
9) முகிழும் நாமங்கள் முன்னூறு
ஏகாந்த பூஜிதாயை.
ஏக வீராதி-ஸம்ஸேவ்யா- சைகப்ராபவ சாலினீ
ஈகார ரூபா சேசித்ரீ-சேப்ஸிதார்த்த ப்ரதாயினீ.
உலகின் முதன்மை சக்தியாக விளங்குபவள் அம்பிகை. ஒரு காரியம் நடப்பதற்கு சக்தி அவசியம் எனும்போது, இந்தப் பிரபஞ்சம் எனும் மகா காரியம் நடைபெற எவ்வளவு சக்தி வேண்டும். அதை அனாயசமாக நடத்துபவள் அம்பிகை.
அவள் விரல் அசைவில் இந்தப் பிரபஞ்சம் அசைகிறது. மும்மூர்த்திகளும் அவள் கண் அசைவுக்கு காத்திருக்கிறார்கள் என்கிறது ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம். உடலை இயக்கும் உயிர் சக்தி அவள்.
அம்பிகையின் ஆற்றல் அறியாமல் பண்டாசுரன் ஒரு பெண்ணால் என் அழிவு நேர வேண்டும் என்று கேட்கிறான். பெண்ணின் வலிமை தெரியாமல், தன்னை யாராலும் வீழ்த்த முடியாது என்று மமதையுடன் திரிந்தவன். பெண் வலிமை இல்லாதவள் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டான். அவளின் சக்தி அவளின் மௌனம் என்று புரியாத மூடன்.
ஆனால் அளவற்ற சக்தி படைத்தவள் அம்பிகை. அவன் ஆட்டத்தை மௌனமாகக் கவனித்து அனாயசமாக அசுரனை அழிக்கிறாள்.
அம்பிகையின் நாமங்களை உச்சரிக்கும்போது சில ஒலி அலைகள் நமக்குள் ஊடுருவி ஒரு அதிர்வை உண்டாக்குகிறது. அது ஆற்றலாக மாறி, நம் மனதை, சிந்தனையை சீர் படுத்தி, ரத்த ஓட்டத்தை, சரி செய்கிறது. அம்பிகை அந்த சக்தியாகி நம் உடலில் நிறைந்து விடுவாள்.
பண்டாசுரனை அழித்த வீர்யம் மிக்கவள். எல்லையற்ற வீரம் படைத்த அவளே வீரர்களுக்கு எல்லாம் தலையானவள். எனவே வீரர்களால் முதன்மையாக பூஜிக்கப் பெரும் ஒப்புமை அற்ற தேவி.
ஸ்ரீ மகாமேருவை பூஜிப்பதால், பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும், வாழ்க்கையில் துயரம் என்பது இருக்காது.
அம்பிகை அடைய முடியாத ஐஸ்வர்யங்களை படைத்தவள். அளிப்பவள். பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் மூன்றாவது எழுத்தாகிய ஈகார வடிவினள். ஸ்ரீமகாதேவியின் பாத தூளியால் ஆதிசேஷன் உருவெடுத்து, பிரம்மா படைத்த பதினான்கு உலகையும் தன சிரசில் தாங்கிக் கொண்டு இருக்கிறார்.
பராசக்தி அனைத்திற்கும் புத்தி வடிவானவள். வேண்டுவர் வேண்டியவற்றை அளிப்பவள்.
“கவீந்த்ர ஹ்ருதயேசரீ பரிக்ருஹீத காஞ்சிபுரீ
நிரூடகருணாஜரீ நிகிலலோக ரக்ஷாகரீ
மன: பததவீயஸீ மதனசாஸன ப்ரேயஸீ
மகாகுணகரீயஸீ மம த்ருசோஸ்து நேதீயஸீ”
என்று புகழ்கிறார் ஸ்ரீமூகர்.
அவள் உருவத்தை எப்போதும் தியானிப்பவர்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றுபவள். அவளை தியானித்தால் நாம் என்ன வேண்டுவது என்பதையும் அவளே தீர்மானித்து விடுவாள். பகவத் பாதர் போன்ற சிறந்த ஞானிகளின் மனதில் நடமாடுகிறவள் அம்பிகை.
வெள்ளமெனப் பாயும் கருணையை மனதில் கொண்டவள். இந்த உலகத்தை காத்து ரக்ஷிக்கிறவள் என்கிறார் அவர். நம் மனோவீதிக்கு எட்டாதவள் அவள். பெரும் சிறப்பு பெற்றவள், மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்த பரமேஸ்வரனின் பத்தினி. அவளின் திவ்ய ரூபம் எப்போதும் நம் மனதில் பதிந்து இருக்க வேண்டும்.
நமக்கு அருள் புரியவே அவள் ஸ்ரீசக்ரத்தில் அமர்ந்து அருளாட்சி செய்கிறாள்.
ஸ்ரீசக்ர மேரு அம்பிகையின் சாம்ராஜ்யம். அவள் அரசாட்சி செய்யும் அரண்மனை. அனைத்து தெய்வங்களும் அமர்ந்திருக்கும் இடம் ஸ்ரீசக்ரம். எனவேதான் லலிதா சஹஸ்ரநாமம் சொன்னால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பார்கள்.
லக்ஷ்மி, சரஸ்வதி இருபுறமும் நின்று சாமரம் வீசுகிறார்கள். நவக்கிரஹங்களும் அவளை வலம் வருகின்றார்கள். அனைத்து தெய்வங்களுக்கும் தலைமை பொறுப்பில் வீற்றிருக்கும் மகாராணி அவள். மஹா சாம்ராஜ்ய தாயினி என்கிறது நாமம்.
லலிதா த்ரிசதீ படிக்கும்போது அவளிடம் கோரிக்கை என்று எதுவும் வைக்க வேண்டியதில்லை. அவளே நம் மனதில் குடியமர்ந்து, நாம் என்ன கேட்க விரும்புகிறோமோ, அதை உணர்த்தி கேட்க வைத்து விடுவாள்.
செல்வத்தை அடைவதில் எந்த இன்பமும் இல்லை. அது நிலையானதும் இல்லை. ஆனால் ஸ்ரீ லலிதா தேவியை தியானிப்பதன் மூலம்,, அவளின் திருவடிகளைத் தியானிப்பதன் மூலம், சகலவிதமான சௌபாக்கியத்தையும் பெற முடியும்.

Leave a comment
Upload