தொடர்கள்
தமிழ்
அமிழ்தமிழ்து தமிழமிழ்து 30 : “ஈஸ்வரனின் பவிஷு” – மோகன் ஜி

20260606220837430.jpg

காளமேகப் புலவரை அறியாதவரும் உண்டோ? அவருடைய சிலேடை பாடல்களும் ரசமான கிண்டல் தொனிக்கும் பாடல்களும் என்றும் நம் ரசனைக்குரியவை.

ஒரு முறை திருவாரூரில் நடைபெற்ற உற்சவத்தில் ஆரூரரின் திருவீதி உலாவை காளமேகப் புலவர் தரிசித்து மகிழ்ந்தார்.

அக்கணமே தியாகேசனைப் பற்றி பாடத் துவங்குகிறார். அவருடைய வழக்கமான நையாண்டியுடன் நிந்தாஸ்துதியாக கீழ்க்கண்ட பாடல் பிறக்கின்றது.

ஒருமாடு மில்லாமல் மைத்துனனார்

புவிமுழுது முழுதே யுண்டார்
நரைமாடொன் றுமக்கிருந்தும் உழுதுண்ண
மாட்டாமல் நஞ்சை யுண்டீர்
இருநாழி நெல்லுக்கா இரண்டுபிள்ளை
குந்தாய்க்கும் இரந்தீர்,
இன்று திருநாளு மாயிற்றோ செங்கமலைப்
பதிவாழுந் தியாக னாரே!

இதற்குப் பொருளாவது,

செங்கமலப் பதியாகிய திருவாரூரில் உறைகின்ற தியாகேசரே!

உமது மைத்துனரான நாராயணனுக்கு உழுவதற்கென்று சொந்தமாக ஒரு மாடு கூட இல்லை. ஆனாலும் அவருடைய சக்ராயுதத்தை கொண்டு இந்த அகிலத்தையே உழுது காத்து ரட்சித்து சுக ஜீவனம் செய்கிறார்.

உம்மிடத்திலே நரை போல் வெளுத்த ஒரு ரிஷபம் நந்தியாக இருந்தும் உழுது உண்ண மாட்டாமல் ஆலகால விஷத்தை அருந்தி வைத்தீர்!

உமது இரண்டு பிள்ளைகளுக்கும் தாய்க்கும் உணவிடவே வேறு வழியின்றி இரண்டு நாழி நெல்லுக்காக பிச்சையும் எடுத்தீர் !

உமது பவிஷு இந்த லட்சணத்தில் இருக்கையில், உமக்கு இவ்வளவு கொண்டாட்டமும் திருவிழாவும் தேவை தானோ?

ஈசனுடைய லீலா வினோதங்களை நையாண்டியும் நக்கலுமாக பாடி மகிழ தமிழ்ப் புலவனுக்கு இல்லாத உரிமையா?!

வேறொரு ரசமான பாடலுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.