தொடர்கள்
பேரிடர்
"நிலச்சரிவு அதிர்ச்சியில் இருந்து மீளுமா நீலகிரி " -ஸ்வேதா அப்புதாஸ்

கடந்த மாதம் 23 ஆம் தேதி நீலகிரி மாவட்டம், கோவை மாவட்ட எல்லையான பர்லியார் மலை பகுதியில் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குறுகிய சாலையில் மிக பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் ஜனகராஜ் பரிதாபமாக இறந்து போனது வருத்தமான விஷயம்.

2026101809041326.jpeg
இந்த பகுதி நிலச்சரிவு அபாயம் கொண்ட பகுதி என்பது பல வருடங்களுக்கு முன்னே எச்சரிக்கை செய்யப்பட்டது தான் என்றாலும் நிலச்சரிவு ஏற்படும்போது மட்டும் உஷாராகி ஒரு சில தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.
1978 ஆம் ஆண்டு நீலகிரி முழுவதும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் இந்த மலை மாவட்டம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மலைகளின் அரசி சந்தித்த முதல் நிலச்சரிவு 1881 ஆம் வருடம்
1824 ஆம் வருடம் அவலாஞ்சி பகுதியில் உள்ள 'குடிக்கெடே' மலையில் தொடர் எட்டு நாள் கடும் மழை கொட்டி தீர்க்க மிக பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை
அக்டோபர் 21 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை தொடரும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குன்னூர் மலை பகுதியை மிகவும் பாதிப்புக்குள்ளாகிறது என்பதும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரிய பாதிப்புகள் இன்னும் நீலகிரியின் நினைவுகளில் மறையாத வடுக்கள்.

2026101809045308.jpeg
நமக்கெல்லாம் தெரிந்த நிலச்சரிவுகள் 1978 பெருவெள்ளம் நிலச்சரிவு, 1990,1993 மறக்கமுடியாத குன்னூர் மரபாலம் நிலச்சரிவு பல உயிர்கள், பேருந்துகள், வாகனங்கள் என்ன ஆனது என்று இது நாள் வரை தெரியாத ஒன்று !
1990,1998,2001,2005, 2006, 2009,2021 மற்றும் 2023 ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான உயிர்கள் பறிபோயின.
பருவமழை துவங்கி எட்டு நாட்களில் 250 முதல் 300 மி மீ மழை பொழிவு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே புவியியல் ஆராய்ட்ச்சியாளர் தனவேலு 1993 மற்றும் 2011 நிலச்சரிவை நேரில் ஆய்வு மேற்கொண்டு பர்லியார் கல்லாறு குன்னூர் மற்றும் கேத்தி பள்ளத்தாக்கு வடகிழக்கு பருவமழை நேரத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு மிக அதிக மழை பொழிந்து நிலச்சரிவு ஏற்படுகிறது.

20261018090755202.jpeg
இதற்கு காரணம் இந்த பள்ளத்தாக்குகளில் திட்டமிடாத வளர்ச்சி பணிகள், மலை சரிவுகளை பாதுகாப்பாக வைக்காததும், மழை நீர் கால்வாய்களை மறைத்து கட்டிடங்களை சரிவில் கட்டுவதும் நிலச்சரிவுக்கு மிக முக்கிய காரணம்.
மலை சரிவுகளில் செங்குத்தாக வெட்டி மண்ணை அகற்றும்போது மண் இளகி நிலச்சரிவு ஏற்படுகிறது இதை தடுத்து நிறுத்துவது மிக முக்கியம்" என்று கூறியிருக்கிறார்.

நீலகிரி ஆவண காப்பக மைய இயக்குனர் வேணுகோபால் தர்மலிங்கம் சற்று ஆவேசமாக பேசினார்,

20261018090938182.jpeg
"வருடந்தோறும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை வந்து பெரிய அழிவை ஏற்படுத்துவது தெரிந்த ஒன்று, வானிலை அறிக்கை நம் மாவட்டத்திற்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பு என்பதை இந்த மாவட்ட நிர்வாகம் புரிந்துகொள்வதில்லை.
எந்த முன்னேற்பு நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவதில்லை.
எதுவுமே நடக்காதது போல தான் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவியாதண்ணீரு நடந்து கொள்கிறார் எந்த ஆலோசனையும் இவர் கேட்பதில்லை.
கனமழை என்ற அறிவிப்பு வந்தால் ஏன் இரவு நேர போக்குவரத்தை நிறுத்த கூடாது. எதிர் வரும் காலங்களில் வடகிழக்கு பருவமழை நேரத்தில் நிலச்சரிவு என்பது தவிர்க்கமுடியாத ஒன்று என்பதை இந்த மாவட்ட ஆட்சியர் ஏன் புரிந்து கொள்வதில்லை என்பது புரியாத புதிர்.

