தொடர்கள்
விகடகவியார்
ஓட்டுக்கு பணம் தடுக்க முடியாத தேர்தல் ஆணையம்

20260323051053876.jpeg

தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளில் இதுவரை பணம், தங்கம், போதை பொருள் மற்றும் மதுபானம் உள்ளிட்ட சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங் தெரிவித்திருக்கிறார். இதில் 500 கோடி ரூபாய் ரொக்கம் என்கிறார். நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற இந்த நடவடிக்கை என்கிறார் அதிகாரி.

தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் என்பது ரொம்ப நாட்களாக தொடர்ந்து இருக்கும் பழக்கம். எங்கள் பகுதியில் பணம் தரவில்லை என்று மறியல் செய்யும் அளவுக்கு வாக்காளர்கள் ஓட்டுக்கு பணத்தை எதிர்பார்க்கிறார்கள் .

தேர்தல் ஆணையம் ஆடு, ,மாடு வாங்க சென்றவர்கள் நகை மீட்டு எடுத்துச் சென்றவர்கள் போன்ற அப்பாவிகளின் பணத்தையும் கைப்பற்றி அராஜகம் செய்கிறது .

தேர்தல் என்பது இப்போது ஒரு காஸ்ட்டிலியான விஷயம் என்று ஆகிவிட்டது. நேர்காணல் போது கட்சி தலைமை எத்தனை கோடி செலவு செய்வாய் என்ற கேள்வியை விருப்பமனு தருபவர்களிடம் மறக்காமல் கேட்கிறார்கள்.

தேர்தலில் போட்டி போட்டு வெற்றி வாய்ப்பை இழந்த இயக்குனர் தங்கர் பச்சன் தனது எக்ஸ்ததளபக்கத்தில் மனம் நொந்து ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். அது இதோ:-

"40 கோடிகள் இருந்தால் மட்டுமே இனி சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நுழைய முடியும் எனும் கேடுகெட்ட நிலைக்கு அரசியலை கொண்டு சென்று விட்டார்கள். செலவழித்த பணத்தை திருப்பி எடுக்கவும், மேலும் கொள்ளை அடித்து அடுத்த தேர்தலை சந்திக்கவும், மட்டுமே ஐந்தாண்டுகள் வேலை செய்வார்கள். இதில் மக்களாட்சிக்கு இனி என்ன வேலை இருக்கப் போகின்றது. இனிமேல் எந்த ஒரு சாதாரண மனிதனும் அரசியல் மூலம் மக்களுக்கு தொண்டு செய்யும் எண்ணத்தை விட்டு விட வேண்டியது தான். அனைத்து திருட்டுத்தனங்களையும் செய்வதற்கு மக்கள் கேள்வி கேட்காதவாறு அவர்களையும் கூட்டு சேர்த்துக் கொள்ளும் சூழ்ச்சியை அறிமுகப்படுத்திய கட்சி தமிழ்நாட்டில் இருக்கும் வரை உண்மையான மக்களாட்சி எக்காலத்திலும் மலரப்போவதில்லை "என்று குறிப்பிட்டிருக்கிறார்.