தொடர்கள்
அழகு
வர்க்களாவில் வற்றாத தீர்த்தம் - நேரடி ரிப்போர்ட் - பால்கி

20261020215510789.jpeg

இந்த நீர்வீழ்ச்சி, கேரளம் மாநிலத்தின் வர்க்களாவில் சிறு குன்றில் ஸ்ரீ ஜனார்த்தன சுவாமி கோயிலுக்கு கீழ் உள்ள ஸ்ரீராமர் கோவிலின் அருகே, ஒரு யானையின் வாய் போன்ற அமைப்பின் வழியாகக் கீழே உள்ள குளத்தில் இடைவிடாது கொட்டிக்கொண்டிருக்கிறது.

இந்த நீர்வீழ்ச்சிக்குச் சற்று கீழே உள்ள பாறையில் செதுக்கப்பட்ட ஒரு சிவலிங்கத்தைக் காணலாம்.

இந்த "நீர்வீழ்ச்சி", உண்மையில் ஒரு புனிதமான இயற்கையான நீரூற்று. இது குன்றின் மேலிருந்து வர்களா ஜனார்த்தன சுவாமி திருப்பாதங்கலில் இருந்து பிறப்பதாக அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள். அது கோயில் குளத்தில் (இது 'சக்கர தீர்த்தம்' என்றும் அழைக்கப்படுகிறது) வந்து விழுகிறது.

2,000 ஆண்டுகள் பழமையான வர்களா ஸ்ரீ ஜனார்த்தன சுவாமி கோயிலின் படிக்கட்டுகளுக்குக் கீழே

20261020215648568.jpeg

அமைந்துள்ள இந்த நீரோடை, முதன்மைக் கோயில் வளாகத்திற்கும் கீழே உள்ள குளத்திற்கும் இடையில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராம கோயிலுக்கு அருகிலேயே பாய்ந்து செல்கிறது.

தூய்மையான, மிகக் குளிர்ந்த நீர் கோயில் குன்றின் பக்கவாட்டிலிருந்து இயற்கையாகவே ஊற்றெடுத்து வருகிறது.

இந்த நீர் 'கல்பதி' (பண்டைய காலத்துக் கல் குழாய்கள்) வழியாகக் கீழே வழிநடத்தப்படுகிறது. இது ஒரு நீரூற்று போல கிரானைட் படிக்கட்டுகளின் மீது கொட்டி, அங்கிருந்து கீழே உள்ள குளத்தில் விழுகிறது.

சக்கர தீர்த்தம் (கோயில் குளம்)

2026102021573640.jpeg

இந்த நீரூற்று வந்து விழும் குளம் இந்து புராணங்களுடன் தொடர்புடையது.

பிரஜாபதிகள் (படைப்பாளர்கள்) தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள ஒரு இடத்தைக் கண்டறிய உதவுமாறு நாரத முனிவர் மஹாவிஷ்ணுவிடம் வேண்டிக்கொள்ள, மஹாவிஷ்ணுவும் தனது சுதர்சன சக்கரத்தைக் கொண்டு பூமியில் தாக்க, அந்த இடத்திலிருந்து இந்தத் தூய நீர் ஊற்று உருவானதாகக் கூறப்படுகிறது.

பக்தர்கள் குளத்திற்கு வந்து, அங்குள்ள கல் நீரூற்றின் கீழ் நின்று குளித்து, தங்களைச் சுத்தப்படுத்திக்கொள்கின்றனர். அதன் பிறகு, படிகளில் ஏறிச் சென்று இறைவனை வழிபடுகின்றனர்.