
இந்த இடத்தில் எழுத்து எனக்கு கைவந்த கதையை பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.
விருதுநகர் வி.ஹெச்.என்.எஸ்.என் கல்லூரியில் இளங்கலை ரசாயனம் படித்துக்கொண்டிருந்த நேரம். விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தேன். நடுநிசி நேரம். ஒரு கனவு.
அதில் ஒரு கதை காட்சியாகவே மனக்கண் முன் நடந்தேறுகிறது. விசுக்கிடலோடு எழுந்து, என்னுடைய நீண்ட சைஸ் கோடுபோட்ட நோட்டின் பின்னால் இரண்டு பக்கத்தில் அந்த கதையை மளமளவென எழுதினேன்.
பின்னாட்களில் திரைப்படத்துறையில் பணிபுரிய வேண்டும் என்றெல்லாம் நினைத்திராத பருவம். இலக்கியத்தின் வாசனை அறிந்திராத பருவம். மாணவ பருவம். அந்த கதையை அப்படியே அடியொற்றி சில ஆண்டுகளுக்கு பிறகு வாழ்வே மாயம் என்றொரு படம் வந்த போது எனக்குள் அப்படியொரு ஆச்சர்யம்.
நான் எழுதி வைத்திருந்த கதை கல்லூரி பின்புலத்தில் நடக்கிறது. மற்றபடி கதை அப்படியே அதே தான்.
பிற்காலத்தில் தான் கண்டுபிடித்தேன். அந்த கதையின் நதிமூலம் தேவதாஸ். நான் பிறந்திராத காலத்தில் வந்த தேவதாஸ் படத்தை நான் ரொம்ப தாமதமாக இருபத்தோறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் பார்த்தேன்.
பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து என் அறைக்கதவை தாழிட்டுக்கொண்டு ரொம்ப நேரம் அழுதேன்.
இது தான் என் முதல் எழுத்து. கதையாக அது சிறப்பாக கைகூடியிருந்தாலும் எழுத்து வசப்பட வேண்டுமென்றால் நிறைய பார்க்க வேண்டும்.
நிறைய படிக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். அப்படியாக தரமான உலக சினிமாக்களை தேடித்தேடி போய் பார்த்தேன்.
உலகின் தரமான இலக்கியங்களை தேடித்தேடிப்போய் படித்தேன். அழிவில்லாத, அள்ளஅள்ள குறையாத செல்வங்கள் அவை. அற்புதமான நடைமுறை வாழ்க்கைக்கான கல்வி அவை. வறண்டுபோன பாலைவனத்தில் மாட்டிக்கொண்டுவிட்டதாய் மனது தத்தளித்துக்கொண்டிருந்த தருணத்தில் பாலைவனச்சோலையாய் ஆகச்சிறந்த வடிகாலாய் எனக்குள் என்னைத்தேடி வந்து இலக்கியம் சேர்ந்து கொண்டது.
என்னை உயிர்ப்பித்தது. எனக்குள் ஒளிந்திருந்த படைப்பு சக்தியை வெளிக்கொண்டுவர காரணமாக இருந்தது.
எழுதுவதற்கு ஆதாரம் கதைக்கரு. ஒரு பொறி. அது நமக்குள் பல நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக ஊறிப்போய் ஒரு நாள் குதித்து வந்து நம்முன் நிற்கும்.
அந்தப்பொறி நமக்கு நடந்தவொரு விசயத்திலிருந்தோ, படித்ததிலிருந்தோ, பார்த்ததிலிருந்தோ, கேள்விப்பட்டதிலிருந்தோ, நம்மை பாதிக்கிற ஏதோவொன்றிலிருந்து எதிர்பாராதவொரு தருணத்தில் மின்னல் வெட்டில் காளான் பூப்பது போல பிரசன்னிக்கும்.
அதிலிருந்து தான் எழுத்து விளையாட்டு ஆரம்பமாகிறது. அந்தப்பொறி அதன் பிறகு படிப்படியாக கர்ப்பத்தில் வளர்வது போல நமக்குள் ஒரு கரு வளர ஆரம்பிக்கும்.
அதில் உள்ள கதாபாத்திரங்கள் தனக்கான குணாம்சங்களை தீர்மானிக்கும். கதையின் மையப்பிரச்னை முக்கிய கதாபாத்திரங்கள் வழியாக எப்படி எப்படி பயணித்து எந்த இடத்தில் தீர்வை எட்டுகிறது என்று யோசிக்கும். எங்கே துவங்கி, எங்கே முடிக்க வேண்டும் என்பதை எல்லாம் அந்த கதையே தீர்மானித்து, நம்மை அதன்போக்கில் வழிநடத்தும்.
