
தீவிரமான அசஞ்சல பக்தியொன்றாலே பெருமாளுக்கு பிராட்டியாய் உயர்ந்தாள் பன்னிரு ஆழ்வாரில் ஒரே பெண், ஆண்டாள்.
தெய்வத்தமிழால் கண்னனைப்பாடிப்பாடி தானும் தெய்வமாகவே நிலைத்தவள் அவள். நாச்சியார் திருமொழி 143ம், திருப்பாவை 30ம் தந்தவளும் அவளே.
தித்திக்கும் தீந்தமிழ்த் திருப்பாவையைத் தீண்டியவர்கள் தேனில் அமிழ்வரே. உமிழ்வதும் அமிழ்தே. ஆம், தமிழும் பக்தியும் கலந்த சங்கத்தமிழ் முப்பதையும், சிறு பிராயம் முதலே கிடைத்த போதெல்லாம் இன்றும் பருகி உணர்ந்து இன்புருகிறார் ஆசிரியர் மோகன் ஜி.
அதன் உருவே இந்த “திருப்பாவை – தொகுப்பும் விளக்கமும்” எனும் புத்தகம். சமீபத்தில் வெளியானது.
உணர்ந்தவர் எழுதினால் அவருரைப்பதும் அமிழ்தே என்பதற்கு இந்த புத்த்கம் ஒரு உதாரணம்.
இந்த புத்தகத்திற்குத் தான் எத்தனை பலம்.

தமிழும் பக்தியும் கலந்தது. தமிழுக்கு பலம் பக்தியாலா? இல்லை, பக்திக்குத் தமிழால் தான் பக்தியா என்று அறுதியிட்டுக் காண இயலாத படைப்பு இது.
ஆசிரியருக்கு இந்த தேனை ஊட்டியவர் வரிசையே அபார பலம் தான்.
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியரின் நூற்றாண்டினும் முன் எழுதப்பட்ட விளக்கத்தோடு கடலூரில் ஸ்ரீசக்ரபாணி அவர்கள் திருப்பாவை சொல்லிக்கொடுத்த் பள்ளி நாட்கள், அப்பாசுரங்களை திருவஹீந்திரபுரம் கோயிலில் பாடியது, காலத்தோடே கிட்டிய திருப்பாவை மீதான உபன்யாசங்கள், முக்கூர் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மாச்சாரியாரின் கோதையின் பாதை என்ற நூல், ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி அண்ணாவின் உபன்யாசங்கள் என பலே பலே பலப்பல பக்க பலங்கள் தான்.
தவிர, சென்ற நூற்றாண்டில் நடமாடிய பூத உடலை நீத்த பின்பும் நடமாடிக்கொண்டிருக்கும் காஞ்சி மஹாபெரியவாளின் ஊக்கத்தால் தமிழகமெங்கும் மார்கழி மாதத்தில் திருப்பாவையும் திருவெம்பாவையும் சிந்திப்பதும் பாடுவதும் ஒரு இயக்கமாக்கி விட்டிருந்தது தமிழுக்கும் பக்திக்கும் கிட்டிய புத்துயிரென்றால் யார் தான் மறுப்பார்? இந்த பலம் அதி அசுர பலம் தான். கூடவே அவரது திருக்கரத்தால் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை புத்தகங்களைப் பெற்றதையும் பலமாகக் கருதுகிறார் ஆசிரியர்.
தக்க இடத்திலெல்லாம் நிலைத்த கதைகள் கூறும் விதம் தனித்துவம்தான்.
இத்தனை பலங்களே அவர் இந்த சங்கத்தமிழ் முப்பதிற்கும் விளக்கம் கூறிட தகுதி பெற்றவர் என்று பறை சாற்றும்.
ஆண்டாளின் திருநட்சத்திரமான பூரம் தனக்கும் என்று பெருமிதம் கொள்கிறார் ஆசிரியர்.
பள்ளியில் தொடங்கி கல்லூரியிலும் தொடர்ந்த ஆசிரியரின் இலக்கியக்காதல் தனது விளக்க உரையில் ஆழ்வார்களின் பிரபந்தங்களையும், சமயக்குரவர் நால்வரின் தேவாரங்களையும் துணைக்கழைத்தமை படிப்போர் மனதில் ஆழப்பதிக்க ஏதுவாயிருக்கிறது. கம்பனின் ரசத்தையும் ரசித்து மேற்கோளிடுகிறார்.
இந்த பலங்கள் அவரது விளக்கங்களில் பக்க பலமாக இருந்தது உணர முடிந்தது.
ஓவியர் தேவாவின் கலை நயமிக்கத் தூரிகை பாசுரங்களின் கருத்திற்கேற்ப வரையப்பட்ட சித்திரங்கள் இந்த புத்தகத்திற்கு பலம் தான்.

மணிவண்ணா! என்ற விளி, கோதை ஆண்டாளின் குடும்ப சீதனமாம் என்று ஆசிரியர் ஆரவாரித்துக் கூறுகையில் ஆசிரியர் அனுபவித்த உணர்வு நமக்கும் வரும்.
ஆசிரியர், ஆண்டாளுடன் அவளது வரிகளில் ஒன்று விடாமல் ஊன்றி ஒன்றி விளங்கி விளக்குவது இப்புத்தகத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் கொடை.
திருப்பாவையை ஆசிரியரின் கவிதை இப்படி செல்கிறது.
தமிழ்க்கோதை தந்ததெல்லாம் வேதசாரம்
கமழ்மாலை தோள்சூடியே தந்தஜாலம்
சிமிழ்வாய் மொழிந்ததெல்லாம் மந்த்ரமூலம்
அமிழ்தமே கடைந்தெடுத்து விண்டபோதம்
எனில், இந்த சங்கத்தமிழை உரைப்பவர்க்கு, அவனருள் உண்டு என்றென்றும் உண்டு என்று அவனையே நினைந்து அவனையே உணர்ந்து, அவனே, திருவரங்கனேயழைத்து அனைவரும் பார்த்திருக்க, தன் தந்தை விஷ்ணுசித்தன் எனும் பெரியாழ்வாரை வணங்கிவிட்டு சர்வாலங்கார பூஷிதையாய் அரங்கனின் சன்னிதியில் அவனை வணங்கிய தருணமே அவனின் திருமேனியிலேயே இரண்டரக் கலந்த கோதை பகன்று சென்றாள். அவனை அடையும் வழி வாழ்ந்து காட்டியும் பகன்றும் சென்றாளே, பிராட்டி!
திருமறையின் சாரே திருப்பாவை என்பார் விளங்கியவர். அதனையே ஊன்றிடுகிறது இந்த விளக்கவுரை.

Leave a comment
Upload