தொடர்கள்
அரசியல் வானின் அரசிகள் - 7 - மரியா சிவானந்தம்

2019082018482646.jpg


பரந்து விரிந்து, கிளைகள் பரப்பி, விழுதுகள் இறக்கி, வேரூன்றி பறவைகள் தங்கிச் செல்லும் ஆலமரத்தின் அடியில் சிறு செடிகள் செழித்து வளருவதில்லை. அரசியலில் இது மறுக்க முடியாத நிதர்சனம். மக்களின் மனதை வென்று, புகழும், செல்வாக்கும் மிக்க கட்சிகளை உருவாக்கி பெருந்தலைவர்களாக உருவானவர்கள் நிழலில் வளருபவர்கள் பெரிய அளவில் சாதிப்பதில்லை.


இந்த கூற்று திராவிடக் கட்சிகளுக்கு, குறிப்பாக அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு மிகவும் பொருந்தும். எம்ஜிஆர் , ஜெயலலிதா என்ற இரு மாபெரும் ஆளுமைகள் தலைமை வகித்து வழி நடத்திய அக்கட்சியில், அவர்களைத் தாண்டி, அல்லது அவர்களை விஞ்சி சாதனை படைத்தவர்கள் எவரும் இலர். அவர்கள் வரைந்து வைத்த வட்டத்துக்குள், தம் எல்லைகளைத் தாண்டாமல் திறமை காட்டியவர்களே எல்லோரும். இதில் பெண் தலைவர்களும் விதி விலக்குகள் அல்லர்.


1972 ஆம் ஆண்டு அ .தி .மு.க கட்சி ஆரம்பித்து, அடுத்த தேர்தலில் 1977 லேயே ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர், இறக்கும் வரை முதல்வராகவே இருந்தவர். பத்தாண்டு காலம் ஆட்சி செய்த அவர் மரணம் அடைந்த பின் அவர் மனைவி வி.என். ஜானகி இராமச்சந்திரன் முதல்வர் ஆனார் . அப்போதே கட்சியில் தனியிடம் பெற்று இருந்த ஜெயலலிதா அவர்கள் தன் செல்வாக்கை பயன்படுத்த, கட்சி இரண்டாக உடைந்தது.

ஜா அணி , ஜெ அணி என்று இரண்டாக பிரிந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி இராமச்சந்திரன் தோற்றுப் போனார். தமிழக சரித்திரத்தில் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெயரைப் பொறித்தவர், 24 நாட்களுக்குள் (7-1-1988 முதல் 30 -1-1988 வரை) முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். அதன் பின், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டதும், பின் வந்த தேர்தலில் கலைஞர் கருணாநிதி முதல்வர் ஆனதும் தனிக்கதை.

ஜானகி இராமச்சந்திரன் கணவனின் நிழலில் வாழ்ந்தவர். அரசியலின் தந்திரங்களை அறியாதவர். கணவர் மறைந்த துயரில் இருந்து வெளி வர இயலாமல் மேடைகளில் அவர் கண்ணீர் பெருக்கிட, ‘கண்ணீர் அரசியல்’ என்று மற்றவர் பகடி செய்ததும் அவரை மேலும் வலுவிழக்கச் செய்தது. ஆனால், கணவர் வழி நின்று, வள்ளல் தன்மையுடன் எம்ஜிஆர் அவர்களின் இறுதி உயில்படி சொத்துக்களை தர்ம காரியங்களுக்கு அள்ளித் தந்தார். சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள சொத்தினை, அ.தி.மு.க கட்சி அலுவலகமாக்க தந்தார். கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை ஏழைக் குழந்தைகளும், ஊனமுற்றோரும் பயன் பெறும்படி தானமாக தந்தவர், எம்.ஜி.ஆர் உருவாக்கிய காது கேளாதோர் பள்ளியின் நிர்வாகத்தினை கவனித்தபடி, தனது இறுதிக்காலத்தை கழித்த ஜானகி அம்மையார், 1996 ஆம் ஆண்டு தனது 73-வது வயதில் மறைந்தார்.


1991ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி மறைந்த பின், தமிழகத்திலும் ஆட்சி மற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியில் உள்ள எல்லா அணிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, செல்வி ஜெயலலிதா தலமைப் பொறுப்பை ஏற்றார், தமிழகத்தின் முதல்வர் ஆனார்.

