தொடர்கள்
தமிழ்
அமிழ்தமிழ்து தமிழமிழ்து 9 : “கான மயிலாட...” – மோகன் ஜி

20260113090725698.jpg

'கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத்-தானுந்தன்

பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி.' எனும் செய்யுள்,

தமிழில் படித்த யாவருக்கும் மனப்பாடமாகத் தெரியும். மூதுரையில் ஔவையார் சொன்னது என்று படிக்கிறோம். சிலர் 12 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்கிறார்கள்.

முறையாகக் கற்றுணராமல், கற்றோர் நிறைந்த சபையில் உளறும் அறிவிலியை, மயிலைப் பார்த்து ஆடமுயலும் வான்கோழிக்கு ஒப்பிடுகிறார். அதாவது மேம்பட்டவர்களை நகலெடுத்து, அவர்கள் போலவே செய்தாலும், அவர்களின் உண்மை முகம் வெளிப்பட்டு அவமானப்பட நேரிடும் என்று அர்த்தம். ஈயத்தைக் கண்டு இளிக்கும் பித்தளை.

ஒருவரிடமிருந்து சில யுக்திகளைக் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்ளத்தான் வேண்டும் கூட.

ஆனால், அதைத் தன் பாணியில் உள்ளுக்குள்ளேயே வளர்த்து வெளிப்படுத்தத் தெரிய வேண்டும்.

தனக்கென்றவோர் தனித்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நாமும் தான் இணையத்தில் எத்தனை 'சுஜாதா'க்களை, பாலகுமாரன்களைப் பார்க்கிறோம் ! அவருடைய தாக்கம் இருக்கலாம்; அவரே தான் என்ற ஏக்கம் கூடாதல்லவா?

இன்னொன்று: ஔவையார்கள் பலபேர் இருந்திருக்கிறார்கள் என்பது ஆராய்ச்சியாளர்கள் துணிபு.

'வான்கோழி' 16 ஆம் நூற்றாண்டில் தான் துருக்கியிலிருந்து நம் நாட்டுக்கு கொண்டு வரப் பட்டதாம். அப்படியெனில் 'கானமயிலைக் கண்டு வான்கோழி, தன் பொல்லாச் சிறகை 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் விரித்திருக்க வாய்ப்புண்டு. ஆக அப்போதும் ஒரு ஔவையார் இருந்திருக்கக்கூடுமா? இல்ல அவர் வேறு ஒ...ள....வை...யா...ரா?

இல்லை போணியாகாத என் போன்ற புலவன் ஔவைக்கிழவி பேரில் இதைத் தட்டி விட்டானா??

எதுவாகினும் ஆகுக... நல்ல நயமிக்க பாடல் அது... வாழ்க்கைக்கான முக்கிய பாடம் அதிலிருக்கிறது.