தொடர்கள்
வலையங்கம்
ஆண்களுக்கான எச்சரிக்கை

2026903073909964.jpeg

தமிழகத்தில் இறப்பு விகிதம் பெண்களை விட ஆண்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்பதும், அதுவும் குறிப்பாக இளைஞர்கள் மரணம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த ஒரு புள்ளிவிவரம் சமீபத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டில் தமிழகத்தில் 4 லட்சத்து 2 ஆயிரம் ஆண்கள் இறந்துள்ளனர். பெண்கள் 2 லட்சத்து 91ஆயிரம் பேர் தான் இறந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட பெண்களை விட ஆண்கள் இறப்பு கணக்கு ஒரு லட்சத்து பதினோராயிரம்.

15 முதல் 24 வயது உட்பட்ட ஆண்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 167 ஆனால், பெண்கள் எண்ணிக்கை 4,461 தான். 25 முதல் 35 வயது ஆண்கள் 17,135 பெண்கள் 6,177. 35 முதல் 44 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மரணம் 31,585 பெண்கள் 11,406 என்று அந்த புள்ளி விவரம் பயமுறுத்துகிறது.

இதில் கவனிக்க வேண்டிய கவலைப்பட வேண்டிய ஒரு முக்கிய விஷயம், இறந்து போகும் 86 சதவீத ஆண்கள் அந்த குடும்பத்துக்கு வருவாய் ஈட்டுபவர்களாக இருப்பதுதான். குடும்பத்தைத் தலைமை ஏற்று நடத்துபவர்கள் என்று இப்படிப்பட்ட ஆண்கள் தான் இறந்து போகிறார்கள் என்றும் அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இதற்கு காரணம் ஆண்கள் தங்களுக்கு இருக்கும் நோய் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் தெரிந்து கொள்ளாமல் இருப்பது தான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பெண்கள் இறப்பு குறைய காரணம் அவர்கள் கருவுற்றிருக்கும் போது எப்படியும் மருத்துவ பரிசோதனைக்கு அவர்கள் மருத்துவர்களை அணுகுகிறார்கள். அப்போது அவர்களுக்கு இருக்கும் உடல் உபாதைகள் பற்றிய பிரச்சனைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சையை அவர்கள் எடுத்துக் கொள்வதால் பெண்கள் மரணம் குறைகிறது என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஆனால் ஆண்கள் உடல் நிலையில் சரியான அக்கறை காட்டாதது போதைப்பழக்கம் போன்றவையும் அதிக இறப்புக்கு காரணம். பெரிய அளவு அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது தான் அவர்கள் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அதுவரை அவர்கள் மருத்துவமனையை எட்டிக் கூட பார்ப்பதில்லை.

ஆண்கள் மரணம் என்பது மக்கள் தொகை சார்ந்த பிரச்சனையாக மட்டும் பார்க்க கூடாது. குடும்ப பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்ற நோக்கில் இதை கவனிக்க வேண்டும். எனவே தகுந்த மருத்துவ சிகிச்சை மருத்துவப் பரிசோதனை போன்றவை கட்டாயம் என்ற விழிப்புணர்வை ஆண்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை மற்றும் பொறுப்பும் கூட.