
தமிழ்நாட்டில், தீராத நோய்களையும் தீர்த்து, மக்களால் வழிபடப்படும் சில முக்கியப் பிரசித்தி பெற்ற கோயில்களை மாவட்டம் வாரியாக பார்த்து வருகின்றோம் அந்த வரிசையில்… இந்த வாரம் தெற்கு தமிழக மாவட்டங்களில் (South Region) உள்ள சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டத்திலுள்ள தீராத நோய்கள் தீர்க்கும் சில கோயில்களைப் பார்ப்போம்…
சிவகங்கை மாவட்டம்
காளையார்கோவில் சொர்ணகாளீசுவரர் கோயில்:
இந்த கோயில் மருது சகோதரர்களின் வீர வரலாற்றோடும், பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கைகளோடும் நெருங்கிய தொடர்புடையது. இக்கோயிலின் பிரம்மாண்டமான இராஜகோபுரம் பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகியோரால் கட்டப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கோபுரம் தெரியும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் வளாகத்திற்குள் சொர்ணகாளீஸ்வரர், சோமேஸ்வரர் மற்றும் சுந்தரேஸ்வரர் ஆகிய மூன்று சிவன் சந்நிதிகள் தனித்தனி அம்பாள் சந்நிதிகளுடன் அமைந்துள்ளன. தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும் இது போற்றப்படுகிறது.
இங்குள்ள காளீஸ்வரரை நெஞ்சுருக வழிபட்டு, இங்கு வழங்கப்படும் விபூதி பிரசாதத்தை நெற்றியில் அணிந்து, நீரில் கலந்து உட்கொண்டால் தீராத காய்ச்சல், எலும்பு நோய்கள் மற்றும் உடல் பலவீனம் நீங்கும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கையாகும்.
பரியா மருதுப்பட்டி - பறியா மருதீஸ்வரர் கோயில்:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் - பொன்னமராவதி நெடுஞ்சாலையில் (சுமார் 18 கி.மீ தொலைவில்) அமைந்துள்ள பரியா மருதுப்பட்டி என்ற ஊரில் அருள்மிகு பறியா மருதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாகவும், மற்ற சிவலிங்கங்களைப் போல உருளை வடிவமாக இல்லாமல் சதுர வடிவ மேற்பகுதியுடன் காட்சியளிக்கிறார்.
இத்தலம் உடல் மற்றும் மனப் பிணிகளைத் தீர்க்கும் மிகப் பழமையான சிவதலமாகும். முற்காலத்தில் இங்கு மூலிகைகள் நிறைந்திருந்ததால், ஈசனுக்கு மூலிகைச்சாறு கொண்டு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
இத்தலத்தின் தல விருட்சமான மருத மரத்தின் இலைகளைப் பொடித்து நீருடன் கலந்து குடித்தால் பல்வேறு நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில்:

இக்கோயிலில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். சுயம்பு வடிவில் அருள்பாலிக்கும் இந்த அம்மன் கண்ணாத்தாள் என்றும் பக்தர்களால் போற்றப்படுகிறார்.
இத்தலத்து அம்மனை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் மற்றும் பார்வைக் கோளாறுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கோவனூர் முருகன் கோயில்:
இந்த பழமையான முருகன் கோயில் சிவகங்கையிலிருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ள பில்லூர் கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கோவனூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
அகத்தியர் மற்றும் போகர் போன்ற சித்தர்கள் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டதாகவும், 'பூநீர்' எனும் புனிதத் தீர்த்தம் உருவாகக் காரணமாக இருந்ததாகவும் ஐதீகம் உள்ளது.
