
சென்னை மாநகரில் குடும்ப சூழல் மற்றும் பெற்றோர் பொறுப்பின்மையால் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநகராட்சி ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 417 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் அவற்றில் மொத்தம் 1.11 லட்சம் மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். பத்தாம் வகுப்புகளில் சுமார் 7000 பேர், பதினோராம் வகுப்புகளில் 5000 பேர், பன்னிரண்டாம் வகுப்புகளில் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோரும் படித்து வருகிறார்கள். நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை குழந்தைகளின் எண்ணிக்கை அதிக அளவு உள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளில் பள்ளிகளில் சேரும் குழந்தைகளில் எத்தனை பேர் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வரை தொடர்கிறார்கள் என்று பார்த்தால் அதில் பாதி அளவு கூட இல்லாத நிலை காணப்படுகிறது. கடந்த 2025- ஆம் ஆண்டு மாநகராட்சி பள்ளிகளில் 7032 குழந்தைகள் கல்வியைப் பாதியில் கைவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னையில் ஆறாம் வகுப்பு முதல் கல்வியை பாதியில் நிறுத்திய சிறார்கள் பெரும்பாலோர் குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களால் குறி வைக்கப்பட்டு திசை மாற்றப்பட்டிருந்ததும் அந்த ஆய்வில் அதிர்ச்சி உள்ள தகவலாக இருக்கின்றது. இது போன்ற திசை மாறி செல்லும் குழந்தைகளை மீட்டு அவர்கள் மீண்டும் தங்கள் கல்வியை தொடர சென்னை மாநகராட்சி சிறப்பு திட்டம் மூலம் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. தற்போது 1066 குழந்தைகள் மீண்டும் தங்களது கல்வியைத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வியை பொறுத்தவரை எல்லாமே இலவசம் என்ற நிலையிலும் இவ்வளவு மாணவர்கள் இடைநிற்றல் என்பது யோசிக்க வேண்டிய கருத்து செய்தி. அப்படி கல்வியை தொடர முடியாத சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபட திசை திருப்பப்படுகிறார்கள் என்பதும் மிகவும் அபாயகரமானது. சிறார்களை புரியும்படி எடுத்து சொல்லி அவர்களை மீண்டும் பள்ளியில் சேர வைக்கும் முயற்சி எவ்வளவு முக்கியமோ அதேபோல் சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கும் போதிய விழிப்புணர்வும் உரிய ஆலோசனையையும் வழங்க வேண்டியது இன்றைய உடனடித் தேவை.
திருவண்ணாமலையில் தீபம் ஒரு புறம், திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை ஒரு புறம்...இவையெல்லாம் இருக்க...
நாம் அனைவரும் சேர்ந்து கல்வி தீபம் முதலில் ஏற்றுவோம்.

Leave a comment
Upload