தொடர்கள்
கதை
பிச்சை புகினும் கற்கை நன்றே - கி. ரமணி

20260611001928627.jpg

திருவல்லிக்கேணியின் புகழ்பெற்ற கோவில் நுழைவு வாசலில் தேங்காய், பூ, வெற்றிலை பாக்கு கடைகளைத் தாண்டிய நடைபாதை ஓரக் குப்பைத்தொட்டி அருகில் கீழே ஒரு பிளாஸ்டிக் பாயை விரித்து அதன் மீது அமர்ந்திருந்தான் ஜீவா.

​நடுத்தர வயது. ஒல்லியான உடல். கண்ணுக்குக் கீழே மை தடவியது போல் கருவளையங்கள். பனியன் இல்லாத சட்டை. பாக்கெட் பக்கம் கொஞ்சம் கிழிந்து இருந்தது. கீழே அழுக்கு லுங்கி. ஒன்று இரண்டு நாள் வளர்ச்சியுடன் வெளியே எட்டிப்பார்க்கும் கருப்பு வெள்ளை கலந்த முக முடிகள்.

​ஒரு காலில், முட்டியில் இருந்து கணுக்கால் வரை புதுசாகக் கட்டு போட்டிருந்தது. அங்கங்கே சிவப்பாக ரத்தத் திட்டுகள். முகம், கை, கால்களில் புழுதி படிந்திருந்தது. கை இடுக்கில் ஒரு நசுங்கிய அலுமினிய தட்டு, காலியாக இருந்தது. எல்லா கைவிரல்களையும் நீட்டாமல்... அனுதாபத்தைக் கூட்டுவதற்காக மடக்கி வைத்திருந்தான்.

​"இந்த இடம் சரியாத்தான் இருக்கு. எப்படி ஆரம்பிக்கலாம்?"

"அம்மா கொஞ்சம் தர்மம் போடுங்கம்மா..."

​கொஞ்சம் கட்டைக் குரலில் சொல்லிப் பார்த்தான். பரவாயில்லை, சுமாராக இருக்கிறது. ஆண் பிள்ளையாக இருந்தால் "சார்" உபயோகிக்க வேண்டும், அவ்வளவுதான்.

கோவிலில் கூட்டம் நிறைய இருக்கிறது.

​'நம்ம மக்கள் தர்மம் போடணும்னு முடிவு பண்ணிட்டாங்கன்னா பத்து ரூபாயோ அஞ்சு ரூபாயோ நிச்சயம் போடுவாங்க... குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு அஞ்சு பேர் தர்மம் போடறாங்கன்னு வச்சுக்கலாம். எட்டு மணி நேரத்துல ஒரு முன்னூறு கிட்ட நிச்சயம் தேறிடும். சாப்பாடு, காபி எல்லாத்தையும் ஒரு அம்பது - நூறு ரூபாய்க்குள்ள முடிச்சுக்கலாம். சாயங்காலம் பாக்கி பணத்தோட டாஸ்மாக் தான்.'

​மங்களகரமாக "அம்மா தாயே தர்மம் போடுங்க" என்று ஆரம்பித்த போது காலை எட்டு மணி. ஞாயிற்றுக்கிழமை, நல்ல கூட்டம்.

​ஆனால், ஜீவா நினைத்த அளவுக்கு வேலை எளிதாக இல்லை. வயதில் குறைந்தவர்களை நிறுத்தி தர்மம் கேட்கவே முடியவில்லை, வேகமாகப் போய்விடுகிறார்கள். வயது முதிர்ந்தவர்களை, அதுவும் பெண்களாகப் பார்த்து "அம்மா தாயே" என்று ஆரம்பித்தால், அம்மாவை நகர்த்தி விட்டு அப்பா அவன் பக்கம் வந்து விடுகிறார்.

​"தொந்தரவு பண்ணாதேப்பா, அப்புறம் தரேன்" என்று போய்விடுகிறார். ஒன்று இரண்டு பேர், "ஏம்பா கை கால் எல்லாம் ஒழுங்கா தானே இருக்கு? உழைச்சுச் சாப்பிட வேண்டியது தானே" என்று போற போக்கில் இலவச மெடிக்கல் சர்டிபிகேட், உபதேசம் எல்லாம் கொடுத்துவிட்டுப் போகிறார்கள்.

