தொடர்கள்
தொடர்கள்
முகிழும் நாமங்கள் 8 - ஜி.ஏ.பிரபா

20260505222917501.jpeg

சாம்ராஜ்யதாயிணீ

ஏகாதபத்ர –சாம்ராஜ்ய-ப்ரதா சைகாந்த பூஜிதா I

ஏதமானப்ரபா சைஜ தனேஜஜ் ஜகதீச்வரீ II

​அம்பிகை நாம் கேட்பதை எப்போதும் அளிப்பதில்லை. ஆனால் நமக்கு எது நல்லதோ அதை மட்டும்தான் அளிப்பாள்.

அவள் தரும் சாம்ராஜ்ய பதவி என்பது அரசபோக வாழ்வு அல்ல. அரசர்களால் மதிக்கப் படும் வாழ்வு.

​ஒரு குடையின் கீழ் சகல புவனங்களையும் ஆளும் சாம்ராஜ்ய பதவியை அளிப்பவள். நல்ல நடத்தை, பக்தி, குணங்கள், அனைவருக்கும் நல்லதையே நினைக்கும், செய்யும் எண்ணம் உள்ளவர்களை அந்தச் சாம்ராஜ்ய பதியே வந்து வணங்குவான்.

​முற்றும் துறந்த முனிவனுக்கு அரசன் துரும்பு. மன்னர்கள் அவர்களை வந்து வணங்கக் காரணம் தங்கள் மனதில் ஏகாந்தமாய் அம்பிகையை நிலை நிறுத்தி பூசிப்பவர்கள் முனிவர்கள். அவர்களுக்கு என்றும் பிறர் தன்னை வணங்க வேண்டும், மதிக்க வேண்டும் என்ற ஆசை கிடையாது. இருக்காது. அம்பிகை மட்டுமே அவர்களுக்கு எஜமானன்.

​அந்தர்முகமாய் அம்பிகையை உள்ளத்தில் நிறுத்தி எந்நேரமும் ஆனந்தமாய் இருப்பவர்களிடம் பூரணமாக நிறைந்து இருப்பவள் அம்பிகை. அந்தர் முக ஸமாராத்யா என்கிறது லலிதா சஹஸ்ரநாமம்.

​பரிபூரணமான பிரகாசமானவள். அவளால்தான் சந்திர சூரியர்கள் ஒளி பெறுகிறார்கள். ஒருமுறை வேத காலத்தில் அம்பிகை ரிஷிகள் முன்பு பேரொளியுடன் தோன்றுகிறாள்.

​அதுவே பிரம்மம், பரம்பொருள் என்று உணராத ரிஷிகள் நீ யார், நீ யார் என்று கேட்க, அவர்கள் இதுவா? அதுவா எனக் கேட்கும் போது அனைத்தின் வடிவமாகவும் காட்சி தருகிறாள் அம்பிகை என்கிறது ஸ்ரீதேவி உபநிஷத். ந தத்ர ஸுர்யோ பாதி என்கிறது கட உபநிஷத்.

​ஜகத் சர்வம். அசைந்து கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சம் அனைத்திற்கும் அவளே ஈஸ்வரீ. இந்தப் பிரபஞ்சமே அவள். இங்குள்ள அசையும், அசையாப் பொருள்கள் அனைத்திலும் அம்பிகையே உறைந்து நிற்கிறாள்.

​அம்மா நாங்கள் செல்வத்தை அடைவதில் இன்பம் அடைவதில்லை. செல்வத்திற்காக நல்லோர் அல்லாதவர்களிடம் சென்று அடி பணிய மாட்டோம். சம்சாரம் என்னும் பெருங்கடலில் மூழ்கி வாட மாட்டோம்.

​ஆனால் காஞ்சியில் குடி கொண்ட ஸ்ரீ காமாக்ஷியின் திருவடித் தாமரைகளை வழிபடுவதையே எங்கள் கடமையாக வைத்துக் கொள்கிறோம் என்கிறார் ஸ்ரீமூகர். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றுக்கும் ஒரே காரணமாய் இருப்பவள் பராசக்தி. அந்த சக்தியை மனதில் நினைத்தால் இந்த துக்க சாகரத்திலிருந்து விடுபட முடியும்.

​பல்வேறு கோரிக்கைகளுடன் பல்வேறு தேவதா மூர்த்திகளை உபாசிக்கிறோம். அனைத்தின் வடிவமாக இருக்கும் அம்பிகையைத் துதிப்பதன் மூலம் அவர்கள் அனைவரையும் துதித்த பலன் கிடைக்கும். இது சிறிது சிரமம் என்றாலும், எந்த ஒரு விஷயத்திலும் முதலடி வைப்பதுதான் சிரமம். அடி எடுத்து வைத்து விட்டால் அவளே நம் கை பிடித்து அழைத்துச் சென்று விடுவாள்.

​அவளின் அழகையும், அருளையும் நினைத்து விட்டால் வெகு எளிதாக அவளை முழுவதுமாக தியானிக்க முடியும். அன்னையின் அழகையே ரசித்து, தியானித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர் அமாவாசை திதிக்குப் பதிலாக பௌர்ணமி என்று கூற, அதன் மூலம் அபிராமி அந்தாதி என்னும் ஒப்பற்ற பாடல்கள் நமக்குக் கிடைத்தது.

​அம்பிகை வருவாள் என்று நம்பினார் அபிராமி பட்டார். எனவேதான் அன்னை நேரில் பிரத்யட்சமாகி அவரைக் காப்பாற்றினாள்.

​சஞ்சலம் அடையும் போது அம்பிகே என்றால் அவளே அந்தச் சஞ்சலத்தை நீக்கி, தெளிவை அளிப்பாள்.

​அன்னையே என் உயிர் போகும் தருணத்திலும் உன்னையே நினைக்கும் பாக்கியத்தை அருள வேண்டும் என்பதுதான் அவளிடம் நாம் வைக்கும் கோரிக்கையாக இருக்க வேண்டும். நம்மை இந்த மாயா உலகில் கட்டிப் போட்டிருப்பவள் அவள்தானே. எனவே அவளையே தியானித்தால் ஞானத்தை அளிப்பாள். உலகுக்கெல்லாம் படி அளக்கும் அம்பிகை நமக்கு அருள மாட்டாளா? இதையே சுந்தரர்,

​வாரிருங்குழல் வாள்நெடுங்கண் மலைமகள்

​மதுவிம்மு கொன்றைத் தாரிரும் தடமார்பு நீங்காத் தையலாள்

​உலகுய்ய வைத்த காரிரும்பொழில் கச்சி மூதூர்க் காமகோட்டம்

​உண்டாக நீர்போய் ஊறிடும் பிச்சை கொள்வதென்னே

​ஓணகாந்தன் தளியுளீரே!

என்று கேட்கிறார்.

​உலகுக்கெல்லாம் சோறு போடும் அம்பிகை, அவளை மனமுருகி தியானிக்கும் நமக்கும் அருள்வாள் என்பது சத்தியம். முப்பத்தி இரண்டு அறன்களைச் செய்பவள் அன்னை பராசக்தி. அவளை தியானிப்பதே நம் கடமையாகும்.