20261018091426138.jpeg
இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் நீலகிரியில் மொத்தம் 156 நிலைசரிவு மிக அபாய பகுதிகளாக உள்ளன என்று அறிவித்துள்ளனர். அந்த இடங்களை அடையாளம் கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் மற்ற இடங்கள் ஆபத்தில் இருந்து தவிர்க்க பட்டது என்று எடுத்துக்கொள்ள முடியாது.
2025 ஆம் வருடம் இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் வழங்கின அறிக்கையை பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டும். ஏன் மாவட்ட நிர்வாகம் பல இயற்கை உண்மைகளை மறைக்க வேண்டிய அவசியமில்லை விரைவில் குன்னூர் மேட்டுப்பாளையம் பர்லியார் சாலையை போக்குவரத்துக்கு திறந்து விடுவது இரண்டு மாவட்ட நிர்வாகத்தின் கடமை என்பதை உணர்ந்து நிலச்சரிவு சாலை பணியை திறம்பட முடிக்கும் பணியை செய்வது சிறந்தது " என்று கூறுகிறார்.
மேலும் அவர் கூறும்போது,
" 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் கூறியது ஒன்பது தொழில்நுட்ப நிபுணர்கள் குழு ஆய்வு செய்து 283 இடங்களில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை கொட்டி தீர்க்கும் போது நிலச்சரிவு அபாயம் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்க்க அவலாஞ்சி போன்ற பகுதிகளில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டது. அன்றைய மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா இந்திய புவியியல் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை படி 77 நிலச்சரிவுகள் மேலும் 50 நிலச்சரிவு பகுதிகள் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளதை ஆட்சியர் சுட்டிக்காட்டி இவையனைத்தும் 283 நிலச்சரிவு பகுதிகளுடன் இணைத்து கண்டறியப்பட்டுள்ளது என்று நீலகிரி மாவட்ட அரசு இதழில் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதய ஆட்சியர் லட்சுமி பவியாதண்ணீரு கூறியிருப்பது, " மாவட்டத்தில் 2017 முதல் 2021 வரை ஆராயப்பட்ட 283 நிலச்சரிவு அபாய பகுதிகள் என்பது அறிவியல் பூர்வமாக நடைபெறாத அறிக்கை.
நகராட்சி மற்றும் உள்ளாட்சி அலுவலர்கள் மற்றும் தாசில்தார்களை கொண்டு தயாரிக்க பட்டது. பின்னர் இந்திய புவியியல் ஆராய்ட்சியாளர்களை தொடர்பு கொண்டு உன்னிப்பாக நிலச்சரிவு பகுதிகளை குறித்து அறிக்கை கேட்டபோது அவர்கள் 156 நிலச்சரிவு அபாயம் பகுதிகள் மட்டும் சரியானது என்று அறிவித்துள்ளனர் என்று கூறியிருப்பது கேள்விக்குறியாக உள்ளது.
எப்படி இந்த கணக்கு என்ற கேள்வி எழுந்தபொழுது ஆட்சியர் கூறியிருக்கிறார், " பல நிலச்சரிவு பகுதிகளில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு அபாயம் தவிர்க்கப்பட்டு தான் 156 இடங்கள் உள்ளது ". என்று கூறியுள்ளார்.

முன்னால் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா அரசு இதழில் பதிவு செய்துள்ள 283 நிலச்சரிவு பகுதிகள் தான் சரியானது என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள் நம்மிடம்.
தற்போது குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை பர்லியார் மலை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு மிக அதிகமானது தான்.
மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு 2024 ஜூலை 17 ஆம் தேதி பொறுப்பேற்ற அன்றே மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மிக அதிகமாக இருந்தது. பயங்கர பேய் காற்று வீசி ஏராளமான மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிப்பு வாகனங்கள் பாதிப்பு என்று ஆட்சியரை பயமுறுத்தியது இயற்கை.
அதற்கு பின் வயநாடு பயங்கர நிலச்சரிவு அதன் தாக்கம் நீலகிரி அவலாஞ்சி பகுதியில் இருந்தது.
ஆட்சியர் நீலகிரிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை வலியுறுத்தி கூறினார்.

