தொடர்கள்
அனுபவம்
காடறிதல் -3 ஒரு துளி பிரபஞ்சம் - இந்துமதி கணேஷ்

20250609161933965.jpeg

"I touch God in my song as the hill

touched the far-away sea with its waterfall",

நான் இறைவனை என் பாடல்களால்

தொடுவதைப் போல தொலை தூரமிருக்கும்

அந்த கடலை இந்த மலைகள்

தம் அருவிகளால் தொடுகின்றன" ரவீந்திரநாத் தாகூர்.

காந்தளூர் வனப் பகுதி முழுவதுமே நீர்வீழ்ச்சிகளால் நிறைந்திருக்கின்றன. பயணிக்கும் வழியெல்லாம் நீரின் சலசலப்பு தான், இறங்கி அவைகளை பார்வையிடத் தோன்றுகிறது, ஆனால் அது பாதுகாக்கப் பட்ட வனப்பகுதி என்பதால் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இறங்கலாம் மற்ற இடங்களை ஜீப்பில் இருந்தபடி பார்வையிட மட்டுமே முடியும்.

முருகன் கடவின் இன்னொரு பெயர் முனியறை என்று கேள்விப்பட்டவுடன், என் மகனுக்கு ஆர்வம் மேலிட தொடங்கியது. "முனின்னு சொல்றாங்களே அப்பிடின்னா முனிவர்கள் வாழ்ந்த இடமா ஐயா ?" என்று கேட்டான். "ஆமா தம்பி, இது சித்தர்கள் வாழ்ந்த இடம்னு இங்க பக்கத்துல வாழுற மக்களோட நம்பிக்கை, அதுனால தான் இங்க ஒரு முருகன் கோவில் கூட இருக்கு. ஆனா இது பெருங்கற்கால கற்பதுகைகள் தான், முறையா ஆராய்ச்சி செய்யப்படாமல் இருக்கு" என்று அவர் கூறிய போது ஆயிரம் கேள்விகள் நமக்குள் படையெடுத்தாலும் வார்த்தைகள் இதழ் தாண்ட மறுத்தன.

வேறு ஏதும் சந்தேகம் இருந்தா கேளுங்க என்று தேக்கன் சொன்னவுடன், மகள் வேகமாக "ஆமா மிருகங்களுக்கெல்லாம் வேர்க்குமா தாத்தா, முக்கியமா யானைக்கு?" என்று கேள்வி கேட்டாள். கூட்டத்தில் சிரிப்பொலி எழுந்தது, இவ யானையை விடவே மாட்டா போல இருக்கே என்று நான் எண்ணிக் கொண்ட போது "மிருகங்களுக்கு வேர்காதுடா, இப்போ நாய் பாத்திருக்கியா நாக்கை தொங்க போட்டு இருக்கும்ல அதுல இருந்து எச்சி வடியுமே அப்படி தான் அது தன்னோட கழிவுகளை வெளியேத்தும், புலி, சிங்கம், சிறுத்தை எல்லாத்துக்கும் அதே போல தான். யானைக்கு தோல் நல்லா தடிமனா இருக்கும் அதனால அது வெயில்ல போனாலும் அதுக்கு வேர்க்காது" என்றார் பொறுமையாய். பின்னாலிருந்து ஒரு குரல், "அடுத்து போக போற இடம் என்னங்கய்யா ?" என்றது.

"அதை தான் நானும் சொல்லனும் என்று நினைச்சேன், நாம அடுத்து போக போற இடம் கச்சாலம் அருவி. எல்லாரும் குற்றாலம் பாத்துருப்போம் அதில குளிச்சு இருப்போம், இன்னைக்கு கச்சாலம் போக போறோம், அற்புதமான நீர்வீழ்ச்சி அது. ஆனா அங்க குளிக்கணும் என்றால் கண்டிப்பா நான் சொல்ற வழிமுறைகள் எல்லாத்தையும் நீங்க கடைபிடிக்கணும் இல்லாட்டினா, வழுக்கி விழுந்து அடி பட்டுக்குவீங்க" என்றவுடன் நாங்கள் சற்றே திகைத்தோம். "என்னடா இது அருவில ஜாலியா குளிக்கலாம் என்றால் அதுலயும் இப்படி அப்படினு ஆயிரத்தெட்டு விதிகள் சொல்றேனே என்று யோசிக்காதீங்க, இங்க நிறைய பேர் ஒண்ணா வந்திருக்கோம், ஒருத்தருக்கு ஏதாச்சும் அடி பட்டாலும் மொத்த குழுவும் வருத்தப்படும், அப்புறம் நம்மோட சுற்றுலா மனோபாவம் கெட்டு போகும்." என்று அவர் நயமாய் சொல்லி முடிக்கும் முன்பே, " நீங்க சொல்லுங்க தாத்தா நாங்க சமத்தா அப்படியே நடந்துக்குறோம்" என்றான் குட்டி மகிழன்.