​காலை 10 மணிக்கு நிலைமையை ஆராய்ந்து பார்த்தால் மூன்று பேர் தான் தர்மம் போட்டிருந்தார்கள்.

• ​ஒரு கிழிந்த ஐந்து ரூபாய் நோட்டு.

• ​ஒரு பத்து ரூபாய் நாணயம்.

• ​இரண்டு இட்லி சுற்றிய, சட்னி சாம்பாரற்ற ஒரு பொட்டலம்.

​ரொம்பக் கம்மியாகத் தோன்றியது.

​டேர்ன் ஓவரை எப்படி அதிகமாக்குவது என்று யோசித்தபடி இருந்த போது, ஒரு போலீஸ்காரர் ஜீவாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளினார்.

"ஏண்டா,சொன்னா கேட்கவே மாட்டீங்களாடா நீங்க? கையைக் காமி, பிளேடு ஏதுனா இருக்கா? நீ பிக் பாக்கெட் தானே?"

​"ஐயோ! அதெல்லாம் இல்லை சார்."

​"என்ன நொள்ளை சார்? கூட்டத்தில் நிக்காதே, அங்க போய் தள்ளி நில்லு."

​அங்கிருந்து சற்றுத் தொலைவு போய், மக்கள் கோவிலில் இருந்து வெளியே வரும் வழியில் நின்றான். இங்கு கூட்டம் நிதானமாக இருந்தது, உள்ளே செல்வது போல் அலைமோதல் இல்லை. மர நிழலில் நின்று கொஞ்சம் ஆசுவாசம் பண்ணிக்கொண்டான்.

​முகம் முழுக்கத் திருநீறு இட்டுக்கொண்டு, கதர் வெள்ளை வேட்டி, ஜிப்பா, ஒரு கையில் ஒரு துணிப்பை மறு கையில் நடக்க உதவ வாக்கிங் ஸ்டிக் சகிதம் 70 வயதைக் கடந்த முதியவர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார். ஜீவாவிற்கு அவரைப் பார்த்ததும் 'இந்த ஆள் நிச்சயம் தர்மம் பண்ணுவார்' என்று தோன்றியது.

​ஓரடி முன்னுக்கு வந்து, "ஐயா, ஏதாவது தர்மம் பண்ணுங்க!" என்றான்.

​அந்தப் பெரியவர் நின்றார். சில வினாடிகள் கண்களை இடுக்கி அவனைப் பார்த்தார். "யாருப்பா நீ? புதுசா இருக்கே... புது பிச்சைக்காரனா? நான் தினமும் கோவிலுக்கு வர்றவன்தான்ப்பா, உன்னைப் பார்த்ததே இல்லையே?"

​"ஆமாங்கையா! அங்கங்க அல்லாடி இப்போ இந்தக்கோவிலுக்கு வந்திருக்கேன். கொஞ்சம் தர்மம் பண்ணுங்க ஐயா."

​"அதெல்லாம் பண்ணலாம். ஆனா உன்னைப் பார்த்தா பிச்சைக்காரன் மாதிரியே தெரியலையே? புதுசா தொழிலுக்கு வந்திருக்கியா?"

​"ஏன் ஐயா?" என்று தயக்கத்துடன் கேட்டான் ஜீவா.

​"நான் கொஞ்ச நேரம் முன்னாடி கோவில் நுழைவு வாசல் கிட்ட உன்னைப் பார்த்தேன். சும்மா தட்டை நீட்டிக்கிட்டு அலட்சியமா நின்னே. அங்கெல்லாம் எவன்ப்பா உனக்குக் காசு போடுவான்? கோவிலுக்குள்ள போக வேண்டிய அவசரத்துல நாங்க இருப்போம் இல்லையா? கோவில்ல இருந்து வெளில வர்றவங்ககிட்ட கேட்டாத்தான் ஏதோ கொஞ்சம் கிடைக்கலாம். அப்பத்தான் பிரார்த்தனையெல்லாம் முடிச்சுட்டு கொஞ்சம் நிம்மதியா இருக்குற நேரம்... இல்லையா?" என்று கூறிச் சிரித்தார்.

​"நீங்க சொல்றது சரிதான் ஐயா!"