20261018091807958.jpeg
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை நீலகிரி ஆட்சியாளர்களாக பொறுப்பேற்பவர்களுக்கு ஒரு சவாலாகவே அமைகிறது.

நிலச்சரிவு நடந்து 30 நாள் கடந்தும் இன்னும் போக்குவரத்துக்கு இந்த தேசிய நெடுஞ்சாலை திறக்கப்படவில்லை.
தேசிய புவியியல் ஆய்வக இயக்குனர் ராஜ்குமார் மிஸ்ராம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து ஆபத்தான பாறைகள் அகற்ற படவேண்டும் என்று கூற அந்த பாறைகள் அகற்றும் பணி மற்றும் சாலை விரிவாக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

20261018094327201.jpeg

பர்லியார் பஞ்சாயத்து தலைவர் பாஸ்கரனை தொடர்பு கொண்டு பேசினோம்,
" நிலச்சரிவு ஏற்பட்டு மிக பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்துள்ளோம்.
அந்த ஓட்டுநர் ஜனகராஜ் தப்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அது மிக வருத்தமானது.
எங்களின் வியாபாரம் எல்லாம் போய்விட்டது குன்னூர் அந்தோணியார் ஆலய பங்கு குரு யூஜின் மற்றும் மக்கள் நேரில் வந்து எல்லா உதவிகளையும் செய்தனர். அதே போல பஞ்சாயத் அலுவலகமும் உதவி செய்ததனால் கடந்த 30 நாட்களாக சமாளித்து வருகிறோம்.
தற்போது பாறைகள் அகற்றப்பட்டு குறுகிய சாலை விரிவாக்கப்பட்டு வருகிறது.
நான்கு பொக்லைன் இயந்திரங்களை கொண்டு ஜரூராக வேலை நடக்கிறது விரைவில் போக்குவரத்து துவங்கும் என்று காத்திருக்கிறோம் " என்கிறார்.
நீலகிரி லோக்கல் ராகம் டிவி பத்திரிகையாளர் ஸ்டீபன் ஜோ மற்றும் ப்ரனேஷ் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மிகவும் ரிஸ்க் எடுத்து சென்று வந்துள்ளனர்.

20261018092002122.jpeg

ஸ்டீபன் ஜோ கூறும் போது,
"நிலைசரிவு ஏற்பட்ட அன்று காலை நேரடியாக சென்று வந்தோம் மிக பெரிய பாதிப்பு தான். பல உயிர்கள் காப்பாற்ற பட்டது இறைவன் அருளால் தான்.
மீண்டும் கடந்த ஞாயிற்று கிழமை நடந்து கொண்டிருக்கும் பணிகளை பார்க்க சென்று வந்தோம் 14 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் சரிசெய்யப்பட்டு தற்போது பர்லியார் செக் போஸ்ட்டில் இருந்து குறுகிய சாலையில் சரிந்த மண் மற்றும் பாறைகள் அகற்றும் பணிகள் பொக்லைன் மற்றும் ஜேசிபி கொண்டும் நடந்து வருகின்றது.



மிகவும் கடினமான வேலை என்பது புரிகிறது. மண் அள்ள அள்ள சரிந்து கொண்டிருப்பது வருத்தமான விஷயம்.
நெடுஞ்சாலை பணியாளர்கள் மிக சிரமத்திற்கு இடையில் பணிபுரிகிறார்கள்.
விரைவில் பணி முடிந்து போக்குவரத்துக்கு இந்த தேசிய நெடுஞ்சாலை சாலை திறந்து விடும் முயற்ச்சி நடந்தாலும் முழுமையாக சாலை பணி முடிய ஒரு மாத காலம் ஆகலாம் என்பது தான் உண்மையாக தோன்றுகிறது" என்று கூறுகிறார்
இந்த நிலச்சரிவால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக வருவதால் 10கிலோ மீட்டர் கூடுதலாக இருப்பதால் அனைத்து பொருள்களுக்கும் விலை அதிகரித்துள்ளது.
நீலகிரி வாசிகள் அதிகமான சிரமங்களை சந்தித்து வருவது எவருக்கும் தெரிவதில்லை.