
"உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்" கன்னதாசனின் வரிகளில் பாடல் இசைத்ததும்,
" ருக்கு வேட்டைக்காரன் வந்துட்டார் என்று கத்தினார் அய்யாசாமி
போங்கோ, நிற்கச் சொல்லுங்கோ என குரல் பதிலாய் ருக்குவிடமிருந்து வந்தது.
வந்தது காய்கறிவண்டி சிவம். "ஏம்பா இப்படி தினம் லேட்டாக வந்தால் எப்போ காய் வாங்கி, எப்போ சமைக்கிறது என ருக்கு கேட்டதும்,
அம்மா.. காலையிலே வீட்டிலிருந்து நேரத்திக்கு கிளம்பிடறேன், ரோடே சரியில்லை, விழுந்த தக்காளி, தேங்காய், வெங்காயத்தைப் பொறுக்கி வச்சு வண்டியைத் தள்ளிக்கொண்டு வருவதற்குள் லேட்டாகுது என காரணம் சொன்னார்.
25 வருடமாக நாங்க இங்கேதான் இருக்கோம்,இத்தனை மேடும் பள்ளமுமா இந்த நகர் இருக்கு. போடாத மனு இல்ல, வீட்டு வரி தண்ணீ வரி எல்லாம் கட்டுகிறோம், பஞ்சாயத்திலே நிதியே இல்லைனு சொல்றவங்க,
உன் செளகரியத்திற்கு போடுவாங்களா என கேட்டார் அய்யாசாமி.
ஒருநாளாவது நானும் கீழே விழாமல் காய்களை எடுத்து வரணும்னுதான் பார்க்கிறேன் முடியலை என அலுத்துக்கொண்டார் அதே நகர் பகுதியில் வசிக்கும் காய் வியாபாரி வண்டிக்காரர் சிவம்.
அதெல்லாம் வாய்ப்பில்லை, நீயே எம்எல்ஏ ஆனாதான் உண்டு என்று அய்யாசாமி சொன்னதும்,
அதுக்கு எங்க தளபதி வினய்தான் மனசு வைக்கணும் என்றபடி நகர்ந்தார் வண்டிக்காரர் சிவம்.
சிவம் தீவிர எம்ஜிஆர் ரசிகன், இப்போது வினயின் ரசிகர்மன்றத்திலே இருக்கிறார்.
காய்கறி வண்டியில் வருவதுதான் அவருக்கு வருமானம், படம் ரீலிசுக்கு கட்அவுட் வைப்பது, பிறந்தநாளன்று மக்களுக்கு நீர்மோர், மிட்டாய் கொடுப்பது வழக்கம்.
வழியில் இருந்த பிள்ளையார் கோவிலில் வண்டியை நிறுத்தியவர்,
"அப்பனே,நான் ஒன்கிட்டே பெரிசா என்ன கேட்கிறேன், என் வண்டி ஓட ஒரு நல்ல ரோடுதானே, அது கூட எனக்காகவா கேட்கிறேன், எங்க பகுதி மக்களுக்காகத்தானே கேட்கிறேன் என்று புலம்பியபடி வண்டியில் அடுக்கியிருந்த தேங்காயிலிருந்து நல்லது ஒன்றினை எடுத்து பிள்ளையார் சன்னதியின் முன் சிதறவிட்டுக் கிளம்பினார்.
வேண்டுதல் விநாயகரிடம் சென்றுச் சேர்ந்தது போல,அன்றைய தினமே நடிகர் கட்சி தனது வேட்பாளர் பட்டியலில் இந்த சட்டமன்றத் தொகுதிக்கு சிவம் பெயரை அறிவித்திருந்தனர்.
இந்த எதிர்பாராத அறிவிப்பில் சென்னைக்குச் செல்லக் கூட காசில்லாமல், அய்யாசாமியிடம் வந்து பணம் கேட்க, நம்பமுடியாத அய்யாசாமி, " இதோ பாரு பணம் வேண்டுமானால் கேளு உனக்கு நாங்க உதவுகிறோம், பொய் சொல்லக்கூடாது என்றார்.
ஐயோ,டீவியிலே பாருங்கோ இவன் பெயர்தான் போடறாள் என ருக்கு சொன்னதும்சந்தோசத்தில் குதித்தார் அய்யாசாமி.
" இவர் நாக்கு கருநாக்குடா சிவம்.. பார்த்தியா நேற்றுதானே சொன்னார் நீயே எம்எல்ஏ ஆனாத்தான்னு, அதான் பலிச்சுடுத்து, இப்போ வாய்ப்பு வந்திருக்கு ஜமாய் என்றாள் ருக்கு.
அதில்லே மாமி அதிலே நிறைய பிரச்சினைகள் இருக்கு என்று தயங்கினான் சிவம்.
