தொடர்கள்
ஆன்மீகம்
"ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்".. திருவண்ணாமலை தீபம்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

"One becomes many and many become one".. Thiruvannamalai Deepam..!!

“ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்” என்பது பிரபஞ்சத்தின் தோற்றம், இயக்கம் மற்றும் ஒடுக்கம் ஆகியவற்றை விளக்கும் ஒரு உயர்ந்த தத்துவக் கூற்று ஆகும்.

தத்துவத்தின் பொருள்:
ஏகன்: தனிமுதற் கடவுளான பரம்பொருள் (சிவபெருமான்) ஒருவனே.
அநேகனாகி: அந்த ஒருவனே அருவுருவமாகவும், எண்ணற்ற வடிவங்களாகவும், பல தேவர்களாகவும், உலகிலுள்ள அனைத்து உயிர்களாகவும் மற்றும் பஞ்சபூதங்களாகவும் விரிந்துள்ளான்.
அநேகன் ஏகனாகுதல்: இறுதியில் இந்த அநேகமான அனைத்துப் படைப்புகளும், வடிவங்களும் மீண்டும் அந்த ஒரே பரம்பொருளான சிவனிடமே ஐக்கியமாகின்றன (ஒன்றாகின்றன).

மேற்கூறிய தத்துவத்தை மக்களுக்கு எளிமையாக உணர்த்தும் நிகழ்வு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது நடைபெறுகிறது.
பரணி தீபம் (ஏகன் அநேகனாதல்). அதிகாலையில் மூலவர் சந்நிதியில் ஏற்றப்படும் ஒரு தீபத்திலிருந்து, ஐந்து தீபங்கள் ஏற்றப்படும். இது ஒரு பரம்பொருளே பஞ்ச பூதங்களாகவும், பல வடிவங்களாகவும் விரிவதைக்குறிக்கிறது.
மகாதீபம் (அநேகன் ஏகனாதல்). மாலையில் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில், காலையில் ஏற்றப்பட்ட அந்த ஐந்து தீபங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே அகண்ட தீபமாக மாற்றப்படும். பின்னர் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இது பலவாகப் பிரிந்த அனைத்தும் இறுதியில் அந்த ஒரு இறைவனிடமே ஒடுங்குவதை உணர்த்துகிறது.

"One becomes many and many become one".. Thiruvannamalai Deepam..!!

திருவண்ணாமலை தீபமும், தரிசன பலன்கள்:
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியான சிவபெருமான் வீற்றிருக்கும் தலமே திருவண்ணாமலை திருத்தலம். இங்குச் சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதனைக் காந்த மலை என்பர். காரணம், இம்மலையைத் தரிசிக்க வருவோரைக் காந்தம் போலக் கவர்ந்து மீண்டும் மீண்டும் இங்கு வரவழைக்கும். இந்த மலை கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.
இத்திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீப நாளை ஒட்டி இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மகாதீப திருவிழா பிரசித்தி பெற்றது. இம்மகாதீபம் இலக்கியங்களில் "சர்வாலய தீபம்"மற்றும் "கார்த்திகை விளக்கீடு" என்றும் அழைக்கப்படுகிறது. பத்து நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்கத் தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். பத்தாம் நாள் காலை கோயிலில் பரணி தீபம் ஏற்றிய பிறகு, மாலை வேளையில் அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய் தீபம் ஏற்றுவார்கள். மகா தீபம் ஏற்ற ஆறரை அடி உயரமுள்ள அர்த்தநாரீஸ்வரர் உருவம் பொறிக்கப்பட்ட ராட்சத இரும்பு கொப்பரையில் இரண்டாயிரம் கிலோ நெய்யை விட்டு, முப்பது மீட்டர் காடாத் துணியைச் சுருட்டி திரியாகப் போட்டு அதன் மேல் இரண்டு கிலோ கற்பூரத்தை வைத்து மகா தீபம் ஏற்றப்படும். இது மலையைச் சுற்றி முப்பத்தைந்து கிலோமீட்டர் தூரத்திற்குத் தெரியும். இந்த தீபம் தொடர்ந்து, பதினோரு நாட்கள் எரிந்து கொண்டிருக்கும்.

"One becomes many and many become one".. Thiruvannamalai Deepam..!!

அருணாசல புராணம் மற்றும் சைவ ஆகமங்களின்படி திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனமும் கிரிவலமும் பிறவிப் பெருங்கடலைக் கடந்து முக்தியையும் பாவ விமோசனத்தையும் தரும் மிக உயர்ந்த வழிபாடுகளாகக் கூறப்படுகின்றன.

"One becomes many and many become one".. Thiruvannamalai Deepam..!!