தொடர்கள்
கவிதை
"எனக்கு கவிதை வரவில்லையே யாஸ்மின்?!"

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..
ஒரு கோல மயில் என் துணையிருப்பு.. 

- கண்ணதாசனின் பிரபலமான இப்பாடல், உலகப் பிரசித்தி பெற்ற பாரசீக கவிஞர் உமர்கய்யாமின் கவிதையைத் தழுவி எழுதப்பட்டது. 

யார் உமர்கய்யாம்?!

’’எனக்கு கவிதைகளைவிட கணிதமும் ஜோதிடமும்தான் அதிகம் பிடிக்கிறது யாஸ்மின்’’ - உமர்கய்யாம் தன் காதலி யாஸ்மிடனிடம் சொன்னதற்கு,
‘’என்னை நீ எந்தளவு விரும்புகிறாயோ அதே அளவு காதலுடன் அவற்றிலும் நீ ஈடுபட்டால் வெற்றி உனக்கே” - என்றாள் யாஸ்மின்.
‘’நிஜமாகத்தான் சொல்கிறாயா?’’ என்று பூரித்து போன உமர்கய்யாம், பின்னாளில் உலகமே போற்றும் கவிஞராகத்தான் அறியப்படுகிறார்.

முன்னாளில் பாரசீகம் என்று அழைக்கப்பட்ட இன்றைய ஈரானில் கி.பி. 1040-ல் ஒரு கூடாரம் தைப்பவரின் மகனாகப் பிறந்தார் உமர்கய்யாம். ஜோதிடம், வான சாஸ்திரம், கணிதம், கவிதை என்று எல்லாவற்றிலும் அசாத்திய ஈடுபாடு! ஜோதிடத்தை தானே கற்றுத் தேர்ந்தார். அச்சமயம் பாரசீகத்துக்கும் ரோமாபுரிக்கும் இடையே போர் மூண்டது. போருக்கு தலைமை தாங்கியவர் பாரசீக இளவரசர்.

அப்போது உமர்கய்யாம் அவரிடம் சென்று ‘’இப்போர் இரண்டே நாளில் முடிவடையும். வெற்றி நமக்கே.. ஆனால் போருக்குப் பின் நம் அரசரும் ரோமாபுரி அரசரும் இருவருமே இறப்பார்கள்’’ என்று ஆரூடம் கூறினார் உமர்கய்யாம். அதேபோல்தான் நடந்தது.

‘’நான்தான் சொன்னேனே.. எதையும் ஈடுபாட்டுடன் செய்தால் வெற்றி பெறுவாய் என்று!” -என்று உமர்கய்யாமை கட்டியணைத்து முத்தமிட்டாள் அவர் காதலி யாஸ்மின்.

ஆனால் வாழ்க்கை வேறு வகையில் விளையாடியது! யாஸ்மினை பிரிந்து ஆயிஷாவை மணந்து அவளையும் பிரிய நேர்ந்து என்று விதி உமர் வாழ்வில் புகுந்து விளையாடியது. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட உமர்கய்யாம், மது போதைக்கு அடிமையானார். அப்போது அவர் எழுதிய ’ருபையாத்’ உட்பட பல கவிதைகள்தான் இன்று, அனைவரையும் போதையில்லாமலேயே மயங்க வைக்கிறது.

உமர்கய்யாம் பாடல்களை கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை மிக அழகாக தமிழில் பொழிபெயர்த்துள்ளார். 
சாம்பிளுக்கு உமர்கய்யாமின் ஒரு பாடலும் அதற்கு கவிமணியின் தமிழ் மொழிபெயர்ப்பும்!...

20171106143615611.jpg

உமர்கய்யாமின் பாடல்..

Here with a loaf of bread
Beneath the bough
A flask of wine, 
a book of verse and 
thou beside me 
singing in the wilderness
And wilderness is paradise

இதற்கு கவிமணியின் தமிழாக்கம்..

வெய்யிற் கேற்ற நிழலுண்டு 
வீசும் தென்றல் காற்றுண்டு 
கையில் கம்பன் கவியுண்டு,
கலசம் நிறைய மதுவுண்டு, 

தெய்வ கீதம் பலவுண்டு, 
தெரிந்து பாட நீயுண்டு, 
வையம் தரும் இவ்வளமன்றி, 
வாழும் சொர்க்கம் வேறுண்டோ?

- மதராஸிவாலி.
 
 

­