தொடர்கள்
கதை
சல்யூட் - பா அய்யாசாமி

20260506001857855.jpeg

அந்த வண்டியை நிறுத்துங்க...என தனது உதவியாளர்களை ஏவினார் வாகனச் சோதனையிலிருந்த
SI முருகன்.

கையைக்காட்டி வாகனத்தை சோதனைச் செய்வதற்காக
இடது புறத்தில் ஓரங்கட்டினர் உதவியாளர்கள்.

கொஞ்சம் டிக்கியைத் திறங்க என்ற SI முருகனிடம் தனது ஆர்மி ஐடி கார்டைக் காட்டினார் நெடுமாறன்.

அதிருக்கட்டும் சார்.. ஜஸ்ட் எலக்சன் பார்மாலிட்டிதான் என்றவர் காரின் டேஷ்போர்டை திறங்க என்றார்,காரின் பின்சீட்டில் உள்ள ஜூட் பேக்கை விலக்கிப் பார்த்ததில் சோப்பு, உள்ளிட்ட மளிகைப் பொருட்களுடன் மது பாட்டில்கள் ஐந்தும் இருந்தன.

சார் கொஞ்சம் கீழே இறங்குங்க என்றார் SI

No,என்றவர் தனது கார்டை மீண்டும் காண்பித்து காரை விட்டு இறங்குவதற்கில்லை என்றார் நெடுமாறன்.

எலக்சன் டைம் சார் இது. இப்படி எடுத்துப் போவது தப்பு என்றார் Si முருகன்.

சார் நான் ஒன்றும் மறைமுகமாக பாண்டியிலோ,
காரைக்காலிலோ வாங்கலை,
எங்களுடைய மிலிட்டரி கேண்டீன்லே வாங்கியிருக்கேன். அதற்கும் என்கிட்டே பர்மிட் இருக்கு என்றார்.

அதற்காக இத்தனை பாட்டீல் வாங்குவீங்களா ?! என்று தொடர்ந்தார் Si

ஹலோ! அது எங்கள் விருப்பம் என தெரிவித்ததோடு, வேண்டுமென்றால் ஒரு பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள், அதற்காகதானே இத்தனைப் பேச்சு என்றதும்,
முருகனுக்கு கோபம் சுர்ரென்று தலைக் கேறியது.

வாகனச்சோதனையில் தன் கூடவிருந்த மத்தியக் காவல் படையினர்

"எ சப் சல்த்தாகே சார் உனேசல்னேதோ" என்றனர்.

மதிய நேரம் ஏப்ரல் மாத கடும் வெயில் நேரமாகையால், தன்னை அடக்கி கொண்டு, உங்கள் அட்ரஸ் கொடுத்து விட்டுப் போங்க...என செல்ல அனுமதி கொடுத்தார்.

மனத்தளவில் இப்படி காயப்படுத்திவிட்டாரே, மிலிட்டரி காரர்களே இப்படித்தானா?
லீவில் ஊருக்கு வந்தாலே தனது அரசாங்க வேலைகள் உடனே முடிந்தாகணும், வேலை தாமதமானால் தன்னை அலட்சியப் படுத்துவதாக நினைத்து வருந்துவார்கள். இப்படி நிறைய அனுபவங்களை முருகன் தனது பணியில் சந்தித்திருக்கின்றார்.

அவர் எழுதிக் கொடுத்த விலாசத்தைப் பார்த்தவர்,வசிப்பது நம்ம ஏரியாதானா! என்று பார்த்து சமாதானமானர் Si முருகன்.

சட்டமன்றத் தேர்தல் முடிந்த மறு நாள், தனது காவல் நிலையப் பணியில் இருந்தார் Si முருகன்.

ரானுவ சீருடையில் நிலையத்திற்கு வந்த நெடுமாறனைக் கண்டதும், உட்காருங்கள் என்றார் Si முருகன்.
நான் ஆய்வாளரைப் பார்க்கவேண்டும் என அதிகாரமாகச் சொன்னதும்,

ஏன் எங்ககிட்டேயெல்லாம் சொல்லமாட்டீங்களா?! கேட்டார் முருகன்.

வீட்டில் நகைகள் திருட்டுப் போய்விட்டது புகார் கொடுக்கணும் என்றார் நெடுமாறன்.

எப்போ நடந்தது?
நேற்று இரவு


நீங்க எங்கே போயிருந்தீங்க ? என கேட்டதும்

ஓட்டு போட எங்கள் கிராமத்திற்குப் போயிருந்தோம் என்றார் நெடுமாறன்.

என்னவெல்லாம் காணலை,எத்தனை பவுன்,தொகை எல்லாம் எழுதிக் கொடுங்க நடவடிக்கை எடுக்கிறோம் என்றார் Si முருகன்.

