சாஸ்தா அரவிந்த் என்றே அன்புடன் அழைக்கப்படும் அரவிந்த் சுப்ரமண்யம், சபரிமலையில் பங்குனி உத்திர பூஜைகளுக்கு முன்னோடியாக விளங்கிய கல்பாத்தி ஸ்ரீCV ஸ்ரீநிவாசய்யரின் பேரனாவார்.
இன்று வரை சுமார் 200க்கும் மேற்பட்ட ஆன்மீக கட்டுரைகளும், ஸ்ரீ மஹா சாஸ்தா விஜயம், சண்டிகையின் சரிதம், ஸ்ரீலலிதையின் கதை, சக்தி பராக்கிரமம் போன்ற 20க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். பல ஆன்மீக இதழ்களில் கட்டுரைகளும் தொடர்களும் எழுதி வருகிறார். ஆன்மீகம் சார்ந்த பல தலைப்புகளின் சொற்பொழிவுகள் இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் நிகழ்த்தியுள்ளார். சமஸ்கிருதத்திலும் தமிழிலும் பாண்டித்யம் பெற்றவர்.
இந்த 20ஆம் நூற்றாண்டில் புராண நூலாக ஸ்ரீ மஹா சாஸ்தா விஜயம் என்ற சாஸ்தாவின் முழுமையானதோர் புராணத்தை இயற்றிய பெருமைக்குரியவர். இதை அங்கீகாரம் செய்வதாக தி ஹிந்து நாளிதழ் இவரை personality of the week என்று தேர்ந்தெடுத்திருக்கிறது.
கோவையில் ஸ்ரீமஹா சாஸ்த்ரு சேவா சங்கம் என்ற அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார்.
பல்லாண்டு கால தேடலின் விளைவாக சபரிமலை தர்மசாஸ்தாவின் மூல புராண நூலான ஸ்ரீபூதனாத உபாக்யானம் என்ற நூலினை பல ஓலைகளிலும் நூல்களிலும் தேடிக் கண்டறிந்து முதன் முதலாக அச்சில் கொண்டு வந்துள்ளார்.
சமீபத்தில் அவரை மும்பையில் அவரை ஒரு அவார்ட்

நிகழ்ச்சியில் சந்தித்தேன். அந்த உரையாடல் இதோ தொடர்கிறது.
மலேஷிய அரசின் தபால் துறை தங்கள் படத்துடன் போஸ்டல் ஸ்டாம்ப் வெளியிட்டுள்ளது பற்றி அறிந்து உங்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் சாமி. அது குறித்த தங்களின் உணர்வு..
அதிலும் வெளிநாட்டவரை, அவரது வாழ்நாளிலேயே அங்கீகரித்து கௌரவித்தது மிக்க மகிழ்ச்சியல்லவா?

மலேஷியாவில் பினாங்கு பகுதியில் அமைந்திருக்கும் பட்டு உபான் ஐய்யப்ப சேவ சமிதி என்று சொல்லக்கூடிய ஐயப்ப பக்தர்கள் குழுமம் தான் இதற்கான முயற்சியை எடுத்து இது மாதிரியான விஷயத்தை ஏற்பாடு பண்ணி கொடுத்தார்கள். அவர்கள் மலேஷிய தபால் துறையோடு இணைந்துஇது மாதிரியான தபால் தலை வெளியிடணும் என்ற விஷயத்தை முன்னெடுத்து வெளிடிட்டிருக்காங்க அதனால கட்டாயம் எனக்கு வந்து வெளிநாட்டுல அவங்க ஊரைச் சேராத ஒருத்தருக்கு இந்த மாறி பண்ணியிருக்காங்க என்பது ஐய்யப்ப பக்தர்களுக்கு கிடைச்ச கௌரவமாகத்தான் நினைக்கிறேனே ஒழிய எனக்குத் தனிப்பட்ட முறையில் என்னுடைய பெருமையோ என்னோட காரியங்களோ ஒன்றுமில்லை.