“ வாய்ப்பு கிடைச்சிருக்கு அதிலே போய் பிரச்சனையைப் பார்க்காதே, பிரச்சனையையே உனக்கு கிடச்ச வாய்ப்பாகப்பாரு சிவம், துணிந்து போ, வெற்றியோ, தோல்வியோ கவலையேப் படக்கூடாது என பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ஏன் ருக்கு திண்ணையிலே கிடந்தவனுக்கு திடீர்னு வந்ததாம் கல்யாண யோகங்கிற மாதிரி வந்தான், ஏதெதோ சொல்லி நீயும் அவனை ஏற்றி விட்டாய், பார்ப்போம், என்னவாகப்போறதோ என கவலைக்கொண்டார் அய்யாசாமி.
சென்னையிலிருந்து திரும்பிய சிவத்திற்கு தொகுதி வேட்பாளர் டிக்கெட் கன்பர்ம் ஆகி பிரச்சாரம் ஆரம்பித்து தேர்தலும் முடிந்தது.
கடந்த இரு மாதமாக வழக்கம் போல சிவத்தால் வண்டியை ஓட்ட முடியவில்லை. வெளியே கொஞ்சம் கடனை உடனை வாங்கி சமாளித்துதான் பிரச்சார வேன் வாடகை,நோட்டீஸ் என தேர்தலுக்கான செலவுகளைச் செய்திருந்தான்.
தேர்தல் முடிவுகளும் வந்தது. காலை முதல் முன்னிலை வகித்து இரவில் வெற்றி என அறிவிக்க, வசிக்கும் பகுதியில் வெடிசத்தம் ஓயாமல் ஒலித்தது.
அமைச்சரவைப் பட்டியலில் சிவம் பெயர் அடிபடவும், மனைவி,மக்களோடு உடனே கிளம்பி வர தலைமைக்கழகம் அறிவுத்தியதின் பேரில் சென்னைக்கு குடும்பத்தோடு கிளம்பிச்சென்றார் சிவம்.
காலை நேரம், உறக்கத்திலிருந்து விழித்த அய்யாசாமி என்ன ருக்கு காய் வண்டி வந்துச்சா இல்லையா என்றார்.
காய் வண்டியா...?! போய் பாருங்க. வேகவேகமாக பளபளன்னு ரோடு போட்டாறதுன்னா...நம்ம 25 வருட கோரிக்கை தானாக இப்போது நிறைவேறது சிவம் அமைச்சரானப் புண்ணியத்திலே என்று மகிழ்ந்தனர்.
"நா ரெடிதான் வரவா… அண்ணன் நான் இறங்கி வரவா…" என்று பாடல் வரிகள் ஒலிக்க வாசலுக்கு வந்த ருக்குவும் அய்யாசாமியும் திகைத்து நின்றனர்.
நான்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்போடு தலையில் முண்டாசு அணிந்து வேளான்துறை அமைச்சராக சிவம் காய்வண்டியை தள்ளிக்கொண்டு வந்தார்.
என்ன மாமி!? இன்றைக்கு டையத்திற்கு வந்தேனா?! என வினய் மாதிரியே கண்ணடித்தவர்,
பெரிய பொறுப்பு இது, உன்னாலே எப்படி?!
அதெல்லாம் என் தலைவன் பார்த்துப்பான் மாமி, இன்றைக்கு ஒரு பொருள் கூட வண்டிலேருந்து கீழே விழாமல் வந்துவிட்டேன் அது போதும் எனக்கு என்று பெருமையாகச் சொல்லி கடனாக வாங்கியப் பணத்தை திருப்பிக்கொடுத்தார் சிவம்.
படுக்கையை விட்டு எழுந்தாச்சுனா,அப்புறம் என்ன ஈசிசேரில் கொஞ்சம் நேரம் தூங்கிறது?!
எழுந்திருங்கோ "இந்தாங்கோ காபி" என்ற குரல் கேட்டு ஈசிசேரிலிருந்த அய்யாசாமி திகைத்து எழ
என்ன பகல் கனவா?! என்ற ருக்குவிடம் கனவு கண்டதைச் சொல்லி இப்படி கூட நடக்க வாய்ப்பிருக்கும் போலத்தான் நேக்குத் தெரியறது,
ஆனால் நம்ம சிவமாலே முடியுமா ருக்கு ?!
வாய்ப்பிருக்காவா ?! வாசலுக்குப் போய் பாருங்கோ, “மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு நினைப்பு இருந்தால் மட்டும் போதும்னா,யார் வேண்டுமானாலும் வரலாம்” என்றாள் ருக்கு.
சிவம் பெரிய அளவில் கையெடுத்து கும்பிட்டு நின்று கொண்டிருந்தார்.......

Leave a comment
Upload