மூலவர் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை போல் மிக அழகாகக் காட்சியளிக்கிறார்
திருச்செந்தூரைப் போலவே இங்கும் பக்தர்களுக்கு இலை விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது நாகதோஷம் நீக்கும் தலமாகவும், சித்த மருந்துகளுக்குரிய புனித இடமாகவும் கருதப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம்
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்:
இந்த கோயில் ஒரு முக்கிய ஆன்மீக மற்றும் பரிகாரத் தலமாகும். இராவணனை வதம் செய்த பிரமஹத்தி தோஷத்தைப் போக்க இராமபிரான் சிவபெருமானை வழிபட்டு, இந்த 22 தீர்த்தங்களை உருவாக்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
இங்குள்ள அக்னி தீர்த்த கடல் மற்றும் கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் (கிணறுகளில்) நீராடுவது பல்வேறு பாவங்கள், கர்ம வினைகள் மற்றும் உடலுக்கும் மனதுக்கும் மிகுந்த ஆரோக்கியத்தைத் தரும் என்பது அறிவியல் மற்றும் ஆன்மீக ரீதியான நம்பிக்கை. மூலவருக்கு நடைபெறும் ருத்திராபிஷேகம் மற்றும் சிறப்பு ஹோமங்கள் மூலம் மன அமைதி மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில்:

இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள மிகப்பழமையான இந்த சிவன் கோயில். உலகில் தோன்றிய முதல் சிவாலயமாகவும், சிதம்பரத்திற்கு முன்பே நடராஜர் நடனமாடிய தலமாகவும் இது கருதப்படுகிறது. இத்தலத்து இறைவனைத் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் போற்றிப் பாடியுள்ளார்.
இக்கோயில் தீராத நோய்களைத் தீர்க்கும் மற்றும் பல்வேறு தோஷங்களுக்கான சிறப்புப் பரிகாரத் தலமாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது.
இங்கு சுமார் ஆறடி உயரமுள்ள அபூர்வப் பச்சை மரகதக் கல்லால் ஆன நடராஜர் சிலை அமைந்துள்ளது. மரகதக் கல்லுக்கு மருத்துவக் குணங்கள் உண்டு என்பதால், இங்குச் சாத்தப்படும் சந்தனக் காப்பு மற்றும் அபிஷேகப் பிரசாதங்கள் தீராத நோய்களைக் குணப்படுத்தும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கையாகும்.
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்:
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவெற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு பாகம்பிரியாள் சமேத வன்மீகநாதசுவாமி திருக்கோயில் மிகப்பழமையான சுயம்புத் தலமாகும்.
இத்தலத்தின் மூலவர் சுயம்பு லிங்கமாக பழம்புற்றுநாதர் (வன்மீகநாதர்) என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இறைவனின் இடப்பாகத்தை விட்டு நீங்காதவள் என்பதால் அம்பாள் பாகம்பிரியாள் என்று அழைக்கப்படுகிறாள். மேலும் இவரை 'மருத்துவச்சி அம்மன்' என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர்.
இத்தலத்திற்கு வந்து வழிபடுவதால் தீராத நோய்கள், தோல் நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்றவை குணமாகும் என்பது ஐதீகம்.
நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில்:
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நயினார்கோவில் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோயிலாகும்.
முல்லா சாகிப் என்ற இஸ்லாமிய மன்னரின் பேச இயலாத மகள், இக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டபோது "அல்லா நயினார் ஆண்டவர்" என்று பேசியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவ்வூர் நயினார்கோவில் எனப் பெயர் பெற்றது
இக்கோயிலில் நாகப்புற்று வழிபாடு மிகவும் விசேஷமானது. இங்குப் பிரசாதமாக வழங்கப்படும் புற்று மண் தீராத நோய்களைக் குணப்படுத்தும் அருமருந்தாகப் பக்தர்களால் நம்பப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்:

இத்திருக்கோயில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாகவும், கடற்கரையில் அமைந்துள்ள ஒரே ஸ்தலமாகவும் விளங்குகிறது. சூரபத்மனை வதம் செய்த பிறகு, முருகப்பெருமான் தன் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூஜை செய்த தலமாக இது போற்றப்படுகிறது
இங்குள்ள கடலில் (நாழிகிணறு மற்றும் கடல் அலைகளில்) நீராடுவது உடல் மற்றும் மனத் தூய்மையைத் தரும் என நம்பப்படுகிறது.
