தொடர்கள்
தொடர்கள்
அமிழ்தமிழ்து தமிழமிழ்து 36 - மோகன்ஜி

20260722065848242.jpeg

செங்கனிவாய் முத்தம்

சிற்றிலக்கிய வகைமையில் பிள்ளைத்தமிழ் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. பாட்டுடைத் தலைவியாக மீனாட்சி அம்மையை வைத்து குமரகுருபரரால் 17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் என்னும் அரிய நூலாகும்.

பெண்பாலர் பிள்ளைத்தமிழ் நூல்களில், தலையாயதாக விளங்கும் அற்புதமான படைப்பு இது. திருமலை நாயக்க மன்னர் கேட்டுக் கொண்டபடி 102 பாடல்கள் அமைந்த இந்த நூலை குமரகுருபரர் இயற்றினார் என்பது வரலாறு.

பெண்பால் பிள்ளைத் தமிழின் பத்து பருவங்களில், ஐந்தாவதாக வருவது முத்தப் பருவம் என்பதாகும் . பாடலில் குறிக்கப் பெறும் குழந்தையின் முத்தம் சிலாகித்துச் சொல்லப்படுவதால் இது முத்த பருவமாகும்.

முத்துக்கள் உதிக்கின்ற பல பொருள்களைச் சுட்டி, அவை தரும் முத்துக்களெல்லாம் இந்தக் குழந்தையின் வாய் முத்தத்திற்கு ஈடாகுமா என்ற வகையில் கீழ்கண்ட பாடல் மிக நயமாக இயற்றப்பட்டு இருக்கிறது.

இப் பிள்ளைத் தமிழை திருமலை நாயக்க மன்னர் அரசவையில் அரங்கேற்றும் சமயம், முத்தப் பருவத்தை பாடுகையில், தேவி மீனாட்சியே சிறுமியாக வந்து தன் கழுத்தில் இருந்த முத்து மாலையைக் கழற்றி குமரகுருபரர்க்கு அளித்ததாக்க் கூறுவர்.

இனி பாடல் :

கொழுதி மதர்வண்டு உழக்குகுழல்
கோதைக்கு உடைந்த கொண்டலும்நின்
குதலைக் கிளிமென் மொழிக்குஉடைந்த
குறுங்கண் கரும்பும் கூன்பிறைக்கோடு

உழுத பொலன்சீ றடிக்குஉடைந்த
செந்தா மரையும் பசுங்கழுத்துக்கு
உடைந்த கமஞ்சூல் சங்கும்ஒழுகு
ஒளிய கமுகும் அழகுதொய்யில்

எழுது தடந்தோள்கு உடைந்ததடம்
பணையும் பணைமென் முலைக்குஉடைந்த
இணைமா மருப்பும் தருமுத்துஉன்
திருமுத்து ஒவ்வா இகபரங்கள்

முழுதும் தருவாய் நின்கனிவாய்
முத்தம் தருக முத்தமே
முக்கண் சுடர்க்கு விருந்தும்இடும்மும்
முலையாய் முத்தம் தருகவே

இந்தப் பாடலின் பொருளாவது :

மதர்த்து விளங்கும் வண்டுகள் கலக்கும் மலர்ச் சரங்களை அணிந்த உனது சுருண்ட கூந்தலிடம் மேகம் தோற்றுப் போகிறது.
பசும்கிளியைப் போல மழலை மிழிற்றும் உந்தன் சொல்லழகுக்கு, சிறிய கணுக்கள் அமைந்த கரும்பும் தோற்றுப் போகிறது.
சிவபெருமான் குனிந்து உன்னை வணங்குகையில், அவர் சிரசில் உள்ள பிறைமதியின் நுனிகள் உழுத உன் பொன்னனைய சிறிய பாதங்களிடம், செந்தாமரை மலரும் தோற்றுப் போகிறது.
உன் மென்மையான ஒளி சிந்தும் கழுத்தின் அழகிற்கு, கமுகும் சூல் கொண்ட தரமான சங்கும்கூட தோற்றுப் போகின்றன.
பேரழகு மிளிர தொய்யில் எழுதப் பெறும் உனது பெரிய தோள்களிடம் முற்றிய மூங்கிலும்கூட தோற்றுத் தான் போகிறது.
எழிலார்ந்த உனது நகில்களிடம் யானையின் இரட்டை தந்தங்களும்கூட ஒப்பில்லாமல் தோற்றுப் போகின்றன.

இவ்விதமாக மேகம், கரும்பு, தாமரை, கமுகு, சங்கு, , மூங்கில், யானைத் தந்தங்கள் ஆகியவை தரும் முத்துக்கள் உன் இதழ் சிந்தும் முத்தங்களுக்கு ஈடாகாது!

இம்மைக்கு மட்டுமல்லாமல் மறுமைக்கும் இன்பங்கள் யாவற்றையும் தருபவளே! உந்தன் கனியிதழால் முத்தம் தருகவே!
முக்கண் சுடராகிய சிவனார் மனதிற்கு விருந்தாக அமைந்தவளே! மும்முலைத் தாயே! முத்தம் தருகவே!

பின்குறிப்பு :

முத்துக்கள் உதிக்கும் இடங்கள்:

தமிழ் இலக்கிய மரபில் இருபது பொருள்களினின்று முத்துக்கள் உதிக்கும் எனப்படுவதுண்டு. அவற்றுள் மேகம், கரும்பு, தாமரை,கமுகு, சங்கு, மூங்கில், யானை தந்தங்கள் ஆகியனவற்றை இந்தப் பாடலில் குமரகுருபரர் நயமாக எடுத்தாண்டு இருக்கிறார்.

மும்முலை :
மலையத்துவச பாண்டியனின் மகளாக தடாதகை பிராட்டியார் பிறந்தபோது அவருக்கு மார்பில் மூன்று முலைகள் இருந்தனவாம். தனக்குரிய மணாளனை தடாதகை சந்திக்கையில், மூன்றாவது முலை தானாகவே மறைந்து விடும் என்ற தெய்வவாக்கும் கேட்டதாம். அவ்விதமே, சுந்தரேஸ்வரர் எதிர்ப்பட்ட போது மூன்றாவது முலை மறைந்து போனது. அந்த தடாதகை பிராட்டியே மீனாட்சியம்மை ஆவார்.