எழுதலாமென மனது நினைத்து விட்டதும் முதலில் செய்தது ஸ்பிக்நகர் குவாட்டர்ஸ் நுழைவுவாயில் எதிராக ஒரு டைப்பிங் சென்டர் இருந்தது. அங்கே போய் தமிழ் டைப்பிங் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
சில நாட்களில் ஃபிங்கரிங் மட்டும் கற்றுக்கொள்ளலாம் என்று தான் சென்றேன். அங்கிருந்த ஸ்பிக்நகர் தோழிகள் அறிமுகமானவர்களாக இருந்ததாலும், அதை நடத்திக்கொண்டிருந்தவர் உங்களுக்கு ஃபிங்கரிங் பிரமாதமாக வருகிறது என்று உசுப்பேற்றிவிட, டைப்பிங் லோயரில் நான் ஒருவன் தான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தேன்.
உடனே அதை காரணம் காட்டி ஹையர் வரை பயிற்சி எடுக்க வைத்து விட்டார். பின்னாளில் அந்த டைப்பிங் இன்ஸ்ட்யூட்டில் நடந்த ரஸமான சம்பவங்களும் கதைகளாகி இருக்கின்றன. நான் இயக்கிய முதல் குறும்படமான நீ+நீ=நாம் ஒரு டைப்பிங் இன்ஸ்ட்யூட் பின்புலத்தில் தான் நடக்கும்.
தீவிர இலக்கியங்களை பிரதானமாக படித்தாலும், மனஇறுக்கத்தை தளர்த்த வெகுசன எழுத்துகளிலும் சிலருடைய படைப்புகளை பொறுக்கி எடுத்து படிப்பேன். அப்படித்தான் சுஜாதா எனக்கு அறிமுகமானார். எழுத்து நடை என்று வருகிறபோது ஆரம்ப எழுத்தாளர்கள் பெரும்பாலும் அவருடைய எளிய, சுவாரஸ்யமான எழுத்து நடையின் தாக்கத்தில் தான் எழுத ஆரம்பிப்பார்கள்.
பிற்பாடு படிப்படியாக அவரவர்களுக்கான தனித்துவ நடையை அவர்களின் வாழ்க்கை சூழல் தீர்மானித்து தரும். சுஜாதா கதைகளை எடுத்து பகுப்பாய்வு செய்வேன்.
கருவை அல்ல. எழுத்தின் நடை குறித்து அவதானிப்பேன். ஒவ்வொரு அத்தியாயத்திலும் அல்லது காட்சியிலும் வருகிற பின்புலம் அதாவது இடங்கள், அதன் சூழ்நிலைகள் குறித்த விவரணைகள் எழுத வேண்டும்.
உரையாடல் இடைஇடையே வருகிறது. ஆங்காங்கே கதாபாத்திரங்கள் மனதிற்குள் பேசிக்கொள்கின்றன. அதை நனவோடை உத்தி என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்த மூன்று விசயங்களும் ஒரு கதை எழுதுகிறபோது முக்கியமாக தேவை என்பதை புரிந்து கொண்டேன். அவர் செயப்படுபொருளோடு சேர்ந்து வரும் ஐந்தாம் வேற்றுமை உருபான ‘ஐ’ என்கிற எழுத்தை பெரும்பாலும் அந்த இடங்களில் தவிர்ப்பார்.
அது வாசகர்களுக்கு தடை இல்லாமல் வாசிக்க உதவும் என்பார்.
கி.ராஜநாராயணன் செந்தமிழில் உரையாடாமல் நடைமுறை பேச்சுத்தமிழில் உரையாடலை அமைக்க காரணமாக இருப்பவர்.
ஒரு விசயத்தை பேசும்போதோ, சிந்திக்கும் போதோ அது ஒரே நேர்கோட்டில் பயணிக்காமல், கிளைகள் விட்டுக்கொண்டு அந்த கிளைகளிலிருந்து துணைக்கிளைகள் பரப்பி என அந்த பேச்சோ, சிந்தனையோ பயணிக்கிறதென்றால் அவருக்குள் படைப்புத்திறன் இருப்பதாக புரிந்து கொள்ளலாம் என்று சுஜாதா குறிப்பிடுகிறார்.
அது எங்கெங்கோ பயணித்து இறுதியில் சேர வேண்டிய இடத்தில் வந்து ஒன்று சேர்ந்து விடும் என்பார். அப்படியான போக்கு என்னிடம் எப்போதும் உண்டு.
அவர் சொன்ன மாதிரி இறுதியில் சேர வேண்டிய அந்தப் புள்ளியில் வந்து சேர்ந்து விடுவேன்.
