
பாரதிராஜா என்னும் மகா கலைஞர் மறைந்தார். எழுத்தில் எழுதி தீர்த்து விட முடியாத திரைக்காவியங்களைப் படைத்த இயக்குனர் இமயம் அவர்.
சென்னை நகர ஸ்டுடியோக்களில் அடைபட்டு மூச்சு முட்டி இருந்த தமிழ் சினிமாவை, தென் கிராமங்களுக்கு எடுத்துச் சென்று இயற்கைக் காற்றைச் சுவாசிக்க செய்தார். தேனி பக்கம் வீசும் தென்மேற்கு பருவக்காற்று கொணரும் இன்பச் சாரலை நம் நெஞ்சில் தெளித்தவர் அவர்.
கிராமங்களை , அங்கே வாழும் மனிதர்களை, அவர் தம் உணர்வுகளை, காதலை, கோபத்தை தமிழ் மக்களுக்கு திரையில் காட்டியவர் பாரதிராஜா. அவர் மறைந்தாலும் அவரது திரைப்படங்களும் , கதாபாத்திரங்களும் நம் நெஞ்சில் என்றும் நீங்காத இடம் பிடித்தவர்கள்.
குறிப்பாக பாரதிராஜாவின் பெண் கதாபாத்திரங்களை நாம் மறக்க இயலாது.
பாரதிராஜாவுக்கு முன்பே அல்லது சமகாலத்தில் பாலச்சந்தர் அறிவும், ஆளுமையும் மிக்க பெண் கதாபாத்திரங்களைத் திரையில் காட்டினார். இவரது நாயகிகள் அவர்களுக்குச் சற்றும் குறைந்தவர்கள் அல்லர்.காதல் என்னும் உன்னத உணர்வை , உயிரென கொண்டவர்கள். காதலுக்காக சாதி மத எல்லைகளை அழித்தவர்கள். தனித்துவம் கொண்டவர்கள்.
பாரதிராஜாவின் திரை நாயகிகள் அழகிகள், காதல் உணர்வில் ததும்பும் அழகிகள். ஒரு கையால் முகம் மூடி, சூரிய காந்திப் பூவுடன் முகம் மலரும் தேவதைகள்

பதினாறு வயதினிலே 'மயிலு' ஸ்ரீதேவி. வெண்ணாடை உடுத்தி ,காதோரம் மஞ்சள் பூ மினுங்க ஒரு புத்தம் புது மலராக ஜொலித்தவர். ஐம்பதாண்டு கடந்த பின்னும் இன்னும் மயிலின் மீதான காதல் மறையவில்லை. பதின்பருவக் காதலில் விழுந்தாலும், உடனே விழித்துக் கொண்டு 'சப்பாணி'க்காக காத்திருந்தவள். பின்னொரு நாளில் சாரதாவாக வேற்றுரு எடுத்து சிகப்பு ரோஜாக்களில் பரிமளித்தார் .
'கிளிப்பேச்சு' பேசி வந்த ரயில் ராதிகா. பாஞ்சாலியாக , 'கோவில் மணி ஓசை தன்னை கேட்டு ஓடி வந்த நாயகி. கிராமத்து மூட நம்பிக்கையை புறக்கணித்து , காதலனுடன் கிழக்கே போன ரயிலில் ' சென்றவர்.
அவரே சில ஆண்டுகளுக்குப் பின்னர் 'கிழக்குச் சீமை ' விருமாயி யாக வேறு அவதாரம் எடுத்தார் ."தென்கிழக்கு சீமையிலே , செங்காத்து பூமியிலே ஏழைப்பட்ட சாதிக்கொரு ஈரமிருக்கு' என்றால் இம்மண்ணில் இன்னும் காயாத தங்கைப் பாசத்தைத் திரையில் காட்டி மற்றும் ஒரு பாசமலராக முகிழ்ந்தார்.

ஓயாத அலைகளில் சுடர் விடும் முகம் மேரி , ராதா. பதின்பருவக் காதலை பேசிய அப்படம் இன்னும் என் விமர்சனத்துக்குரிய படமாக இருப்பினும் , "விழியில் விழுந்து இதயம் நுழைந்து , உயிரில் கலந்த உறவே என்னும் பாடல் அந்நாள் காதலர்களின் தேசிய கீதம் .

ராதாவுக்கென்றே அமைந்ததை போன்ற பாத்திரம் 'முதல் மரியாதை ' குயிலி . முதிர்வயது ஆணின் மேல் உள்ள ஈர்ப்பை கண்ணியமாக காத்து, அவர் குடும்ப மானம் காக்க சிறை செல்லும் பக்குவமான வேடத்தில் 'தூள் ' கிளப்பி இருப்பார் ராதா. 'மனசுக்குள் காத்தாடி விடும் பாடல்களும் காட்சிகளங்களும் தமிழ்த்திரைக்குப் புதிதாக இருந்தன.

