
பிற்கால அறநூல்களில் ‘வெற்றி வேற்கை’க்கு தனி இடம் உண்டு. முந்தைய தலைமுறைக்கு ஆத்திச்சூடி, வெற்றிவேற்கை, கொன்றைவேந்தன், உலகநீதி ஆகிய எளிய அறநூல்கள் மனப்பாடப் பகுதிகளாக சிறிய வகுப்புகளிலேயே அமைந்திருந்தன.
அதிவீர ராம பாண்டியன் என்கின்ற மன்னரால் வெற்றி வேற்கை எழுத பெற்றதாகும். இந்த நூலின் தொடக்க வரியின் வார்த்தைகளாலேயே இது வெற்றிவேற்கை என்று அழைக்கப்படுகிறது. இதற்கு நறுந்தொகை என்ற பெயரும் உண்டு.
மனிதர்கள் செம்மையாக நல்ல வழியில் வாழ்வதற்கு ஏற்ற அறவுரைகளை இந்த நூல் வழங்குகிறது. இதன் வரிகள், எளிதில் மனதில் தங்கும் வகைக்குக் கூர்மையானவை.
இன்று வெற்றி வேற்கையில் இருந்து சில வரிகளை பார்ப்போம். பிறர்க்கு உதவுவதையும் உதவாமையையும் சிறப்பாக எடுத்துச் சொல்லும்
பாடல் வரிகள்
தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை
தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையிலும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர், புரவி, ஆள் பெரும்படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே

விளக்கம்
பரந்து விரிந்து கிளை பரப்பி நிற்கும் பெரிய ஆலமரத்தில், சிவந்த பழங்கள் நிறையவே பழுத்து இருக்கும். அந்த ஆலின் பழங்களில் சின்னஞ்சிறிய விதைகள் ஏராளமாக இருக்கும். அவை அளவினில் சிறிய மீன்கள் இடும் முட்டைகளைவிட மிகச் சிறியவை. ஆனாலும் அந்த விதைகள் மண்ணில் சேர்ந்து செடியாக முளைத்து மரமான பின், மேலும் வளர்ந்து கிளைபரப்பி பெரிய ஆலமரமாக நின்றே நிழல் கொடுக்கும்.
அந்தப் பெரு மரத்தின் விரிந்த நிழல்பரப்பில், நான்குவித படைகளான யானைப்படை, தேர்ப்படை, புரவிப்படை, காலாட்படைகளுடன் அரசனும்கூட தங்கி இளைப்பாற முடியும்.
அது போலவே, மிகக் குறைந்த அளவேயுள்ள பொருள் வசதி படைத்தவர்களாகவே இருப்பவர்கள்கூட, உதவுகின்ற எண்ணம் கொண்டிருந்தால், அவர்களால் எவ்வாறேனும் பிறர்க்கு உதவ இயலும்.
இவ்வாறாக, பிறர்க்கு உதவுவதற்கு பொருளைவிட உதவும் மனப்பாங்குதான் முக்கியம் என்று இந்த வரிகள் அறிவுறுத்துகிறன.
மேலும், பிறருக்கு உதவாத தன்மையினையும் அழகான உவமையுடன் எடுத்துச் சொல்கிறது.
தேம்படு பனையின் திரள்பழத்து ஒருவிதை
வான்உற ஓங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே!

அதிகமான செல்வச் செழிப்புடன் வாழ்கின்றவர்கள்கூட, பிறருக்கு உதவி செய்யும் மன ஈரம் சிறிதுமற்றவர்களாக இருப்பதை அதிவீர ராம பாண்டியர் இவ்விதம் வருத்தத்துடன் பதிவிடுகிறார்.
அதாவது, ஓங்கி உயர்ந்து நிற்கும் பனை மரத்தின் பழங்களின் அளவும், அவற்றுள்ளே பதிந்த விதைகளின் அளவும் கூட பெரியதே. ஆனாலும், நெடிதுயர்ந்து நிற்கும் அந்தப் பனை மரத்தின் நிழலிலோ, ஒருவர் ஒண்டி நிற்பதே இயலாத காரியம். நிழல் தராத இந்தப் பனை மரத்தினைப் போன்றவர்கள் வேண்டிய செல்வம் படைத்திருந்தாலும் உதவும் மனம் இல்லாதவர்கள்.
இவ்விதமாக பிறருக்கு உதவுவதையும் உதவாமல் இருப்பதையும் சீரிய உவமைகளோடு மனத்தின் பாங்கோடு இணைத்து சொல்லப்படுகிறது.
ஒருவரிடம் பொருள் அதிகம் இருப்பதும் குறைவாக இருப்பதும் பொருட்டல்ல. உதவும் மனநிலை ஒன்றே அவசியம் என்கிறார் அதிவீர ராம பாண்டியன்.
மிகச் சிறியவர்களாக குழந்தைகள் இருக்கும்போதே இத்தகைய வரிகள் மனதில் பதிந்து விட்டால் வாழ்வு செம்மைப்படும். நம் குழந்தைகளுக்கு இவற்றையெல்லாம் சொல்லித் தர வேண்டியது நம் கடமை.

Leave a comment
Upload