​"தவிர உன்னைப் பார்த்தா தினப் பிச்சைக்காரன் மாதிரியே இல்லை. இரண்டு நாள் முன்னாடி சவரம் பண்ணியிருக்கே. கால்ல சம்பந்தம் இல்லாத இடத்துல கண்டபடி பேண்டேஜ் போட்டிருக்கே. அங்க என்ன கட்டுல ரத்தம் மாதிரி தெரியுது? காஞ்ச ரத்தம் கரும் பழுப்பு நிறமா மாறிடும். நீ இங்க் மாதிரி எதையோ ஊத்தியிருக்கே, அது ரோஸ் கலர்ல இருக்குது! உன் சட்டை கொஞ்சம் புதுசா இருக்குது, பாக்கெட் பக்கம் மட்டும் வேணும்னே கிழித்து விட்டிருக்கே. மூஞ்சில அழுக்கு கம்மியா இருக்கு, தலையை வாரியிருக்கே. உன்னைப் பார்த்தா வருத்தமா இருக்குற மாதிரியே தெரியலப்பா, மாறாகக் கொஞ்சம் சந்தோஷமே தெரியுது!"

​தொடர்ந்து, "உன் கண்ணு ஏம்பா இவ்வளவு சிவப்பா இருக்குது? குடிச்சிட்டு நேரா வந்திருப்பே போல... கொஞ்சம் ஊது" என்றார்.

​அவன் ஊதாமல், "இல்லைங்கையா..." என்று மழுப்ப, அவன் வாயிலிருந்தே குப்பென்று வாசனை அடித்தது.

​"இங்க பாருப்பா, நீ குடிக்காதேன்னு சொல்ல நான் யாரு? ஆனா குடிச்சிட்டு பிச்சை எடுக்க வராதே, உன் கண்ணே காட்டிக்கொடுத்துடும். தர்மம் போடலாம்னு நினைக்கிறவன் சத்தியமா குடிகாரனுக்குப் போட மாட்டான். அப்புறம் உன் அலுமினிய தட்டு நசுங்கி நல்லாத்தான் இருக்கு, ஆனா அதுல நிறைய சில்லறையும் இருக்கக் கூடாது, காலியாவும் இருக்கக் கூடாது. ரெண்டு மூணு காசு இருக்கட்டும். அதுவும் அஞ்சு ரூபாய், பத்து ரூபாயா இருந்தாதான் காசு போடுற எங்களுக்கும், உனக்குக் குறைஞ்சது இவ்வளவு போடலாம்னு தோணும். இதெல்லாம் மனோதத்துவம்ப்பா!"

​ஜீவா நிஜமாகவே மெய்சிலிர்த்துப் போனான்.

"நான் இந்தத் தொழிலை ஆரம்பிக்கலாம்னு கோவிலுக்கு வந்த போது, நீங்க வந்து எனக்கு நிறைய விஷயம் இப்போ சொல்லியிருக்கீங்க ஐயா. அதனால நான் என்னைப் பத்தி உண்மையச் சொல்றேன். நான் ஒரு மேஸ்திரிகிட்ட கூலி ஆளா வேலை பார்த்துட்டு இருந்தேன் ஐயா. பொண்டாட்டி, மூணு குழந்தைங்கன்னு ஆகிப்போய் வீட்ல சண்டை. டாஸ்மாக் வேற போக ஆரம்பிச்சு கையில பைசா இல்லை, வேலையும் போயிடுச்சு. வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன். நம்மால குடும்பத்தையெல்லாம் பாத்துக்க முடியல ஐயா... ஏதோ பொண்டாட்டி வேலை செஞ்சு பசங்களைக் காப்பாத்துறா. நான் அதான் இப்ப பிச்சை எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நீங்க சொல்றதும் சரிதான்."