[பட்டு உபான் ஐய்யப்ப சேவ சமிதி]
சமீபத்தில் இங்கிலாந்தில் இம்பீரியல் கல்லூரியில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றது பற்றி..
இங்கிலாந்தோட டாக்டர் பட்டமும் அதே போலத் தான். நம்முடைய சனாதன தர்மத்திற்கு நாம் ஆற்றியிருக்கக்கூடிய தொண்டுகளையும் நாம் எழுதியிருக்கக்கூடிய நூல்களையும்
அடிப்படையாக வைத்து அங்கு இருக்கக்கூடிய பக்தர்கள் எடுத்த முயற்சியினால நம்முடைய டாக்குமென்டுகளை சோதிச்சி அதனடிப்படையில் இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்கள்.
தாங்கள் பெற்ற அங்கீகாரங்களில் எது தங்களுக்கு உயர்ந்ததென எண்ணுகிறீர்கள்?
எத்தனை ஊர்களுக்கு போகிறோம். எத்தனை நாடுகளுக்குப் போகிறோம். பற்பல சந்தர்பங்களில் பற்பல மனிதர்களைப் பார்க்கிறோம்.
ஒரு சமயம் ஸ்விட்சர்லாந்து போயிருந்தபோதுஅங்கு அனைத்து மத சம்மேளனம் என்ற ஒரு நடைபெற்றது. அதுல கூட கலந்துகிட்டு இந்து மதத்தின் சார்பில் பேசக் கூடிய ஒரு வாய்ப்பு கிடைச்சுது. இப்படி பல சபைகளில் பேசி பல அங்கீகாரகள் பல கௌரவங்கள் கிடைச்சிருந்தாலும் அய்யப்ப பக்தன் அப்படீங்கற் ஒரு கௌரவம் தான் பெரிய விஷயமாக நான் நினைக்கிறேன்.
படிப்பு வழியாக LLB படித்திருந்தாலும், சொந்த இன்டெரெஸ்ட்டில் MA தமிழ் படிச்சிருந்தாலும், MBA முதலான படிப்புகள் படித்திருந்தாலும், சட்டிட்ஸ்கரில் உள்ள பண்டிட் ரவிஷங்கர் ஷுக்லா யுனிவர்சிடியில் நம்முடைய சபரிமலை அய்யப்பனின் வழிபாட்டு முறைகளும் அதிலுள்ள பாரம்பர்யமும் என்ற தலைப்பில் நம்முடைய பிரம்மாண்ட புராணத்தில் உள்ள பூதனாத உபாக்கியானத்தின் அடிப்படையில் அதையே ஒரு Phd தீஸிஸ் ஆக சமர்ப்பணம் பண்ணி அதிலும் டாக்டரேட் பட்டமும் படிப்பளவிலும் பெற்றுள்ளேன்.
சாஸ்தா ஐயப்பன் மீதான ஆராய்தல் எப்போது ஆரம்பித்தது? அந்த பயணத்தில் தங்களை வியப்பிலாழ்த்திய தருணங்கள் ஒரு சிலவற்றை விகடகவி வாசகர்களுக்கு பகிருங்களேன்.
நான் ஆராய்ச்சி என்ற எண்ணம் கிடையாது, தெரிஞ்சிக்கணும் என்ற எண்ணம் எனது பத்து பதினோரு வயதில் தொடங்கியது. சிறு வயதிலிருந்தே நிறைய படிப்பேன். அதனாலே நிறைய சந்தேகங்கள் ஏற்பட்டது. அதன் அடிப்படையா வெச்ச கேள்விகளை எனக்குள் எழும்பிட அதற்குரிய பதில் தேட ஆரம்பிச்சது தான் ஆராய்ச்சியாக முடிந்தது. நான் எட்டாங்கிளாஸ் படிக்கும்போதுன்னு சொன்னால், அதாவது ஒரு பதிமூணு வயசுல தொடங்கின ஆராய்ச்சி இது.
வியப்பில் ஆழ்த்திய தருணங்கள் என்று சொன்னால் பல தருணங்கள் உண்டு. இவ்வளவு தான் முடிஞ்சாச்சி இனிமேல தேடறதுக்கு ஒண்ணுமில்லன்னு நினக்கும்போது தான் கிடைச்சிருக்கறதும் நாம தெரிஞ்சிக்கிட்டதும் 10% கூட இல்லன்னு சொல்லும்படியாக பகவான் புதிய தகவல்களை கொடுப்பார். இப்படி ஒவ்வொரு தடவையும் இன்னை வரைக்கும் பகவான் என்னை வியப்பில் ஆழ்த்திக்கிட்டே இருக்கார்.
பல விஷயங்களில் நான் ஒரு முடிவுக்கு வந்திருப்பேன், இது வந்து இப்படி, புரிதல் குறைவினால் ஏற்பட்டிருக்கு அதனால இதை நாம தவறா புரிஞ்சிட்டிருக்கோம் என்று நினைக்கும்போது பகவான் வந்து அடுத்து கிடைக்கக்கூடிய தகல்வல்களை வைத்து பார்த்தால் அப்படியே புரட்டி போடற மாதிரியான விஷயங்களாக இருக்கும்.
சாதாரணமான சொல்லணும்னா நம்முடைய பெரிய குருமார்களும் , பழைய குருசாமிகளும் என்னுடைய தாத்தா போன்றவர்கள் எல்லாம் பேச்சு வழக்குல சொன்ன பல விஷயங்கள் அது தான் சரி என்று இன்னிக்கி தெளிவாகிறது. நான் இது வரையில் அதற்கெல்லாம் ஆதாரம் இல்லை என்று நினைச்சிட்டிருந்தேன். ஆனால் புராண ரீதியிலும் பழைய கிரந்தங்களிலும் பார்க்கும் போது எல்லாமே very well documented விஷயம் என்று எனக்கும் பல நேரங்களில் ஆச்சர்யம் கொடுத்திருக்கு.
பூத நாதோபாக்யானம் வ்யாசரால் த்வாபர யுகத்தின் முடிவில் தனது பிரம்மாண்ட புராணத்தில் இடம்பெற்றுள்ளது...எனில் இந்த பூலோக அவதாரம், மணிகண்டன் அவதாரம், சென்ற யுகத்தில் தானே நடந்திருக்கவேண்டும். எனில், பந்தளத்தில் இந்த கலியுகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்குள் நடந்தது போல் சித்தரிக்கப்படுகிறதே..இந்த முடிச்சை அவிழுங்களேன்.

