தொடர்கள்
விகடகவியார்
சீமான் தொகுதி நிலவரம்

20260323052453804.jpg

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணியில் இந்த தொகுதி இந்த முறையும், காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்

மாங்குடி இந்த முறையும் போட்டி போடுகிறார். அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு இந்தத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. வேட்பாளர் தேர் போகி பாண்டியன், தமிழக வெற்றி கழகம் சார்பாக மருத்துவர் டி.கே.பிரபு போட்டி போடுகிறார். காரைக்குடியில் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 25 வேட்பாளர்கள் களத்தில்.

காரைக்குடியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 5 முறை, அதிமுக 4 முறை, திமுக 3 முறை, சுதந்திர கட்சி 2 முறை மற்றும் பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தல ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. இந்த தொகுதியில் பெண் வாக்காளர்கள் அதிகம்.

சென்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட எச்.ராஜா வெற்றி வாய்ப்பை இழந்தார்.

2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் காரைக்குடி மாநகராட்சி அந்தஸ்து பெற்றது. மாநகராட்சி என்று அவசர அறிவிப்பு வெளியிட்டாலும், அதற்கான வளர்ச்சிப் பணிகள் எதுவும் இல்லை என்பது தான் வாக்காளர்களின் குற்றச்சாட்டு. காரைக்குடி மாநகராட்சி என்பது கிராமங்கள் அடங்கியதுதான்.

சாலை மற்றும் தண்ணீர் வசதிகள் என்பது இங்கு தொடர் பிரச்சினை. இதேபோல் கிராமங்களில் சீமை கருவேல மரங்களால் பெரிய அளவு பிரச்சனை இருக்கிறது. நீர் வளங்கள் பாதுகாக்கப்படுவதில்லை. விவசாயிகள் அதிகம் இருக்கும் இந்த பகுதியில் ஆறுகள் ஏதும் இல்லாததால் மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வருகிறார்கள்.

இது ஒரு பின்தங்கிய மாவட்டம். மாநகராட்சி தொகுதி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசினாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர் தொகுதியை அக்கறையுடன் கவனிப்பது கிடையாது என்பது தான் உண்மை. இது காரைக்குடி தொகுதிக்கும் பொருந்தும்.

சீமானைப் பொறுத்தவரை "என் மண்ணில் உள்ள பிரச்சனை என்ன என்பது எனக்கு தெரியும். இதுவரை காரைக்குடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை.

நான் மக்களின் பிரச்சினையை கேட்க வந்த மகன் அல்ல, பிரச்சனையை தீர்க்க வந்த மகன் "என்கிறார். கார்த்திக் சிதம்பரம் சீமானுக்கும் காரைக்குடிக்கும் என்ன சம்பந்தம்,

இந்த முறையும் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என்கிறார். மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.