ஆதிசங்கரர் தன் வயிற்று வலி நீங்க இத்தலத்திற்கு வந்து முருகனை வேண்டி, 'சுப்பிரமணிய புஜங்கம்' என்னும் நூலைப் பாடி இலை விபூதி பிரசாதத்தால் நோய் நீங்கப்பெற்றார்.
12 நரம்புகள் கொண்ட பன்னீர் இலையில் (முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களைக் குறிப்பதால், 'பன்னிரு இலை' என்பது மருவி 'பன்னீர் இலை' என அழைக்கப்படுகிறது) வைத்து பிரசாதமாக வழங்கப்படும் இந்த விபூதி தோல் நோய்கள், நரம்புத் தளர்ச்சி, மனநலப் பாதிப்புகள் மற்றும் நாள்பட்ட வியாதிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்ற ஆழமான நம்பிக்கையுடன் பக்தர்கள் இதனை நெற்றியில் அணிந்தும், சிறிதளவு உட்கொண்டும் வழிபடுகின்றனர்.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில்:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க குடைவரை கோயில். இக்கோயில் சுமார் 300 அடி உயரமுள்ள மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட பாண்டியர் காலக் கலைப்படைப்பாகும். முருகப்பெருமான் மேற்கு நோக்கி வீற்றிருக்கும் அபூர்வ தலங்களில் இதுவும் ஒன்றாகும். இத்தலம் கச்சியப்பரால் "ராஜயோக தலம்" எனப் போற்றப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் மற்றும் தோஷங்கள் (பாலாரிஷ்ட தோஷம்) நீங்க, பெற்றோர்கள் இங்குள்ள முருகப்பெருமானுக்குத் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்வது வழக்கம். மேலும் இது செவ்வாய் மற்றும் குரு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. கோயில் வளாகத்தில் உள்ள ருத்ராட்ச பந்தலின் கீழ் அமர்ந்து வழிபடுவது மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் தருவதாகக் கூறப்படுகிறது.
தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோயில்:
இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் 88-வது தலமாகவும், நவதிருப்பதி தலங்களில் இது சுக்கிர பகவானுக்கு உரிய தலமாகவும் போற்றப்படுகிறது. வருண பகவான் தன் சாபம் நீங்க இத்தலத்தில் தவம் செய்து மழை பெற்றதால் இது 'வருண க்ஷேத்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
பூமிதேவி துர்வாச முனிவரின் சாபத்திலிருந்து விடுபட தாமிரபரணி நதியில் நீராடி, மீன் வடிவத்திலான மகர குண்டலங்களை (மகர நெடுங்குழை) எடுத்துப் பெருமாளுக்குச் சமர்ப்பித்து அருள் பெற்ற ஸ்தலம்.
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் உள்ள புனிதத் தீர்த்தங்களில் நீராடிப் பெருமாளை வழிபடுவது பக்தர்களின் மனக்கவலைகளையும், தீராத பிணிகளையும், கிரக தோஷங்களையும் போக்கும் என்பது ஐதீகம்.
வசவப்பபுரம் அலங்காரச் செல்வி அம்மன் கோயில்:
திருநெல்வேலி - தூத்துக்குடி நெடுஞ்சாலைக்கு அருகே வசவப்பபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு சக்திவாய்ந்த வழிபாட்டுத் தலமாகும்.
இத்தலத்தின் அம்மன் அருளால் அம்மை நோய் மற்றும் உடல் உபாதைகள் தீரும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் உள்ளது.
அடுத்த வாரம் தொடர்ந்து தெற்கு தமிழக மாவட்டங்களில் தமிழக மாவட்டங்கள் (South Region) உள்ள திருநெல்வேலி (நெல்லை), தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தீராத நோய்கள் தீர்க்கும் சில கோயில்களைப் பார்ப்போம்…

Leave a comment
Upload