நீங்கள் பழசை மனத்தில் வைத்துக்கொண்டு வேண்டுமென்றே தவிர்க்கிறீர்கள்,பிறகு நான் எங்கள் மேலிடத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன், FIR போட்டு ரசீதைக் கொடுங்கள் என மிரட்டியதும், நான் என்ன முடியாதுனா சொல்கிறேன், டீடெய்லா எழுதிக் கொடுங்கனுதானே சொல்கிறேன் என்றவர்,

" கொடுங்கள், நாளைக்கு வாங்க ரசீது வாங்கிக்கலாம் என்றார் பொறுமையாக.

மறுநாள் ரசீதைக் கேட்டு வந்த நெடுமாறன், காவல் நிலையத்தில் எழுத்தரைத்தவிர யாருமில்லாததைக்
கண்டு கோபமுற்று புகார் அளிக்க உதவி கண்காணிப்பாளரிடம் சென்றவரை,

நான் ஆய்வாளரிடம் விரைந்து நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன் நீங்கள் ஆய்வாளரைப் பாருங்கள் என அவர் திருப்பி விட்டார்.

மன உளைச்சல் ஏற்பட்ட நெடுமாறன் இன்று Si முருகனிடம் எப்படியாவது ரசீதை வாங்கிடவேண்டும் என்று முடிவோடு நிலையத்தில் வந்து அமர்ந்திருந்தார்.

நாங்க ஒன்றும் சும்மா இல்லை சார், நாட்டிற்காக எல்லையில் இருந்து தீவிரவாதிகளிட
மிருந்து நாட்டைக் காக்கின்றோம், நீங்கள் என்னடன்னா உள்ளூர் திருடர்களைப் பிடிக்க புகார் கொடுத்தால் கூட எடுத்துக்க மாட்டேங்கிறீங்க, அன்றைக்கு சோதனையின்போது கோபத்தில் ஏதோ பேசிவிட்டேன் அதற்காக என்னை பழி வாங்குவதாக நினைத்து இதை செய்யறீங்களா என தனது ஈகோவை வெளிப்படுத்தினார் நெடுமாறன்.

உங்கள் சர்வீஸை நாங்கள் வெகுவாக மதிக்கின்றோம், ஆனால் பொதுவாக நீங்கள்தான் விடுமுறையில் ஊருக்கு வந்தாலே உங்கள் அதிகாரத்தை எங்கும்,எல்லோரிடமும் காட்டுகிறீர்கள் அது ஏன்? என கேட்டார்.

அது எங்கள் உரிமை,நீங்களும் அப்படிதானே அதிகாரத்தோடத் தானே பழகுகிறீர்கள் இரண்டுமே ஒன்றுதான் என்றார் நெடுமாறன்.

தப்பா நினைக்கலைன்னா ஒன்று சொல்கிறேன் என்றவர், இரண்டு பேருமே தவளைதான் சார். ஆனால் நாங்கள் கடல் தவளைகள் என்றார் Si முருகன்.

நீங்க எதுவாவேணா இருங்க, என் புகாருகான ரசீதைக் கொடுங்கள் என்றார்.

இந்தாங்க உங்கள் நகைகள் சரியாக இருக்கிறதா என பாருங்கள் என ஒரு பொட்டலத்தைக்
கொடுத்தார் Si முருகன்.

திறந்துப் பார்த்தவர் எப்படி சார்? என ஆச்சரியமானார் நெடுமாறன்.

சார், நீங்க இருக்கிற நகர் ஏரியாவிலேதான் நானும் குடி இருக்கேன்.

உங்க வீட்டை எல்லோரும் மிலிட்டரிக்காரர் வீடு என்று பெருமையாக அழைத்து வருகின்றனர்.

நீங்கள் புகார் கொடுத்ததை ஏற்று விசாரனையெல்லாம் செய்து குற்றவாளிகளைப் பிடித்து ரெகவர் செய்தபின்னும், திருடுக்கொடுத்த வீடுன்னா சொல்வாங்க?! வீட்டின் அடையாளம் மாறி
"திருட்டு வீடும்பாங்க", சில விஷயங்களை கண்ணும் காதும் வச்ச மாதிரி முடிப்போம் சார்,

திரும்ப பெற்றுக் கொண்டதற்கு எழுதிக் கொடுத்துவிட்டுப் போங்க, மீதமிருக்கின்ற விடுமுறையை குடும்பத்தோட என்ஜாய் பண்ணுங்க சார் என்று அனுப்பி வைத்தார்.


விரைப்பாக நின்று SI முருகனுக்கு சல்யூட் அடித்து வீடு திரும்பினார் மிலிட்டரி ஹவல்தார் நெடுமாறன்.