தொடர்கள்
பொது
விமான ஓடுபாதை தெரியவில்லையா ? ப்ளேனை அடுத்த ஊருக்கு இனி திருப்பவேண்டாம் -  ஸ்ரீராம்

20260606212032240.jpg
விண்வெளி அறிவியலாளர் டாக்டர் ஷுபா வெங்கடேஷ ஐயங்கார், விமானப் பாதுகாப்பு தொழில்நுட்பமான “திருஷ்டி”க்காக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பத்மஸ்ரீ விருதைப் பெறுகிறார்.

72 வயதான டாக்டர் ஷுபா வெங்கடேஷ் ஐயங்காருக்கு, விண்வெளிப் பொறியியல் மற்றும் விமானப் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மஸ்ரீ வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான வானிலை மற்றும் ஓடுபாதை காட்சித்திறன் (Runway Visibility) அமைப்புகளை உருவாக்குவதில் அவர் வகித்த பங்கையும் இந்த விருது பாராட்டுகிறது.

சமீப காலமாக டெல்லி அடர்ந்த மூடுபனியால் சூழப்பட்டு, காட்சித்திறன் மிகவும் குறைந்துள்ளது. கடுமையான குளிர்கால சூழ்நிலையால் போக்குவரத்துகூட சில நேரங்களில் நின்றுவிடுகிறது. ஆனால், காட்சித்திறன் கிட்டத்தட்ட இல்லாத நிலையிலும் விமானங்கள் எவ்வாறு பாதுகாப்பாக தரையிறங்குகின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

ஆச்சரியமாக, இதில் எந்த மாயாஜாலமும் இல்லை. பல வருடங்களாக இடைவிடாமல் உழைத்த, அதிகம் அறியப்படாத நாயகியான டாக்டர் ஷுபா வி. ஐயங்காரின் அர்ப்பணிப்பால் இது சாத்தியமானது…

டாக்டர் ஐயங்கரின் பணிக்காலத்தின் முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஓடுபாதை காட்சித்திறன் அளவீட்டு அமைப்பான “திருஷ்டி டிரான்ஸ்மிசோமீட்டர்” (Drishti Transmissometer) உருவாக்கத்திற்கு தலைமை தாங்கியது. இந்தத் தொழில்நுட்பம், குறைந்த காட்சித்திறன் நிலைகளில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் தொடர்பான முடிவுகளை எடுக்க விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு, ஓடுபாதை காட்சித்தூரம் (Runway Visual Range - RVR) குறித்த நிகழ்நேர (Real-time) தகவல்களை வழங்குகிறது. திருஷ்டி அறிமுக படுத்தப்படுவதற்கு முன்பு, இந்த அளவீடுகளுக்காக இந்திய விமான நிலையங்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் தயார் செய்யப்பட்ட டிரான்ஸ்மிசோமீட்டர்களையே நம்பியிருந்தன.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO = International Civil Aviation Organization) மற்றும் உலக வானிலை அமைப்பு (WMO = World Meteorological Organization) வகுத்த தரநிலைகளுக்கு ஏற்ப, அதேசமயம் ஒப்பிடத்தக்க இறக்குமதி உபகரணங்களைவிட மிகவும் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் வகையில் திருஷ்டி அமைப்பு உருவாக்கப்பட்டது. தேசிய விண்வெளி ஆய்வகத்தின் (NAL) தகவலின்படி, இந்தியாவின் பல விமான நிலையங்களில் பொதுவாக எதிர்கொள்ளப்படும் அடர்ந்த மூடுபனி, கனமழை மற்றும் தூசிப்புயல் போன்ற சூழ்நிலைகளிலும் இந்த அமைப்பு நம்பகத்தன்மையுடன் செயல்படக்கூடியது.

5 மீட்டருக்கும் குறைவான காட்சித்திறனிலிருந்து 2,000 மீட்டருக்கும் அதிகமான காட்சித்திறன் வரை (poor visibility conditions) இந்தத் தொழில்நுட்பம் அளவிடக்கூடியது. இதனால் CAT I, CAT II மற்றும் CAT III (Instrument Landing System (ILS) தரையிறக்க நடவடிக்கைகளில் இதைப் பயன்படுத்த முடிகிறது. குறிப்பாக வட இந்தியாவில் குளிர்கால மூடுபனி நிலைகளின் போது, விமான தாமதங்கள் மற்றும் மாற்றுப்பாதை திருப்புதல்களை குறைத்து, செயல்பாட்டு தொடர்ச்சியை மேம்படுத்துவதே இதன் பயன்பாட்டின் நோக்கமாக இருந்தது.

