தொடர்கள்
அழகு
கை கொடுத்த மருத்துவர்கள் !! -மாலா ஶ்ரீ

20261021070852641.jpg

மகாராஷ்டிர மாநிலம், புனே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரேயா சித்தனகவுடா. இவர், கடந்த 2016-ம் ஆண்டு மணிப்பால் நகரில் உள்ள தனியார் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வேதியியல் பாடப்பிரிவில் படித்து வந்துள்ளார். இதற்கிடையே, அதே ஆண்டு, செப்டம்பர் மாதம் விடுமுறை முடிந்து, புனேவில் இருந்து மணிப்பாலில் உள்ள பொறியியல் கல்லூரிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட பேருந்து விபத்தில் கல்லூரி மாணவி ஸ்ரேயாவின் 2 கைகளும் பலத்த சேதமடைந்தன.

மருத்துவமனையில் ஸ்ரேயாவின் உயிரைக் காப்பாற்ற, அவரது 2 கைகளிலும் முழங்கைக்கு மேல் மற்றும் கீழே உள்ள பகுதிகள் முற்றிலும் அகற்றப்பட்டன. இது ஒருபுறமிருக்க, கடந்த 2017-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நடந்த இருசக்கர வாகன விபத்தில், எர்ணாகுளம் ராஜகிரி கல்லூரியில் படித்த சச்சின் என்ற மாணவர் படுகாயமடைந்ததில் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவரின் கைகள் உள்பட பல்வேறு உடலுறுப்புகளை பெற்றோர் தானம் செய்வதற்கு முன்வந்தனர்.

இதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆசியாவிலேயே முதன்முறையாக, புனேவை சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரேயா சித்தனகவுடாவுக்கு, பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் சுப்பிரமணிய ஐயர் தலைமையில் 20 அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் 16 மயக்கவியல் நிபுணர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் இணைந்து, தானமாகப் பெறப்பட்ட கல்லூரி மாணவரின் 2 கைகளையும் சுமார் 13 மணி நேரத்துக்கும் மேலாக அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

20261021070943532.jpg

இந்த அறுவை சிகிச்சையில் கல்லூரி மாணவி ஸ்ரேயாவுக்கு, இறந்த மாணவரின் கை எலும்புகள், தமனிகள், நரம்புகள் மற்றும் தசைநாண்கள் நுண்ணிய முறையில் இணைக்கப்பட்டன. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, கல்லூரி மாணவி ஸ்ரேயாவுக்கு தானமாக பெறப்பட்ட மாணவரின் கைகள் கருமை நிறத்துடன் பெரிதளவில் இருந்தன. எனினும், அதற்கடுத்த சில ஆண்டுகளில் ஸ்ரேயாவின் உடலில் உள்ள ஹார்மோன்கள் மற்றும் சீரான ரத்த ஓட்டம் காரணமாக, அந்த 2 கைகளும் மெலியதாக மாறி, ஸ்ரேயாவின் இயல்பான சரும நிறத்துக்கேற்ப மாறியது, சர்வதேச மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியது.

கல்லூரி மாணவி ஸ்ரேயாவுக்கு சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அளிக்கப்பட்ட தீவிர பிசியோதெரபி சிகிச்சைக்குப் பிறகு, அவர் தனது 2 கைவிரல்களையும் அசைக்கும் திறனையும் உணர்ச்சிகளையும் மீண்டும் பெற்று மகிழ்ச்சியடைந்தார். பின்னர், தனது விடுபட்ட பொறியியல் தேர்வுகளையும் தானே கைப்பட எழுதி ஸ்ரேயா சித்தனகவுடா பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.