தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மீக பணியாற்றிய சர் தாமஸ் மன்றோ. ..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Sir Thomas Monro, who worked spiritually. ..!!

மேஜர்-ஜெனரல் சர் தாமஸ் மன்றோ ஒரு ஸ்காட்லாந்து போர் வீரரும், கிழக்கிந்திய கம்பெனியின் காலனித்துவ நிர்வாகியும் ஆவார். 1820 முதல் 1827 வரை மெட்ராஸ் (சென்னை) மாகாணத்தின் ஆளுநராக இவர் பணியாற்றியவர். ஆங்கிலேயர் கால இந்திய வரலாற்றில் தங்களின் சொந்த லாபத்திற்காக மட்டும் அல்லாமல், இந்திய மக்களின் நலனுக்காகவும், கலாச்சாரத்திற்காகவும் உழைத்த மிகச் சில அதிகாரிகளில் முதன்மையானவர். இவர் மத வழிபாட்டுத் தலங்களின் மரபுகளை மதிப்பவராகவும், மத சுதந்திரத்தில் தலையிடாதவராகவும் விளங்கினார். மற்றும் மாகாணத்தின் கவர்னராக இருந்த இவர், மக்களால் அன்போடு 'மன்றோலய்யா' என்றும் அழைக்கப்பட்டார்.

Sir Thomas Monro, who worked spiritually. ..!!

ஆன்மீக ரீதியாக, திருப்பதி ஏழுமலையானுக்குச் செய்த பிரசாத சேவை (மன்றோ கங்காளம்) மற்றும் ஸ்ரீ ராகவேந்திரரின் மந்த்ராலய நிகழ்வு ஆகியவை இன்றும் வரலாற்றுச் சான்றுகளாகப் பேசப்படுகின்றன.

'மன்றோ கங்காளம்'

Sir Thomas Monro, who worked spiritually. ..!!

ஒரு சமயம் சர் தாமஸ் மன்றோ கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். அவரது நம்பிக்கைக்குரிய இந்து மத செயலாளர், திருப்பதி ஏழுமலையானின் பிரசாதமான வெண்பொங்கலைச் சாப்பிட்டால் வலி குணமாகும் என்று கூற, அதன்படி மன்றோ வேண்டிக்கொண்டு பிரசாதத்தை உண்டவுடன், அவரது நீண்ட நாள் வயிற்று வலி முற்றிலும் பூரண குணமாகியது. இதற்கு நன்றிக் கடனாக, அன்றைய சித்தூர் மாவட்டத்தில் இருந்த 'கொட்டவாயுலு' என்ற கிராமத்தின் ஒட்டுமொத்த நில வருவாயையும் திருப்பதி கோயிலுக்கு நிரந்தர மானியமாக எழுதி வைத்தார். அந்த வருமானத்தைக் கொண்டு, தினமும் ஒரு 'கங்காளம்' (பெரிய பித்தளை அல்லது வெண்கலப் பாத்திரம்) நிறைய நெய் கலந்த வெண்பொங்கல் தயாரித்து பெருமாளுக்கு நிவேதனம் செய்ய உத்தரவிட்டார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் இன்று வரை தினசரி காலையில் பெருமாளுக்குப் படைக்கப்படும் ஒரு சிறப்பு வெண்பொங்கல் பிரசாதமே "மன்றோ கங்காளம்" என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ ராகவேந்திரர் மீதான பக்தி மற்றும் மந்த்ராலய நிகழ்வு:

Sir Thomas Monro, who worked spiritually. ..!!

1800-ஆம் ஆண்டு பெல்லாரி மாவட்ட ஆட்சியராக மன்றோ பணியாற்றியபோது, மந்த்ராலய ராகவேந்திர சுவாமி மடத்திற்குரிய நிலங்களை ஆங்கிலேய அரசு கைப்பற்ற முயன்றது. இது குறித்து நேரில் விசாரிக்கச் சென்ற மன்றோ, தனது தொப்பியையும் காலணியையும் கழற்றிவிட்டு மடத்திற்குள் சென்றார். அப்போது, சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பே ஜீவசமாதி அடைந்திருந்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள், மன்றோவிற்கு மட்டும் நேரில் தோன்றி ஆங்கிலத்தில் பேசினார். இந்த அதிசய நிகழ்வுக்குப் பின், மன்றோ மடத்தின் நிலங்களை அரசுடைமையாக்கும் உத்தரவைத் திரும்பப் பெற்று, மடத்திற்குச் சாதகமான ஆணையைப் பிறப்பித்தார். இந்த உத்தரவு இன்றும் மெட்ராஸ் கவர்ன்மெண்ட் கெசட்டில் (Madras Government Gazette) பதிவு செய்யப்பட்டுப் போற்றப்படுகிறது.

சர் தாமஸ் மன்றோவின் சிறப்பம்சங்கள்:

Sir Thomas Monro, who worked spiritually. ..!!

மே 27, 1761 அன்று ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பிறந்தார். 1780-ல் ஒரு சிப்பாயாக இந்தியா வந்த இவர், தனது திறமையால் மெட்ராஸ் மாகாணத்தின் கவர்னராக உயர்ந்தார்.
இவர் ஜமீன்தார்கள் போன்ற இடைத்தரகர்களை நீக்கிவிட்டு, நிலவரியை நேரடியாக விவசாயிகளிடமே வசூலிக்கும் முறையைக் (ரயத்துவாரி முறை) கொண்டுவந்தார்.
வருவாய் வசூலை முறைப்படுத்த மாவட்டங்களில் 'ஆட்சியர்' (Collector) பதவியை உருவாக்கினார்.
மெட்ராஸ் மாகாணத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்விமுறை குறித்த முதல் கணக்கெடுப்பை நடத்தி, கல்வி வளர்ச்சிக்கான அடித்தளத்தை ஏற்படுத்தினார்.
தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளைக் கற்றுக்கொண்டு, மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்த்து வைத்தார்.
இந்தியக் கலாச்சாரத்தை மதித்து, மக்களின் நலனுக்காகவே வாழ்ந்ததால், மக்கள் இவரைத் தங்களின் குடும்பத் தலைவர் போல் மதித்து 'மன்றோலய்யா' என்று அன்போடு அழைத்தனர்.

சர் தாமஸ் மன்றோவின் வெண்கலக் குதிரை சிலை:

Sir Thomas Monro, who worked spiritually. ..!!

1827-ல் காலரா நோயால் பாதிக்கப்பட்டு மன்றோ காலமானார். அவரது நினைவாகச் சென்னை அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடு) குதிரை மீது சேணம் இல்லாமல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் சர் தாமஸ் மன்றோவின் சிலை, லண்டன் பிரான்சிஸ் சாண்ட்ரி (Francis Chantrey) என்ற சிற்பியால் வடிவமைக்கப்பட்டு 1839-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 180 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்பினைக் கொண்ட இச்சிலை மட்டும் பொதுமக்கள் மத்தியில் மன்றோவுக்கு இருந்த நன்மதிப்பு காரணமாக இன்றுவரை அதே இடத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.