
250 வருடங்களுக்கு முன்னர் சிவஞான ஸ்வாமிகள் என்ற துறவியார் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த தமிழ் புலவரும் கூட. திருவாவடுதுறை ஆதீனத்து மடத்தில் தமிழ்ப் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார்.
ஒருநாள் இவர் மாணாக்கர்களுக்கு இலக்கண வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மடத்தின் சமையல்காரர்,
‘’ இன்றைக்கு மதியம் என்ன சமைக்கட்டும்?” என வினவினார்.
சிவஞான ஸ்வாமிகள் அவரிடம், ‘சற்றே துவையல் அரை’ என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு பாடம் சொல்லலானார்.
மீண்டும் சமையற்காரரை அழைத்து, ‘தம்பி ஒரு பச்சடி வை’ என்று கூறி வகுப்பைத் தொடர்ந்தார்.
மறுபடியும் சமையல்காரரிடம், ‘வற்றல் ஏதேனும் வறுத்து வை’ என்றார்.
சமையல்காரரோ, ‘வற்றல் எண்ணெய் ஆயிற்றே? உங்களுக்கு ஆகாதே’ என்று கூற,
‘குற்றமில்லை’ என்று சிரித்தபடி, ‘காயமிட்டு கீரை கடை’ என்றும் சொன்னார்
தொடர்ந்து ‘ கம்மெனவே மிளகுக் காயரைத்து வைப்பாய் கறி’ என்று சொல்லி முடித்தார்.
அந்த சமையல் கலைஞரும் தமிழறிந்தவர் ஆதலால், சுவாமிகளின் கூற்றை ஒருசேர யோசித்தபோது, அவர் சொன்ன வரிகள் யாவுமே அழகான வெண்பாவாக அல்லவா அமைந்துவிட்டது என்றுணர்ந்தார்.
அதைப் பார்ப்போம் ;
சற்றே துவையலரை தம்பியொரு பச்சடிவை;
வற்றலே தேனும் வறுத்துவை;--குற்றமிலை;
காயமிட்டுக் கீரைகடை; கம்மென வேமிள
காயரைத்து வைப்பாய் கறி."
இதில்,’ சற்றே’ என்றதில், சிறிது துவையல் அரைக்க சொன்னார்.
‘காயம்’ என்பது பெருங்காயத்தையும்;
‘கம்மெனவே’ என்பது மணக்க மணக்க என்றும் ;
‘மிளகுக் காயரைத்து’ என்றது மிளகாயை அரைத்து என்றும் பொருள் தரும்.
சமையல் ‘மெனு’விலும் கூட மினுமினுக்கும் வெண்பா!

Leave a comment
Upload