தொடர்கள்
வலையங்கம்
பயோ கேஸ் - அவசரத் தேவை

20260513081756622.jpeg

பயோ கேஸ் என்பது கால்நடைகளின் சாணம், விவசாயக் கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்கும் திட்டத்திற்கு பெயர்தான் இது. இந்த திட்டம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பயன்பாடு தெரிந்த சில விவசாயிகள் இதை பயன்படுத்தி பலன் அடைந்தார்கள். இந்த திட்டம் கிராமப்புற பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும், தூய்மையான எரிசக்தி, கார்பன் உமிழ்வை குறைத்து வளிமண்டலத்தை பாதுகாக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக சுற்றுச்சூழலை இது மேம்படுத்துகிறது. அருமையான திட்டத்தை மத்திய மாநில அரசுகள் மக்களிடம் பெரிய அளவில் எடுத்துச் செல்லவில்லை என்பது மிகப்பெரிய வருத்தமான செய்தி.

இன்றைக்கு ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலால் உலகப் பொருளாதாரமே நிலைகுலைந்து நிற்கிறது. எரிபொருள் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியை நம்பி இருக்கும் இந்தியாவையும் பாதித்திருக்கிறது. போர் முடிவடைந்து சமாதானம் ஏற்பட்டால் கூட இந்த பாதிப்பில் இருந்து நாம் வெளிவர பல ஆண்டுகள் ஆகும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

எனவே மத்திய மாநில அரசுகள் மீண்டும் பயோகேஸ் திட்டத்தை மக்களிடம் எடுத்து சொல்லி அதை செயல்படுத்துவதற்கான பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும். இப்போதும் சில இடங்களில் சில உண்மை விவசாயிகள் இதை பயன்படுத்தி பலன் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பனஸ் பால் பண்ணை தினமும் 100 டன் மாட்டு சாணத்தை பயோகேஸ் ஆக உள்ளூர் வாகனப் பயனாளிகளுக்கு நேரடியாக விற்கிறது.

நம்மிடம் கழிவுகளுக்கு பஞ்சமில்லை. இன்னும் சொல்லப்போனால் நமது தினசரி பிரச்சனையே இந்த கழிவுகள் தான். இந்தக் கழிவுகளை வளமாக்கும் மாற்றம் தொழில் நுட்பமும் நமக்கு ஏற்கனவே அறிமுகமானது தான். அதில் அனுபவசாலிகளும் இருக்கின்றனர். மத்திய அரசு பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க எத்தனால் கலப்பு என்பதை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதேபோல் இந்த பயோ கேஸ் திட்டத்தையும் கையில் எடுத்துக் கொண்டு அதை மக்களிடம் பெரிய அளவு கொண்டு சேர்ப்பது குறைந்த வட்டியில் கடன் உபகரண சந்தை ஆகியவற்றில் கவனம் சேர்த்தால் எரிபொருள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.