தொழில்நுட்ப ரீதியாக, இந்த அமைப்பு அனுப்பி (Transmitter) மற்றும் பெறுபவர் (Receiver) அலகுகளுக்கு இடையில் 30 மீட்டர் அடிப்படை இடைவெளியை (Baseline) பயன்படுத்துகிறது. மேலும், ஒளியியல் திருத்தம் செய்யப்பட்ட (Photopically Corrected) உணரிகள் (Sensors) மற்றும் வளிமண்டல ஒளி சிதைவு (Atmospheric Attenuation) தரவுகளை செயலாக்கும் களத்தில் நிரலிடக்கூடிய கேட் அரே (Field-Programmable Gate Array - FPGA) கட்டுப்படுத்திகளையும் கொண்டுள்ளது. அதோடு, Wi-Fi மற்றும் நிலையான தொலைபேசி இணைப்பு (Landline) ஆகிய இருவகை தொடர்பு வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளதால், பெங்களூருவில் உள்ள மையக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து அமைப்பின் செயல்நிலையை தொலைவிலிருந்தே கண்காணிக்க முடிகிறது.

20260606212116725.png

2020 ஆம் ஆண்டு, தேசிய விண்வெளி ஆய்வகம் (NAL), திருஷ்டி அமைப்பை பெரிய அளவில் உற்பத்தி செய்து வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்காக சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Central Electronics Limited) நிறுவனத்துடன் உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஏற்பாடு, இந்தியாவின் குடிமக்கள் மற்றும் பாதுகாப்புத் துறை விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பில் (India’s civil and defence aviation infrastructure) இந்தத் தொழில்நுட்பத்தை விரிவாகப் பயன்படுத்துவதை ஆதரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது.

விலை வித்தியாசம்: திருஷ்டி அமைப்பின் ஒரு யூனிட்டின் விலை தோராயமாக ரூ. 20 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை ஆகும், இது இறக்குமதி செய்யப்படும் இதே போன்ற சாதனங்களின் விலையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு.

நீண்ட கால சேமிப்பு: ஆரம்பகட்ட உபகரணச் செலவுகளுக்கு அப்பால், திருஷ்டி உள்ளூரிலேயே சேவை செய்யக்கூடியதாக இருப்பதால், செயல்பாட்டு மற்றும் பராமரிப்புச் செலவுகள் பெருமளவில் குறைந்து, அந்நிய செலாவணி வெளியேற்றமும் மேலும் குறைகிறது.

செயல்திறன்: வேகமாக நகரும் மணல் புயல்கள் மற்றும் அடர்ந்த பனிமூட்டம் போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஏற்படும் வானிலை நிகழ்வுகளின் போது, பழைய இறக்குமதி செய்யப்பட்ட இரட்டை-அடிப்படை மாதிரிகளை விடவும் திருஷ்டி சிறப்பாகச் செயல்படுகின்றன‌.

2026 ஆம் ஆண்டின் தொடக்க நிலவரப்படி, திருஷ்டி டிரான்ஸ்மிசோமீட்டர் நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நிறுவப் பட்டுள்ளது. இதில் முக்கிய சர்வதேச குடிமக்கள் விமான நிலையங்களும், இந்திய விமானப்படையின் பல தளங்களும் அடங்கும். புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், தனது அனைத்து ஓடுபாதைகளிலும் முழுமையாக இந்த திருஷ்டி டிரான்ஸ்மிசோமீட்டர் அமைப்பைப் பயன்படுத்திய இந்தியாவின் முதல் விமான நிலையமாகும்.

தேசிய விண்வெளி ஆய்வகம் (NAL= National Aerospace Laboratories), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் (CSIR= Council of Scientific and Industrial Research) ஒரு அங்க ஆய்வகமாகும். இது விண்வெளி அமைப்புகள், பொருட்கள் மற்றும் கருவியியல் (Instrumentation) தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

டாக்டர் ஷுபா வி. ஐயங்கார்: ஒன்பது உடன்பிறப்புகளில் கடைக்குட்டியான இவர், பெங்களூருவிலுள்ள சென்ட்ரல் கல்லூரியில் BSc மற்றும் MSc படிப்புகளில் முதலிடம் பெற்றார். பின்னர் முனைவர் பட்டம் (PhD) பெற்றார். மிகச் சில பெண்களே அறிவியல் துறைக்குள் நுழைந்த காலத்தில், அவரது தந்தை அவரை அறிவியல் துறைக்கு ஊக்குவித்தார். 1974 ஆம் ஆண்டு தேசிய விண்வெளி ஆய்வகத்தில் (NAL) சேர்ந்த அவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக விமானத் தொழில்நுட்பத்திற்காக தன்னை அர்ப்பணித்தார். அங்கு அவர் சிறப்பு விஞ்ஞானியாக (Distinguished Scientist) பணியாற்றியதுடன், விமான நிலைய கருவியியல் (Airport Instrumentation) பிரிவிற்கும் தலைமை வகித்தார்.

இப்பேர்பட்ட ஒரு அயராது உழைக்கும் பெண்மணிக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தது ரொம்பவே பாராட்டத்தக்கது…. நாரி சக்தி