​வயதான மனிதர் சொன்னார், "உன்னைப் பத்தி நான் ஒன்னும் தப்பா சொல்லலப்பா, உன் கவலை உனக்கு. நான் சொல்ல வந்தது என்னன்னா, இந்த ஒரே இடம் போதும்னு நம்பிட்டே உட்கார்ந்திடாதே. ஒரு ஏழெட்டு இடம் கண்டுபிடிச்சு வச்சுக்கோ. முடிஞ்ச வரைக்கும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடமாகப் போய் உட்காரு. சென்னையில நிறைய கோவில் இருக்கு, எக்ஸிபிஷன், மெரினா பீச், மீட்டிங், டிராபிக் சிக்னல், சினிமா, ஹோட்டல்னு இன்னும் நிறைய இடம் இருக்கு. மக்கள் எல்லாம் அவங்க இஷ்டப்படி செலவு செய்யுற போது கொஞ்சம் தர்மத்துக்கும் கொடுப்பாங்க. நிறைய பணம் கிடைக்கும். உன் குடிக்கிற செலவு போக வீட்டுக்குக் கொடுப்பதற்கும் கிடைக்கும். உனக்கு வயசு கம்மி தானே, கொஞ்சம் அலைஞ்சா நல்லதுதான். பொண்டாட்டி, குடும்பம் எல்லாம் இருக்கு இல்ல, வீட்டையும் கொஞ்சம் பாத்துக்கலாம்ப்பா. இங்கே உட்கார்ந்துட்டினா... வழக்கமா வர்றவங்க தான் இங்க அதிகம், அதுவும் என்னை மாதிரி பெரிசுங்கதான்.

இவங்க எல்லாம் உனக்கு அவ்வளவா போட மாட்டாங்க."

​"ஐயா! நீங்க சொல்றது சரிதான்! இந்தக் கோயில் மாதிரி இன்னும் சில இடம் கண்டுபிடிச்சு தினம் ஒவ்வொரு இடமா போனா நல்லது. எல்லாத்தையும் விட உங்ககிட்ட பிடிச்ச விஷயம் என்னான்னா, 'பிச்சை எடுக்காதே, திருந்தி வாழு, டாஸ்மாக் போகாதே' அப்படின்னு நீங்க அறிவுரை சொல்லல."

​"உன் வாழ்க்கை உன்னோடதுப்பா, இதுல நான் யாரு உனக்கு உபதேசம் பண்ணிக்கிட்டு இருக்க? என் புள்ள வயசுதான் இருக்கும் உனக்கு. முடிஞ்ச வரைக்கும் நீ சந்தோஷமா இருக்க வழி சொன்னேன், அவ்வளவுதான். சரி தம்பி நான் கிளம்புறேன்" என்ற பெரியவர், ஜிப்பாவுக்குள் கைவிட்டுத் துழவி ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்தார். அதை ஜீவா கையில் வைத்தார். "நல்லா இரு" என்று சொல்லி மெதுவாக நடந்தார்.

​ஜீவா மிகவும் நெகிழ்ந்து போனான். "உங்களை மறக்கவே மாட்டேன் ஐயா... இப்ப நான் கிளம்புறேன். நீங்க சொன்ன மாதிரி, வழக்கமான ஆளுங்க வர்ற இந்த மாதிரி இடம் இல்லாம பீச், டிராபிக் சிக்னல், எக்ஸிபிஷன், பொதுக்கூட்டம்னு அந்தப் பக்கம் போய் பார்க்கிறேன் ஐயா."

​ தலையசைத்தார்.பெரியவர்.

ஜீவா கிளம்பிப் போய்விட்டான்

ஜீவா கண்களிலிருந்து மறைந்ததும், பெரியவர் ஒரு பெருமூச்சு விட்டார். அவர் உதட்டோரத்தில் மெல்லிய புன்னகை.

​பெரியவர் மெதுவாக எதிரே இருந்த மீனாட்சி காபி ஸ்டாலினுள் போய் ஒரு ஸ்ட்ராங் காபி ஆர்டர் பண்ணி மெதுவாகக் குடித்தார். பில் கொடுத்துவிட்டு வெளியே வந்து அருகில் இருந்த கட்டணக் கழிப்பறைக்குள் நுழைந்தார்.

​பத்து நிமிடத்தில் கிழவர் வெளியே வந்த போது... ஒரு கிழிந்த கருப்புக் கோட்டு, அழுக்கு வேட்டி, கண்ணில் ஒரு பழைய கருப்புக் கண்ணாடி, ஒரு கையில் வாக்கிங் ஸ்டிக் மறுகையில் பழைய அழுக்குப்பை சகிதம் செருப்பில்லாமல் இருந்தார்!

​மெதுவாகத் தடியால் தட்டித் தட்டி நடந்து, கோவிலில் இருந்து மக்கள் வெளியே வரும் இடம் பார்த்துச் சென்றார். பின் ஒரு மூலையில் அமர்ந்து வலக்கையை நீட்டி, "ஐயா... கண்ணு தெரியாத கிழவன் ஐயா... ஏதாச்சும் தர்மம் போடுங்க..." என்றார்.