சென்ற (த்வாபர)யுகத்தில் இல்லை. மணிகண்டனின் அவதாரம் என்பது த்ரேதா யுகத்தில், அதாவது, ராமாயணம் நடந்த யுகமான காலத்தில் நடந்தது. அதாவது சாஸ்தாவின் ஆவிர்பாவம் கிருத யுகத்திலும் (சதுர் யுகங்கள் என்று சொல்லப்படும் நால் யுகங்களின் முதல் யுகம்), பாற்கடல் கடைந்த சம்பவமான கிருத யுகத்திலேயும் அதற்கடுத்த ராமாயண காலத்தில் மணிகண்டனாக பூலோக அவதாரமும் நடைபெற்றது என்பதுதான் என்னுடைய ஆராய்ச்சியுடைய தீர்மானம்.
ஏனென்றால், மகிஷி என்று சொல்லக்கூடிய அரக்கி என்ற cross referenceஐ பார்க்கையில் மகிஷிக்கு ஒரு புத்திரன் இருந்ததாக குறிப்புகள் இருக்கு. அந்த மகிஷியோட புத்திரனை வாலி கொன்றதாக ராமாயணத்தில் குறிப்புகள் இருக்கு. அப்பிடி பார்க்கையில் ராமாயண காலத்தின் சம காலத்தில் தான் நடந்திருக்க வேண்டும். இது தான் புராண மணிகண்டனின் அவதாரம். பந்தளத்தில் இந்த கலியுகத்தில் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தான் நடந்ததாக சித்தரிக்கிபடுவது என்பதில் நமக்கு தெளிவாக ஒரு புரிதல் நமக்கு இருப்பது அவசியம்.
சபரிமலை ஆலயம் என்பது மகிஷி சம்ஹாரத்தையொட்டி பரசுராமரால உருவாக்கப்பட்டது. பரசுராமர் தான் விக்கிரகத்தை பிரதிஷ்டை பண்றார். அகஸ்த்தியர் தான் முதல் பூஜை பண்ணுகிறார். அப்படீன்னு சொல்லும்போதே அது வந்து எத்தனையோ யுகத்திற்கு முற்பட்டது என்பது நமக்கு தெரிய வருகிறது.
பந்தளம் குடும்பத்தில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கிறது என்பது ஆரிய கேரள வர்மன் என்று சொல்லக்கூடிய ஒரு யோகி. அவர் பந்தள ராஜ குடும்பத்தில் தோன்றிய அரச குமாரன். பகவானின் அம்சமாக இருக்கக்கூடியவர். அவருக்குப் பெயர் தான் அய்யப்பன். இந்த பெயர் குழப்பத்தால் பல விஷயங்கள் முன்னையும் பின்னயும் மாத்தி சொல்லப்படுகிறது. இப்போ இவருடய கால கட்டத்தில நடந்த பல சம்பவங்களை புராண காலத்தோடு போட்டு குழப்பிக்கொள்கிறோம். அதனால புராண சரித்திரமான மணிகண்ட அவதாரம் வேற, உதயணன் என்ற கொள்ளைக்காரனைக் கொன்று அழிந்து போயிருந்த சபரிமலை ஆலயத்தை புனர் நிர்மாணம் செய்து மீட்டெடுத்த ஐய்யப்பன் என்று சொல்லக்கூடிய ஆரிய கேரள வர்மனுடைய காலம் வேற. இது தான் இதில் உள்ள முடிச்சு.
பூத நாதோபாக்யானம் மணிகண்டனின் கீதை என்று சொல்லப்படுகிறதே. அதில் அவரே இந்த சபரிமலை யாத்திரை பற்றி விதிமுறைகள் சொல்லியிருக்கிறாரல்லவா!!!.... பற்றி அடுத்த வாரம் தொடர்கிறார்.....

Leave a comment
Upload