உருவாக்கும்போது, ஒரு திரைக்கதையிலோ, நாவலிலோ கிளைக்கதைகள் ஒன்றோ இரண்டோ தேவைப்படும். அவை வெவ்வேறு பரிமாணங்களில் மையக்கருவிற்கு உதவுவதாகவோ, வலு சேர்ப்பதாகவோ வந்து கைகோர்க்கும். திரைக்கதைகளில் கிளைக்கதைகளை கையாளுவதில் கே.பாலசந்தர் திறமையானவர்.
கால அளவில், எந்த அளவு கிளைக்கதைகள் இருக்க வேண்டும், அவை எப்படி வெவ்வேறு கோணங்களில் கிளைநதிகளாக பிரிந்து பயணித்து, நிறைவுப்பகுதியில் கச்சிதமான கடலில் அவை சங்கமிப்பது போல சங்கமிக்க வேண்டும் என்பதை கவிதையாக கையாளுவார். தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்றவர்கள் நாவல்களில் அதை அநாயாசமாக செய்து காட்டியிருக்கிறார்கள்.
கதை எழுத ஆரம்பித்த கதைக்கு வரலாம். மேலே குறிப்பிட்ட சூட்சுமங்களை உள்வாங்கிக்கொண்டு, எனக்கேயான பிடித்தங்களை, விருப்பங்களை அதற்குள் பரிட்சார்த்தம் பண்ணிப்பார்க்க ஆரம்பித்தேன்.
எழுத்தாளர் ஜி.நாகராஜன் மரிக்கும்போது ஒரு குறிப்பு விட்டுச்சென்றிருந்தார். தான் மனதில் எழுத நினைத்ததை முழுமையாக எழுத முடியவில்லை என்கிற வருத்தம் இப்போதும் இருக்கிறது என்று இருந்தது அவர் விட்டுச்சென்றிருந்த குறிப்பு. அந்த ஆதங்கத்தை ஒவ்வொரு தீவிரமான எழுத்தாளர்களும் தீர்த்து வைக்கிற விதத்தில் தான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். உண்மைக்கு நெருக்கமாக இந்த சமூகம் எத்தனை தூரம் அனுமதிக்கிறதோ அதற்கு ஒரு படிக்கல் அதிகமாகவே தீவிர எழுத்துகள் பாய்ந்து பாய்ந்து தன்னை அந்தளவில் வெளிப்படுத்தி வருகின்றன.
ஆனால், முழுமையான அந்தரங்கத்தை யாராலும் தொட்டுவிட முடியாது. அதற்கு நூறு சதவீதம் அறத்தின் கோட்பாட்டை புரிந்திருக்கிற சமூகம் வாய்த்தாக வேண்டும். தீவிர எழுத்துகள் அப்படியாக தன்னை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்கிற தருணத்திற்காக காத்திருக்கின்றன. உண்மையான ஜனநாயகம் இருக்கிற இடத்தில் அது சாத்தியப்படும். அந்தப்புள்ளியில் ஜி.நாகராஜனின் ஆதங்கம் தீர்த்து வைக்கப்படும்.
முதன்முதலாக சிறுகதையை முயற்சிக்கலாம் என்று தோன்றியது. சிவகாசி அஞ்சாக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, விடுதி அறையில் நடந்த ஒரு சம்பவத்தை அடியொற்றி எழுதிய கதை தான் நன்னெஞ்சே. இதுகூட தாஸ்தாயேவ்ஸ்கியின் தத்துவத்தை அடியொற்றியது தான். அதெல்லாம் அப்போது தெரியாது.
மனதில் ஒரு பொறியாக எப்போதோ நடந்த அந்தச் சம்பவம் வந்து எழுது எழுது என்று அழுத்த, உடனே எழுதிவிட்டேன். ஒரே மூச்சில் எழுதி விட்டேன் என்றாலும் அதை திரும்பதிரும்ப திருத்திக்கொண்டே இருந்தேன்.
முதன்முதலில் ஆனந்தவிகடனுக்கு தான் அனுப்பினேன். உடனே தேர்வாகிவிட்டது. அதன் பிறகு சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் என்று தொடர்ந்து எழுத ஆரம்பித்துவிட்டேன்.
எனக்குப்பிடித்த இசை தட்டச்சில் பொத்தான்களை இதமாக தட்டும்போது எழும்பும் அந்த ஒலிநயம் தான். இப்போது அதுவே கம்ப்யூட்டரில் நடக்கிறது. கம்ப்யூட்டரில் திருத்தங்கள் உடனுக்குடனோ, எப்போது வேண்டுமானாலும் செய்ய முடியும்.
தட்டச்சில் விழும் தவறுகளுக்கு வொய்ட்னர் போட்டு மறைக்கிற மாதிரியான சிரமங்கள் இதில் கிடையாது. தொழில்நுட்பத்திற்கு நன்றி.

Leave a comment
Upload