தொடர்கள்
வலையங்கம்
அபத்தமான வாதம்

2026909203107661.png

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலத்தோடு இந்தியில் ஊர்களின் பெயரும், கிலோமீட்டர் எழுதப்பட்டது சர்ச்சையானது. இந்தி எதிர்ப்பார்கள் சுட்டிக்காட்டி கொதித்து எழ அதற்குப் பொறுப்பான இரு மாநில அதிகாரிகளை இடை நீக்கம் செய்துள்ளது தமிழக அரசு.

இதற்கு காரணம் தமிழக அரசு இரு மொழிக்கொள்கையில் உறுதியாக இருக்கிறதாம். தாராளமாக இருங்கள் யார் வேண்டாம் என்று சொன்னது. அதற்கும் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் இந்தி இருப்பதற்கும் என்ன சம்பந்தம் ? நெடுஞ்சாலைகளில் வட இந்தியர்கள் லாரிகளில் சரக்குகளை ஏற்றி வரும்போது அவர்களுக்கு படிப்பதற்கு ஏதுவாக ஹிந்தியில் பெயர் பலகை எழுதுவது வழக்கமான ஒன்றுதான். இந்த நடைமுறை எல்லா மாநிலங்களும் உள்ளது. அந்த மாநிலத்தின் மொழி அதற்கு அடுத்து ஆங்கிலம் அதன் பிறகு இந்தி என்ற நடைமுறை நெடுஞ்சாலைப் பலகைகளில் எழுதுவது நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது வழிகாட்டுதல் புரிதலுக்காக பெயர்களை எழுதுவதால் தமிழுக்கு முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதே அபத்தமான வாதம்.

உலகம் முழுவதும் சுற்றும் பிரதமர் அங்கெல்லாம் திருக்குறள் பெருமைகளை பேசுகிறார். சமீபத்தில் டெல்லி வந்த ரஷ்ய அதிபருக்கு ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பரிசாக வழங்கினார் பிரதமர். ஆனால் தமிழ் பற்றாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் திராவிட தலைவர்கள் குழந்தைகள் யாரும் தமிழ் படிப்பதில்லை அவர்கள் கல்வி முழுக்க முழுக்க வெளிநாட்டில் தான். அதேபோல் அவர்கள் நடத்தும் பள்ளியில் தமிழ் கற்றுத் தருவது கிடையாது. ஜெர்மனி இத்தாலி, ஜப்பான் போன்ற வேற்றுநாட்டு மொழிகள் தான் முக்கியத்துவம் தந்து சொல்லித் தரப்படுகிறது. இப்படிப்பட்ட தமிழ் எதிர்பாளர்களின் எதிர்ப்பை காரணம் காட்டி அப்பாவியான இரண்டு அதிகாரிகளை இடை நீக்கம் செய்வது அபத்தத்திலும் அபத்தம்.

ஒரு மொழி இன்னொரு மொழியை மேலாதிக்கம் செய்கிறது அல்லது செய்யும் என்ற வாதமே தவறு. உயர்கல்வியில் தமிழ் இல்லவே இல்லை. தமிழ் படிக்காமலேயே ஒருவர் முதுநிலை பட்டதாரி ஆகலாம். இதனால் பல்கலைக்கழகங்கள் தமிழுக்கு எதிரானது என்று சொல்ல முடியுமா? இந்தி எதிர்க்கும் அரசியல் ஆர்வலர்களிடம் திருக்குறள் பற்றியோ , சீவக சிந்தாமணி பற்றியோ, சிலப்பதிகாரம் பற்றிய கேள்வி கேட்டால் பேய் முழி முழிப்பார்கள். அவர்கள் தமிழ் பற்று இந்த லட்சணத்தில் தான் இருக்கும் .முதலில் அந்த இரு அதிகாரிகள் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்.

தவெகவும் நீர்த்துப் போன இந்த வறட்டு கொள்கையை முன்னெடுப்பது துரதிருஷ்டவசமானது.