
"என்னடா சொல்ற? ஹால் டிக்கெட் வாங்கணும்னா பேரன்ட்ஸை கூட்டிட்டு வரணுமாமா?காலேஜ்கூட ஸ்கூல் மாதிரி ஆரம்பிச்சுட்டாங்களா?" என்று கேட்ட அம்மாவுக்கு பதிலேதும் சொல்லாமல் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான் பூபதி.
"ஏங்க, உங்கள் பிள்ளையோடு காலேஜ் போய் என்ன ஏதுன்னு விசாரித்து ஹால் டிக்கெட் வாங்க ஏற்பாடு செய்யுங்க" என்று கணவன் கார்த்திக்கிடம் இரைந்தாள் சுமதி.
"அஞ்சு வருஷத்துக்கு முன்னால் பையனை நான் பார்த்துக் கொள்கிறேன்; மும்பை கம்பெனியில் சம்பளம் கூடுதல் என்று என்னை அங்கு விரட்டினாயே. ரெஸ்டுக்கு வந்திருக்கும் என்னால் போக முடியாது. நீதானே இந்த காலேஜ்ல கொண்டு சேர்த்தே. நீயே நம் அருமை புத்திரனோடு போய் ஹால் டிக்கெட் வாங்கி வா" என்றான் கார்த்திக்.
சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பின் வழக்கம் போல் தாய்க்குலமே வென்றது. விளைவு--மகன் பூபதியோடு காலேஜில் கார்த்திக்.
ப்ரின்ஸ்பல் ரூமுக்கு வெளியே அரை மணி நேரம் காத்திருந்து பியூன் அனுமதித்ததும் உள்ளே வந்த கார்த்திக்கைப் பார்த்த ப்ரின்ஸ்பல் ராகவன், பூபதியிடம் "வெளியே வெயிட் பண்ணு" என்று சொல்லிவிட்டு கார்த்திக்கை உட்கார சொன்னார்.
"அட நீயா ராகவா!! நல்லவேளை. உன்னைப் பார்த்து விட்டேன்.
என் பையன் பூபதியின் ஹால் டிக்கெட்டை நிறுத்தி வைத்திருக்காங்க. கொஞ்சம் விசாரித்து ஹால் டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்" என்றான் கார்த்திக்.
இன்டர்காமில் யாரிடமோ பேசிவிட்டு "கார்த்திக், உன் பையனுக்கு அட்டன்டன்ஸ் குறைவாம்; அதனால்தான் நிப்பாட்டி இருக்காங்க" என்றதும் பலமாக சிரித்தான் கார்த்திக்.
விஷயத்தைப் புரிந்து கொண்ட ராகவன் எழுந்து "டேய் நிறுத்துடா. ஏன் சிரிக்கிறாய் என்று புரிகிறது. உன் பையனிடம் ஃபார்மாலிட்டிக்கு ஒரு மன்னிப்பு கடிதம் வாங்கிக்கொண்டுஹால்டிக்கெட் கொடுக்க சொல்கிறேன். நம்ம ரகசியம் நமக்குள்ளேயே இருக்கட்டும். ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வா. நிறைய பேச வேண்டும்" என்று சொல்லிவிட்டு பெல்லை அழுத்தினான்.
பூபதி உள்ளே வந்ததும் "உங்க அப்பாவுக்காக இப்போது அனுமதிக்கிறேன். ஒரு மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு ஹால் டிக்கெட் வாங்கிக் கொள். இனி ஒழுங்காக படித்து உன் அப்பா மாதிரி பெரிய இன்ஜினீயராக வரவேண்டும்" என்றார் ப்ரின்ஸிபல் ராகவன்.
"தேங்க்ஸ் சார்" என்று சொல்லிவிட்டு பூபதியோடு வெளியேறினான் கார்த்திக்.
ஞாயிறன்று நேரில் சந்தித்தபோது "டேய் ராகவா, முதல் வருஷம் அட்டன்ன்ஸ் ஷார்ட் என்று ப்ரின்ஸ்பாலிடம் கெஞ்சிக்கூத்தாடி பரீட்சை எழுதிய உன்னை ஒரு காலேஜ் ப்ரின்ஸ்பாலாக பார்ப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை" என்றான் கார்த்திக்.
"கார்த்திக், அந்த வயதில் அதெல்லாம் சகஜந்தான். அதற்குப் பிறகு ஒழுங்காகப் படித்து Ph.D வாங்கினேன். அதுபோல் உன் மகனும் நல்ல நிலைக்கு வருவான். பூபதியைப் பற்றி நீ கவலைப்படாதே நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றான் ராகவன்.

Leave a comment
Upload