ஜெனிஃபர் டீச்சரை யாரால் மறக்க முடியும் ? நொடிக்கொரு பாவம் காட்டும் முகம் கொண்ட ரேகா வின் சிலிர்க்க வைக்கும் நடிப்பை எப்படி மறக்க முடியும்? கடலோர கவிதைகளில்' முட்டம் கடற்கரை'யே மற்றுமொரு கதாநாயகி ஆகவே மாறி நடித்தது அல்லவா.?
"பொத்தி வச்ச மல்லிகை மொட்டு , பூத்திருச்சி வெட்கத்தை விட்டு , என்று பூத்த பூ போன்ற ரேவதி, பேசி பேசி ராசியான படம்தான் மண்வாசனை. அவரது அழகும் நடிப்பும் , நளினமும் அருமையான திரைக்கதையும் படத்தை வெற்றிப்படமாக்கியது.

அதே ரேவதி , அதே பாண்டியன் நாயகி , நாயகனாக நடித்த ' புதுமைப் பெண். இத் 'திரைப்படத்தில் 'சீதா' அவதாரம் எடுத்து கண்ணில் கனல் தெறிக்க நடிப்பார். தன்னைச் சந்தேகப்படும் கணவனை " நீ நினைப்போடு விளையாடுவே ,நான் நெருப்போடு விளையாடணுமா?" என்று புயலான தென்றலாய் வீட்டை விட்டு வெளியேறுவார்.
"சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி பொன் இமைகளில் தாள லயம் " என்ற கங்கை அமரனின் சுகமான பாடல் நினைவுக்கு வருகிறது .

'கல்லுக்குள் ஈரம்' இப்படத்தில் தான் தென்னகத்தின் சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியும் , அகன்ற விழியால் அகிலம் அளந்த அருணாவும் அறிமுகம் செய்யப்பட்டார்கள் . நடிப்பின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட பாரதிராஜா தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட படமும் இதுவே.
"காதல் பெரிதா ,வேதம் பெரிதா ?" என்று சிந்தித்த வைதேகி அமலா என்னும் அழகியின் வேதம் புதிது படம் இந்நாளிலும் சாதியத்தை அசைக்கும் வசனங்களைக் கொண்ட படம்.

" வான் மேகங்களே, வாருங்கள் வாழ்த்துங்கள்" என்று வந்த புதிய வார்ப்புகள் ரதியும் , "பூங்கதவைத் தாள் திறக்க வைத்த ரோகிணியும் பாரதிராஜாவின் பெருமைக்குரிய அறிமுக நாயகிகள். அவர் மகன் மனோஜ் உடன் "சொட்ட சொட்ட நனையும் தாஜ்மகாலில்" ரியா சென்னும் . கருத்தம்மாவின் ராஜஸ்ரீயும் ,மகேஸ்வரியும் நம் நினைவை விட்டு நீங்காதவர்கள் . 'புது நெல்லு புது நாத்து' சுகன்யா , நாடோடி தென்றல் 'ரஞ்சிதா' பற்றியெல்லாம் தனித்தனியாகவே எழுதி வைக்கலாம்

கதாநாயகிகள் என்றில்லை , பாரதிராஜாவின் படத்தில் வரும் பெண் பாத்திரங்கள் எல்லோருமே இழையிழையாக கூடுதல் கவனத்துடன் இழைத்து செதுக்கப்பட்டவர்கள்.

பதினாறு வயதினிலே காந்திமதி , அலைகள் ஓய்வதில்லை சிலுக்கு , கமலா காமேஷ் , கடலோர கவிதைகளில் ரஞ்சனி, சிகப்பு ரோஜாக்கள் மற்றும் முதல் மரியாதையில் வடிவுக்கரசி. இவர்களில் காந்திமதி ,பாரதிராஜாவின் பல திரைப்படங்களில் தன் முழு திறமையைக் காட்டி நடித்தவர்.
பாரதிராஜாவின் இயக்கம், இளையராஜாவின் இசை , கண்ணனின் காமெரா , செல்வராஜின் வசனம் , இதமான கிராமிய சூழல் என்று பாரதிராஜாவின் படங்கள் வெற்றி பெற பல காரணிகள் இருந்தாலும் , அவர் அறிமுகம் செய்த நாயகியர் அப்படங்களைத் தம் இளந்தோள்களில் சுமந்தனர் என்பது நிஜம்..
காலங்களைத் தாண்டி நிற்கும் அத்திரைக் காவியங்கள் என்றென்றும் அவர் திறமையை பேசும்.

Leave a comment
Upload