"அது ஒண்ணுமில்ல கண்ணுகளா, நாம இப்போ போக போற கச்சாலம் அருவில நிறைய வழுக்கு பாறைகள் இருக்கும், மேலும் குளிக்க போற இடத்துக்கு ஒரு சறுக்கான பாறைவழியா தான் ஏறி போகணும். நீங்க வெறுமனே நடந்தால் அங்க வழுக்கி தான் விழணும், எல்லாரும் அந்த இடத்துல உக்காந்தபடி உந்தி உந்தி தான் முன்னேறி போய் அருவில நின்னு குளிக்கணும், அதே போல திரும்பி வரும் போதும் உக்காந்திட்டே பின்னகர்ந்து வந்து அந்த சறுக்கு பாறை முடிஞ்ச பிறகே எழுந்து வரலாம்" என்றவுடன் அனைவரும் வேகமாக தலையாட்டி விட்டு அருவி குளியலுக்கு தயாரானோம். "இன்னும் முடியலை மக்களே, தண்ணி சில்லுன்னு இருக்கும், யோசிச்சிட்டு நின்னுகிட்டு இருந்தா கடைசி வரை குளிக்கவே மாட்டீங்க. முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த அருவி காட்டில் இருந்து பரிசுத்தமாய் வருது, கீழ இருக்க மக்கள் இதை குடி தண்ணீராய் உபயோக படுத்துறாங்க அதுனால அதில் சோப்பு, ஷாம்பு போன்ற ரசாயனங்களை நாம் கலக்கவே கூடாது என்பதை ஒரு வேண்டுகோளாக கேட்டுக் கொள்கிறேன்" என்று தேக்கன் சொன்ன போது அனைவரும் கோரஸாக "ஏற்கனவே பிரவீன் சார் இதை சொல்லிட்டதால சோப், ஷாம்பு எதுவும் எடுத்திட்டே வரலைங்க ஐயா" என்றோம், எங்களின் மனம் அருவியில் பாய காத்திருந்தது.

அருவி குளியல் எப்போதுமே மனதையும் உடலையும் தூய்மை படுத்தி விடும். ஆர்ப்பரித்து ஓடி வரும் நீரின் கீழ் நிற்கும் போது, இயற்கையின் முன் நாம் சிறு துரும்பென உணரும் தருணமது. அருவிகள் எனக்கு புதிதானவை அல்ல. பள்ளிக் காலங்களில் காலாண்டு, அரையாண்டு, முழு பரிட்சை என்று எப்போது விடுமுறை வந்தாலும் நாங்கள் போகும் இரண்டு இடங்களில் ஒன்று தாமிரபரணி ஆறு, அது தினம் தவறாமல் கிடைக்கும் சொர்க்கம். மற்றொன்று அருவிகள். பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவி இரண்டுமே எங்கள் வீட்டில் இருந்து அரை மணி நேரம் தான் என்பதாலும் வருடத்தின் அனைத்து நாட்களிலும் தண்ணீர் வரத்து இருக்கும் என்பதாலும் அடிக்கடி அங்கு சென்று வருவதுண்டு. எத்தனை முறை குளித்தாலும் அவை தரும் புத்துணர்வு அலாதியானது.

குற்றாலம் அருவிகளும் தொலைவானவை அல்ல என்றாலும் சீசன் காலங்களில் மட்டுமே அவற்றில் தண்ணீர் இருக்கும். அனைத்து வருடமும் அங்கு போய் வருவதில்லை. ஏனோ மக்கள் கூட்டம், அவர்கள் போடும் சோப், மற்றும் ஷாம்பு சேஷைகள், வாடிய பூக்கள், மீந்த பண்ட கவர்கள் என்று மக்கள் அந்த அருவியை குப்பையாக்கி விடுவதை காணும் போது அங்கு போய் அந்த அருவியில் குளிக்கவே தோன்றுவதில்லை. தற்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் திருந்துவதாக இல்லை. நாலைந்து வருடங்களுக்கு முன்பு குளிர் இரவில் குற்றாலச் சாரலில் நனைந்த பிறகு எந்த அருவிக்கும் போக வாய்ப்பும் அமையவில்லை.

