
இன்றைய தமிழமிழ்தில் சிலப்பதிகாரத்தின் கானல் வரியிலிருந்து சில பாடல்வரிகளைப் பார்க்கலாம்.
மாலைக் கால மயக்கம் என்று ஒன்றுண்டு.
மெல்லக் கவிகின்ற இரவு எழுப்புகின்ற ஏக்கமும் பிரிவுத் துயரமும் காதல் வயப்பட்டோரை அதிகமாகவே பாதித்து விடுகிறது. அதுவும், தலைவனைப் பிரிந்த பிரிவாற்றாமையால் உறக்கம் ஒழிந்து நைகின்ற தலைவியின் நிலை சொல்லத் தரமன்று.
கானல் வரியில் இளங்கோவடிகள் ஒரு தலைவியின் கூற்றாக அழகான உவமையுடன் பிரிவாற்றாமையைக் காட்சிப்படுத்துகிறார்.
மாலையில் கூம்பும் நெய்தல் மலர்களைக் கண்டு, தன் உறக்கமின்மையை எண்ணி தலைவி பெருமூச்செறிகிறாள். அந்த நெய்தல் மலர்களை நோக்கி தலைவி கூறுவதாக அமைந்த வரிகள் இவை :
புன்கண்கூர் மாலைப் புலம்புமென் கண்ணேபோல
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால்நீ யெய்துங் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண் டறிதியோ?
இதன் பொருளாவது ;
துன்பத்தினை அதிகப்படுத்தும் பொல்லாத இந்த மாலை வேளையில், தனிமை வாட்டி வருத்தும் என் கண்களைப் போல, பிரிவு துயரால் வருத்தம் கொண்டிடாது இருக்கும் நெய்தல் மலர்களே!
உங்கள் இதழ்களைக் குவித்து உறங்குவது போலும் காணப்படுகிறீர்கள்.
இனிய மதுவினை ஏந்திய நெய்தல் மலர்களே!
(கள் மாந்தியவர் போன்ற துயில் மயக்கம் உங்களுக்கு!)
உங்கள் துயிலின்போது காணும் கனவிலேனும், கொடிய மனத்தினனாக கானலில் வராதிருக்கும் எம் தலைவனைக் கண்டால் எனக்கு உரைப்பீர்களாக!
இந்தப் பாடலில் தலைவி நெய்தல் மலரையொத்த தன் விழிகள் உறங்காதிருப்பதையும் துயிலின்மையால் கனவிலேனும் தலைவனை காணும் வாய்ப்பின்றி துன்புறுவதையும் குறிப்புணர்த்துகிறாள்.
என்னவோர் நயம்?!
இன்று நம் பாடு பரவாயில்லை. ஆளாளுக்கு அலைபேசி வைத்திருக்கிறோம். காதலர் உரையாடவும் காணொளி அழைப்பில் பார்த்துப் பேசிக் கொள்ளவும் முடிகிறது.
அதனால் தானோ என்னவோ ,
காதலின் பிரிவாற்றாமையும்
காத்திருப்பின் வேதனையையும்
நாட்கள் கடந்த சந்திப்பில் அடைகின்ற சுகத்தையும் நாம் அறியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

Leave a comment
Upload