20190820184900190.jpg

ஒரு பேரரசிக்குரிய அத்தனை இலக்கணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவர். ஒரு அரசியின் தலமைப் பண்பு, அமைச்சரின் மதியூகம், தேர்ந்த ஒற்றரின் கூர்நோக்கு, படைத் தளபதியின் ராஜதந்திரம் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர். “Government? I am the Government!” என்ற சொற்றொடருக்கு பொருத்தமாக விளங்கியவர். அவர் ஏற்படுத்திய வெற்றிடத்தை இட்டு நிரப்ப ஒருவர் இனிமேல் தான் பிறக்க வேண்டும்.

அவரின் அறிவும், ஆற்றலும், மொழி வளமும், தொலைநோக்கும், அடித்தட்டு மக்கள் மேல் வைத்த அளப்பரிய அன்பும், அவரை உச்சத்தில் ஏற்றி வைத்தது. ஆறு முறை முதல்வராக இருந்தவர், பல நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்து, தனிப்பெரும் புகழ் பெற்றார். ஏழை பெண்களுக்குத் தங்கத்தாலி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கம், தொட்டில் குழந்தைகள் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மத்திய உணவுத் திட்டம், இலவச காலணிகள், இலவச மடிக்கணினிகள், கோவில்களில் அன்னதானம் என்று முடிவின்றி நீளும் பட்டியல். பல மைல்கள் நடந்துச் சென்று படித்த மாணவ மாணவியர் இன்று பட்டாம் பூச்சிகளாக சைக்கிளில் செல்வதை பார்க்கையில் அவர் நினைவு வருவதைத் தவிர்க்க முடியாது. அதே போல, ஒரு ரூபாய்க்கு இட்டிலியும், ஐந்து ரூபாய்க்கு சாப்பாடும் கிடைக்கும் ‘அம்மா உணவகங்கள்’ என்றும் அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும்.

ஏழை எளியவர் மேல் கருணையும் அன்பும் வைத்தவர். ஒரே பார்வையில் , அனைவரையும் கட்டியாளும் திறன் பெற்றவர் ஜெயலலிதா அவர்கள். அவர் மேல் வைக்கப்படும் விமர்சனங்களை கடந்து, அவரை நேசித்தவர்கள் ஏராளம். இன்றும் அவிழ்க்கப்படாத முடிச்சாக உள்ள அவர் இறப்பின் போது, கிரீம்ஸ் சாலையில் இரவு பகலாக காத்துக் கிடந்த மக்களே அவரது பலம். அவரது பலவீனங்கள் அவரை கோர்ட், வழக்குகள் என அலைய வைத்த போதும், இறுதி வரை உறுதி குலையாதவர். இறந்தும் வாழும் பேரரசி ஜெயலலிதா அவர்கள்.

20190820184932308.jpg

எம்.ஜி.ஆர். தனிக்கட்சி துவக்கிய போது, அவருடன் இணைந்து வந்தவர் சுலோச்சனா சம்பத். திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான

ஈ வே கி சம்பத் அவர்களின் துணைவியும், தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஈ வே கி.எஸ் இளங்கோவன் அவர்களின் தாயும் ஆவார் இவர். அ.தி.மு.க கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆகவும், தமிழக பாடநூல் வாரியம் உட்பட பல வாரியங்களின் தலைவராகவும் செயல்பட்டவர். இறுதிவரை அ.தி.மு.க கட்சியின் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த பெண்மணி இவர்.

பெண்களுக்கான தனித் தொகுதிகள், ரிசர்வ் தொகுதிகள் என்ற மாற்றங்கள் வந்த பிறகு பல பெண்கள் கட்சி சார்ந்து தேர்தலில் போட்டியிட்டு, அமைச்சராக அரசியல் வானில் வலம் வந்தனர். இந்திரகுமாரி, கோகுல இந்திரா, வளர்மதி என்று பலர் இவ்வரிசையில் உள்ளனர். அரசியல் சதுரங்கத்தின் காய் நகர்த்த கற்றவர்களாக இவர்கள் இருக்கலாம். ஆயினும் நிர்வாகத் திறமை மிக்க தலைவர்களாக, ஆளுமையும், சுயமும் கொண்டவர்களாக இவர்களை அடையாளம் காட்ட முடியவில்லை. தலைமைக்கு கட்டுப்பட்டு செயலாற்ற வேண்டிய இவர்கள் தனித்துவம் காட்டியதில்லை. ஏனெனில் ஆலமரத்தின் நிழலில் சிறுசெடிகள் தழைப்பதில்லை.

- தொடரும்