தொடர்கள்
கதை
சமரசம் உலாவும் இடமே! – சிறுகதை – பா.அய்யாசாமி 

20260610232455711.jpeg



என்ன டையரியை நோண்டிண்டு உட்கார்ந்திருக்கேள் ?என்ற ருக்குவின் குரலில் திரும்பிய அய்யாசாமி,கணக்கு நோட்டைப் பார்க்கின்றேன் என்றார்.

என்ன செலவு இப்ப அதிகப்படியாயிடுத்துனு ஆராய்ச்சி செய்யறேள் என அடுத்த கேள்வியை எழுப்பினாள் ருக்கு.

சே ஒன்றுமில்லை, முடி வெட்டிக்கணும்,அதான் கடைசியா எப்ப வெட்டிண்டது என தேதியைத் தேடறேன்..

ஓஹோ அப்படியே ஐந்தடி கூந்தல் பாருங்கோ, இல்லாத முடிக்கு எதற்கு இத்தனை அலங்காரம் மாதாமாதம் இது ஒரு வெட்டிச் செலவு என்றாள் ருக்கு.

வயசாயிடுத்துனா முடியே வெட்டக் கூடாதா,ஒழுங்காக திருத்தமாக இருந்தால்தாதனே அழகு என்றார் அய்யாசாமி.

ஞாயிற்றுக்கிழமை போனேளே ஏன் திரும்ப வந்துட்டேள்..

அதுவா, அன்றைக்கு நம்ம காமு முடி வெட்ட உட்கார்ந்திருந்தான் என்றார்.

அதனால் ?

எப்படி? அவன் எனக்கு தம்பி முறை இல்லையோ.
அண்ணா,தம்பி சேர்ந்து முடி வெட்டக்கூடாதுனு சொல்வாளே என்றார் அய்யாசாமி.

ஓ...சாஸ்த்திரமோ!

பின்னே திங்கள் கிழமை போனேளே?!

அன்றைக்கு வேலைக்குப் போகிறவா நிறைய இருந்தார்கள் அவாளுக்கு நேரமாகிடுமோனு திரும்பிட்டேன்..

ஓ.. சமூகம் பேஷ்!

செவ்வாய் அவா கடை லீவு..

புதன் கிழமை போகிறேன் என கிளம்பினேளே?!

அன்றைக்கு எதிராத்து நரசிம்மன் கடையிலே உட்கார்ந்திருந்தான்.

பயந்து எஸ்கேப் ஆயிட்டேளாக்கும்.

ஆமாம் என்றார் அய்யாசாமி.

ஒரு குட்டி பிளாஷ்பேக்

இரண்டு வருசமிருக்கும்,எதிர் வீட்டுநரசிம்மனோட பொண்ணுக்கு மாப்பிள்ளைப் பார்த்துக்கொண்டிருந்த நேரம்.
மாப்பிள்ளையாத்துக்காரா வழக்கம்போல அக்கம்பக்கம் விசாரிப்பதற்கு வந்திருக்கா நம்மஅய்யாசாமி கிட்ட,பெண் குடும்பம் எப்படின்னு கேட்டதற்கு, "நல்ல குடும்பம்தான் ஆனால் பெண் வேறு ஒருவரை தீவிரமாக காதலிக்கிறது என்கிற உண்மையை சொன்னதும்,அந்த வரண் நின்னுடுத்து. அது பெண்ணோட அப்பாவான நரசிம்மனுக்குத் தெரிய வந்ததிலிருந்து இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை.

உமக்கு எதுக்கு இந்த வம்பு,என ருக்கு கேட்டதற்கு, எதிர்வீட்டுப் பெண்ணாகவே இருந்தாலும் நம்ம பொண்ணு மாதிரிதானே, நாளை பின்னே அவர்களுக்கு உண்மை தெரிஞ்சு, இரண்டு பேரோட வாழ்க்கை வீணாகிடுமே என்கிற அக்கரையிலதான் உண்மையைச் சொன்னேன்,அது நரசிம்மனுக்கு பொறுக்கலை, நான் என்ன செய்யறது?! என கேட்டார் அய்யாசாமி முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு.

இப்போது,அந்த பொண்ணு தான் காதலித்தவனையே அப்பா அம்மாவை சமாளித்து கல்யாணம் பண்ணின்டு சந்தோசமாகத்தானிருக்கா, அவாளெல்லாம் சமாதானம் ஆயிட்டா, ஆனால் அய்யாசாமி மட்டும் வேண்டாதவராயிட்டார் நரசிம்மனுக்கு"ஞாபகத்தில் வந்தது ருக்குவிற்கு.

ஏதோ யோசித்தவாறு நீங்க சலூனுக்குப் போங்கோ என அனுப்பினாள் ருக்கு, இன்று நரசிம்மனும் சலூன் சென்றிருப்பது தெரிந்து.

