தொடர்கள்
கவிதை
இரயில் சொல்லும் பாடம்...!! - கோவை பாலா

20260513085401902.jpeg

வாழ்க்கை எனும் பயணம்
வழங்கிடும் தினம் அனுபவம்...!
ஒருநாளில் இரயில் நிலையம்
படிக்கத் தந்தது ஒரு பாடம்...!

காத்திருக்கும் பயணிகள் கூட்டம்..
பார்த்திருக்கும் இரயில்கள் ஓட்டம்..!
காட்டிடும் கால அட்டவணைகள்...
பறை சாற்றிடும் புறப்படும் நேரம்...!
வெயில் மழை பாராது நாள்முழுதும்,
வந்து போகும் இரயில்கள் ஏராளம்...!

எத்தனை விதமான இரயில்கள்...!
அத்தனை மாறுபடும் ஓட்டத்தில்...!
சேரும் இடம் வேறாக இருக்கும்...!
சேரும் இடம் ஒன்றாகி இருந்தால்,
போகும் பாதை வேறாகிப் போகும்...!
காலமும் தூரமும் கணக்காகும்..!

ஓடும் இரயில் ஒன்றொன்றும்,
தனக்கென்று தடங்கள் பெறும்...!
போகும் தூரமும் நிறுத்தங்களும்
இரயிலின் வகையில் மாறுபடும்...!
கால நேரம் தனித்தனியாகி
அதன் வழியால் தாங்கி வரும்...!

நித்தம் காணும் இந்நிகழ்வுகள்,
சித்தம் யோசிக்க சில நேரங்கள்,
கற்றுத் தருகிறது சில பாடங்கள்...!

"எட்டு இருபது இரயில் முன்னமே
ஆறு மணிக்கு ஏன் வருவதில்லை"
சங்கடம் யாரும் அடைவதில்லை...!
அறிவார்கள்,அதனதற்கு தனிவழி..!
சொல்லித்தரும் வாழ்வின் நெறி..!

மனித மனம் மறந்து விடுகிறது...!
நமக்கென்று வழியும் நேரமும்,
இருக்கின்றது என்று அறிந்தால், குறித்த நேரத்தில் இரயில் போல்,
காலமும் கனிந்து கைகளில் வரும்...!

பதறிக் கொண்டு மனம் பதைக்கும்...
சுற்றியிருப்பவர் சுகம் பெறுகின்றார்...!
வெற்றி பெற்று வளம் பெறுகின்றார்...!
ஏன் தங்கிவிட்டோம் நாம் பின்னால்...?
ஏன் தாமதம் நாம் செல்ல முன்னால்...?

ஒப்பிடத்தான் வேண்டுமோ...?
இரயில் சொல்லும் பாடம் வேறு...

தாமதம் என்று ஒன்றும் இல்லை...
அவரவர் பாதை அவரவர் பயணம்...!
அடையும் இலக்கு வேறுவேறாக,
பாதையும் பயணமும் நீளமாகிடும்..!
அதிவேகம் சொல்லாத பாடங்களை,
அதிக நிறுத்தங்கள் கற்பிக்கலாம்...!

நிம்மதியாக சுவாசம் விடுங்கள்...!
வேகம் சற்றே குறைந்தாலும்,
நிறுத்தங்கள் சில வந்தாலும் ,
தாமதம் இல்லை பயணத்தில்...!
உங்கள் இலக்கில் உங்கள் பயணம்...!
கேளுங்கள் இரயில் சொல்லும் பாடம்...!