளை ஒரு விபத்தில் பறிகொடுத்த பிறகு அந்தத் தம்பதி ஆசிஃபாவைத் தத்தெடுத்து வளர்த்திருக்கிறார்கள்.
காட்டுக்குள் குதிரை மேய்க்கப் போன அந்த பட்டாம்பூச்சியின் சிறகுகளைப் பிய்த்த கொடூரர்களை தண்டிக்காத அத்தனைக் கடவுள்களின் மீதும் கோபம் கொள்கிறது மனம்.
மதம் கடந்து அத்தனைக் குழந்தைகளும் கடவுளின் பிரதிநிதிகளாக, தேவதைகளாகப் பார்க்கப் படுவார்கள் என்கிற பழைய நம்பிக்கையில் இங்கு வந்து பிறந்துவிட்ட குட்டி தேவதையே..மன்னிப்பாயாக!

நடிகை ஶ்ரீப்ரியா:
மங்கையராய் பிறப்பதற்கே மாதவம்
செய்திட வேண்டும் ...?இயற்கையே,இறைவனே...பெண்ணாக அல்ல ஆணாக கூட பிறவி வேண்டாம்!மனிதத்தில் நம்பிக்கை இனி இல்லை #justice for girl children

Leave a comment
Upload