எங்கள் வீட்டில் அருவியில் குளிக்க என்று நல்லெண்ணெய்யும் மாற்றுடையும் மட்டுமே எடுத்து போவோம். அருவியில் குளிக்க போகும் முன்பு ஆச்சி எங்களை பாறைகளில் வரிசையாக அமர வைத்து உச்சந்தலையில் குளிர குளிர எண்ணெய் தேய்த்து விடுவாள். பிறகு நாங்கள் அருவிக்குள் போனால் திரும்ப குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். பொதுவாக மக்கள் மென் சாரல் போல தண்ணீர் விழும் இடத்தில் தான் கூட்டமாக குளிக்க விரும்புவார்கள், அடர்வாய் தண்ணீர் விழும் பகுதிக்குள் போய் நிற்பவர்கள் மிகச் சொற்பமானவர்களே, நானும் என் சித்திகளும் நல்ல அடர்வாய் நீர் விழும் பகுதியில் போய் நின்று விடுவோம், வெளியில் அடிதடியே நடந்தாலும் கூட உள்ளே நீரின் இரைச்சலை தவிர ஒன்றுமே கேட்காது. எல்லை மீறி வந்து ஆண்கள் தொடும் அபாயமும் அந்த பகுதியில் இருக்காது.

அருவியில் இருந்து திரும்பிய பிறகு பார்த்தால் தலையில் வைத்த எண்ணெய் காணாமல் போயிருக்கும். பிரபஞ்சம் நம் மனத்துடன் மட்டுமலல்லாமல் உடலுடனும் உரையாடும் அற்புத தருணமது. மலையில் இருந்து அருவியாய் இறங்கி வரும் நீருக்கென்று ஒரு பிரத்யேக வாசமுண்டு. அது இயற்கையின் ஆதி வாசம். சருகுகளிலும் பாறைகளிலும் உருண்டோடி கரடு முரடான கற்களையே அவை கூழாங்கல்லாய் மாற்றி விடும் போது புறமும் அகமும் குப்பையை தேக்கி வைத்திருக்கும் மனிதனை அது புடம் போட்டு விடாதா என்ன. குளித்தல் என்பது உடம்பை குளிர்வித்தல் என்பதே ஆகும், அதுவே பின்னாளில் குளித்தலாக மறுவி போனது என்பது ஆய்வாளர் தொ. பரமசிவனின் கூற்று.

கச்சாலம் அருவிக்கு போய் சேர்ந்து குளியலுக்கு எங்களை தயாராக்கி கொண்டு நானும் குழந்தைகளும் முதலில் கிளம்பினோம், உடமைகளை பார்த்து கொண்டு கணவர் வெளியில் நின்றார். அந்த வழுக்குப் பாறையில் ஏறும் போதே வழுக்கி விழுந்தாள் மகள், நல்ல வேளை பெரிதாக அடி படவில்லை. அவளை சமாதான படுத்திவிட்டு பார்த்தால், மேலே ஏறுவதற்கான பாறைகள் அனைத்துமே பாசி படர்ந்து நம்மை பயமுறுத்தினாலும் காற்றின் குளுமையும் மேலே பட்ட மென் சாரலும் நம் புலன்களை வரவேற்றன. அங்கு நின்ற நம் காடறிதல் குழு நண்பர்கள் நாங்கள் மேலேற உதவினார்கள். நீரில் கால் வைத்ததும் துள்ளி குதிக்க தொடங்கினார்கள் குழந்தைகள். குளிர் சாதன பெட்டியில் வைத்து எடுத்த நீர் போல கடும் குளிர்ச்சியாய் இருந்தது நீர். அதற்கு மேல் அருவியில் குளிக்க போக வேறு அந்த குளிர்ந்த நீரில் அமர்ந்து கொண்டே கிட்டத்தட்ட தவழ்ந்தபடி தான் முன் செல்ல வேண்டி இருந்தது.

நாங்கள் அருவிக்குள் வரவேயில்லை என்று அங்கேயே அருவியின் குளிர்ச் சாரல் படும் இடத்திலேயே அமர்ந்து கொண்டார்கள் மகனும் மகளும். எப்படியாவது அவர்களை அருவிச் சாரலுக்குள் அழைத்து போக நினைத்த என் எண்ணம் நிறைவேறவில்லை. திரும்ப திரும்ப அழைத்ததன் பேரில் மகன் மட்டுமே அருவிக்குள் வந்தான். ஓரிரு நிமிடங்களில் அந்த நீரின் ஜில்லிப்பு தாங்க இயலாமல் தங்கையுடன் போய் அமர்ந்து கொண்டான். பொங்கும் பிரவாகமாய் பரிசுத்தமாய் விழுந்த அந்த அருவி நீரின் கீழ் நின்ற போது அது பேரனுபவமாக இருந்தது.

ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த நீரின் அதீத குளிர்ச்சி தாங்காமல் மகள் அழத் தொடங்கவே அவர்கள் இருவரையும் கரைக்கு கூட்டி வந்து விட்டு மாற்றுடை கொடுத்து, சற்றே குழந்தைகளை ஆசுவாசப் படுத்தினோம். அங்கே முகம் சுணங்கி நின்ற மகளை அணைத்த தேக்கன், "ஏன்டா கண்ணு, அருவில குளிக்கலையா ஏன் சோகமா இருக்கீங்க ?" என்றார் கனிவுடன், "இல்ல தாத்தா தண்ணி ரொம்ப சில்லுனு இருக்கு, இதுல எப்படி குளிக்க முடியும். ஆமா எப்படி இந்த தண்ணி மட்டும் இவ்வளவு சில்லுனு இருக்கு ?" என்று கேள்வி எழுப்பினாள். "அதுவா கண்ணு இது மன்னவன் சோலைனு சொல்ல கூடிய அடர்ந்த சோலைக் காடுகளில் இருந்து உருவாகிற நீர். அங்க மழை பெய்யும் போது அந்த பிரதேசத்துல இருக்க செடிகள், புற்கள், எல்லாம் அடர்வா இருக்கதால மழை நீரை தேக்கி வச்சிருக்கும், பிறகு தான் அந்த நீர் இப்படி அருவியாவும் சுனையாவும் ஓடி வருது. அதனால சோலை காடுகளில் உள்ள குளிர்ச்சி அப்படியே இந்த நீருக்குள் இறங்கி அது அவ்வளவு சுத்தமாவும் குளிர்ச்சியாவும் வரும். இதே கீழ கொஞ்சம் தூரத்தில் இருக்கிற தூவானம் அருவியில இந்த அளவுக்கு குளிர்ச்சி கிடையாது காரணம் என்னென்னா, கச்சாலம் அருவி தான் சோலை காடுகளுக்கு மிக நெருக்கமா இருக்கு" என்றார். எல்லா கேள்விகளுக்கும் பதில் வாசி இருக்காரே என்று வியந்து கொண்டோம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தில் கொஞ்ச நேரம் மட்டுமே குளித்தது போதாது மீண்டும் ஒருமுறை கணவருடன் அருவிக்குள் சென்றால் என்ன என்று தோன்றி உடனே வழுக்கு பாறைகளை லட்சியம் செய்யாமல் கிளம்பிவிட்டேன். இந்த முறை எந்த கவலையும் இல்லாமல் அருவியின் அந்த குளிர் நீரில் திளைக்க முடிந்தது, ஒவ்வொரு செல்லும் புத்துணர்வு கொண்டு புலன்கள் மகிழ்ந்தன. உடல் மெல்ல மெல்ல தன் எடையை இழந்து, சட்டென்று விலாக்களில் சிறகு முளைத்து ஏகாந்த பெரு வெளியில் பறப்பது போல தோன்றிய எண்ணங்கள் மனதை பரவசத்தில் ஆழ்த்தின. நீரின் கரையும் தனமையை நீர்மை என்று கூறுவார்கள், இந்த நீர் நம் கவலைகளையும் மன அழுத்தத்தையும் கரைத்து விடுவதால் தான் நமக்கு இந்த பரவசம் வாய்க்கிறதோ! ஆலங்கட்டிகள் போல கனமாக விழுந்த அந்த நீர் திவலைகள் நம்மை திகைக்க செய்தது. குற்றாலத்திலோ, அகஸ்தியர் அருவியிலோ அல்லது மணிமுத்தாரிலோ கூட இவ்வளவு கனமான, தூய்மையான நீரை நான் கண்டதில்லை.

நீருக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கும் தவளைகள் அதிகம் நீரை அருந்துவதில்லை என்கிறார்கள், நமக்குள் இருந்த தாகமெல்லாம் ஒரு நொடியில் தீர்ந்து போனது, உள்ளும் புறமும் நதி நிறைந்து வழிந்தது. மனம் ஒரு ஆழ்ந்த அமைதியை தத்தெடுத்தது. அந்நேரத்தில் மழையின் திவலைகள் சேர்ந்து கொள்ள அது ஒரு சுகானுபவமாக இருந்தது. அருவியில் இருந்து எங்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியவில்லை நீரில் அமிழ்ந்து இன்ப லாகிரியில் ஆழ்ந்திருந்தோம், ஆனால் பசி எங்களை கரையேற்றியது. பால்யங்களில் இப்படி கரையேறியவுடன் ஆச்சி தூக்கு வாளியில் கொண்டு வந்து தரும் எலுமிச்சை சோறும், தேங்காய் துவையலும், கூழ் வத்தலும் அமிர்தமாய் சுவைக்கும். அங்கிருந்து நேராக கிளம்பி காந்தளூரில் எங்களுக்காக தயாராய் ஒழுங்கு செய்யப்பட்ட தங்கும் இடத்திற்கு வந்து உணவுண்டு இளைப்பாறினோம், பிறகு நாங்கள் பார்த்தது காந்தளூரின் தனித்துவமான ஒரு இடம், அது என்னவென்று அடுத்த வாரம் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம் ......