போன் சார்ஜிலே இருக்கு, நான் போயிட்டு வந்துடறேன் என கிளம்பினார் அய்யாசாமி.

உள்ளே சென்ற ருக்கு மொபைல் எடுத்து சலூன் மணி என்கிற நம்பரை அழைத்து சிறிது நேரம் ஏதோ பேசி வைத்தாள்.

வாங்க சார், ஐந்து நிமிடம், சேவிங்தான் இதோ முடுஞ்சிடும்,வாங்க என அய்யாசாமியை அமரவைத்தார் மணி.

முகம் பூரா முல்தானி மிட்டியை தடவி யாரையோ சேரில் சாய்த்திருந்தார் மணி.

உமக்கும் நரசிம்ம மாமவிற்கும் அப்படி என்னதான் பிரச்சனை? என கேட்டார்.

சலூன் வரை செய்தி வந்திடுத்தா ?! என்றதற்கு..

போனவாரம் நீங்க அவரைப் பார்த்து திரும்ப போயிட்டீங்க, உங்களைப் பார்த்ததும் அவரும் கிளம்பிப்போயிட்டாரு எனக்குதானே நஷ்டம் என்றார் மணி.

ஒன்னுமில்லப்பா... அவர் பொண்ணு ஒருவரைக் காதலித்தது, எனக்கு தெரியும்,அவனும் நல்ல பையன் நல்ல குடும்பம், என்ன ? வருமானம் குறைவுங்கிறதாலே அவன் அதான் அந்த நரசிம்மன் ஒத்துக்கலை என எங்களிடம் சொல்லி வருத்தப்பட்டது அந்தக் குழந்தை,

அந்த சமயத்தில்தான் விசாரிக்க வந்த வேறு ஒரு மாப்பிள்ளை வீட்டார், பெண் எப்படிகுடும்பம் எப்படினு விசாரிக்காமல், சொத்து இருக்கா, சொந்த வீடு இருக்கா ? நரசிம்மன்,மற்றும் அவன் மனைவிக்கு நோய் ஏதாவது இருக்கா?! என விசாரித்ததும் அவா எதிர்பார்ப்ப்பு என்னவென எனக்கு புரிஞ்சிடுத்து, அதனால் அவள் வேற ஒருவனைக் காதலிக்கிறாள் என சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன், அதுவும் உண்மையைத்தானே சொன்னேன், அது அவனுக்குத் தெரிஞ்சு தன் பெண்ணைப் பற்றி தப்புத்தப்பா சொல்லி, வந்த வரனைக்கலைச்சுட்டான் என என் மீது கோபம், அதிலிருந்து என்னிடம் பேசறதில்லை, கல்யாணத்திற்கு கூட கூப்பிடலைனா பார்த்துக்கோ என்ற அய்யாசாமி. நல்லது செஞ்சாலும் பொல்லாப்பு வரும்னு பெரியவங்க சும்மாவா சொன்னா ? என பெருமூச்சு விட்டார்.

ஆனால் அவன் பொண்ணு அப்பா மாதிரி முட்டாள் இல்லை,ரொம் சமர்த்து. ஊருக்கு வரும்போதெல்லாம் அப்பனுக்குத் தெரியமல் வந்து எங்களைப் பார்த்து ஆசீர்வாதம் பண்ணுங்கோ மாமானு ஓடி வந்திடும் என்றார் அய்யாசாமி .

ம்..முடிந்துட்டு எழுந்திருங்கோ என்ற மணியிடம் பணத்தைக்கொடுத்து திரும்பிய நரசிம்மனைப் பார்த்ததும் அய்யாசாமி ஹீ..ஹீ என வழிந்தார்.

மன்னிச்சுகோடா அய்யாசாமி! நல்லதுதான் செய்திருக்கே நீ, ஆனால் நான்தான் உன்னை தப்பாக புரிந்துக்கொண்டு இத்தனைநாள் பேசாமல் இருந்துட்டேன் என்றநரசிம்மன் வருந்தி கடையிலிருந்து கிளம்பினார்.

ஏன் மணி இந்த வேலை உனக்கு ? அவனை சீட்டிலே உட்காரவச்சுண்டு என் வாயைக்கிளறி என்று கேட்டதும்,

“உங்களை யாரு சாமி போனை வீட்டிலே வச்சுட்டு வர சொன்னது?! எல்லாம் உங்காத்து மாமியோட ஐடியாதான்” என்ற மணி வாய் விட்டுச் சிரித்தார்.

இல்லாத தலைமுடியை மழிக்க ஒரு வாரமானது. இரண்டாண்டு மனக்கசப்பை இரண்டு நிமிடத்தில் நீக்கிட்டாளே என ருக்குவை நினைத்து பெருமிதம் கொண்டார் அய்யாசாமி.