தொடர்கள்
பொது
வெனிசுலாவை கைப்பற்றிய அமெரிக்கா-சீனாவுக்கு பாதிப்பா?!-தில்லைக்கரசிசம்பத்

20260008220741504.jpg

அமெரிக்கா 2026-ம் ஆண்டு ஜனவரி3 அன்று வெனிசுலா மீது பாய்ந்து அதிரடியாக அந்நாட்டின் அதிபர் மதுரோவையும், அவர் மனைவியையும் கைது செய்து “இனி வெனிசுலா நாடு அமெரிக்கா கட்டுப்பாட்டில் “ என அறிவித்து உலகநாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
முக்கியமாக சீனா,ஏனெனில் 2007–2017 காலகட்டத்திலிருந்து சீனா சுமார் 50–60பில்லியன் டாலர்கள் (இது உலகளவில் சீனா ஒரு நாட்டில் செய்த மிகப் பெரிய முதலீடுகளில் ஒன்று) வெனிசுலாவுக்கு கடன் கொடுத்து சாலை, கட்டுமானப்பணிகள், மின்சாரக்கட்டமைப்பு என கச்சாஎண்ணெய் எடுக்க வசதிகளை செய்து, “என் கடனுக்கு பதிலாக நீ எண்ணெய் கொடு ராசா” என ஒப்பந்தம் போட்டது.

வெனிசுலாவுடன் சீனா யுவானில் வர்த்தகம் செய்வதை கண்டு கடுப்பான அமெரிக்கா அப்போதே வெனிசுலாவை மிரட்டி பலவித வரிகளை அதன்மேல் சுமத்த ஆரம்பித்தது.

2005-2014வரை வெனிசுலாவுடன் நேரடி,வெளிப்படையான எண்ணெய் வர்த்தகத்தை செய்த சீனா, அமெரிக்கா பிரச்சனை செய்வதை கண்டு, 2015 – 2018ல் வெனிசுலாவுடன் நேரடியாக வாங்குவதை சிறிது குறைத்து, கூடவே நிழல் வர்த்தகம் செய்ய ஆரம்பித்தது.

அதாவது சரக்கு கப்பலில் சீனாவின் கொடி/அடையாளம் எதுவும் இருக்காது. மூன்றாவது பார்ட்டி மூலம் முகவரி இல்லாத கப்பல்களிலிருந்து நடு கடலிலேயே வேலுநாயக்கர், ஜனகராஜ் குயிலிசகிதம் சரக்கை கைமாற்றுவதுபோல் சீனாவின் கப்பலோ அல்லது பெயரில்லாத தனியார் கப்பலோ கடலிலேயே சரக்கை கைமாற்றிக்கொள்வார்கள்.

ஆனால் இது மிகவும் ஆபத்தானது.

காப்பீடு இல்லாததால் கப்பல் விபத்துக்குள்ளானால்/சரக்கு கை தவறிப்போனால் போட்ட காசு போனதுபோனதுதான்.

சீனா இந்த அபாயத்தையும் எடுத்தது.

ஆனால் விடாத அமெரிக்கா 2019 – 2021ல் மதுரோ அரசின் மீது பலவித பொருளாதார தடைகளை விதித்து, வெனிசுலா அரசின் பெட்ரோலிய துறையை (PDVSA)தடை(black list) செய்ததும் , சீனா நேரடி வர்த்தகத்தை முழுவதுமாகவே நிறுத்தி தனது நிழல் வர்த்தகத்தை முழுமையாக்கியது.

அதையும் கண்டுப்பிடித்த அமெரிக்கா வெனிசுலாஅரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால் அதிபர் மதுரோவை இப்போது கைது பண்ணிவிட்டது.

இனி அமெரிக்காவின் கைப்பாவை அரசை அங்கே அமர்த்துவதன் மூலம் தனது அதிகாரத்தை நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது .

எண்ணெய் விற்பனையை டாலர் அல்லாத நாணயங்களில் (சீன யுவான் போன்றவற்றில்) விற்றதுதான் வெனிசுலாவுக்கு பெரும்வினையானது.

இது “Petrodollar” எனப்படும் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்துக்கு வேட்டு வைப்பதால், வெனிசுலாவை கைப்பற்றியதின் மூலம் “டாலரை விட்டு வெளியேற நினைப்பவர்களுக்கு என்ன ஆகும்” என்பதை அமெரிக்கா உலகிற்கு எச்சரிக்கை செய்திருக்கிறது.

சில காலமாகவே சீனா உலக வர்த்தகத்தில் டாலருக்கு மாற்றாக யுவானை கொண்டு வர முயற்சித்து வருகிறது.

பிரிக்ஸ் நாடுகளும் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) டாலர் வர்த்தகத்தை ஒழிக்க முயன்றுக்கொண்டிருக்கின்றன.

இதற்காகவே இந்நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன.

சீனா வாங்கும் அடியை பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியா இனிமேல் மிக ஜாக்கிரதையாக தான் தனது நிலைப்பாட்டை கொண்டு செல்லும்.

ஏற்கனவே அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவிடம் டாலரை குறைத்து திர்ஹாமில் எண்ணெய் வர்த்தகம் செய்து வருகிறது.

முக்கியமாக டாலர் வர்த்தகம் தொடர்பாக, அமெரிக்காவுடன் மற்ற நாடுகளின் மோதல், இந்தியாவின் மேல் வரிக்கு மேல் வரி விதித்து பாடாய் படுத்தும் அமெரிக்கா என்ற சூழ்நிலையில், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை போன்ற நடவடிக்கைகளை எடுக்கும் சூழ்நிலை கூட வரலாம்.

சொல்வதற்கில்லை.

ஆனால் இந்தியா சமாளிக்குமா?

கடந்த சில ஆண்டுகளாக நமது ரிசர்வுவங்கி தங்கம் வாங்கி குவித்து வருகிறது.

2024–25 நிதியாண்டில் மட்டுமே 57டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது.

1991ல் நமது அந்நியசெலாவணி கையிருப்பு ஏறக்குறைய பூஜியம் , தங்கம் கையிருப்பும் மிகவும் குறைவாக இருந்த நிலையில், தற்போது (ஜனவரி2026)அந்நியசெலாவணி கையிருப்பு $702 பில்லியன், தங்கம் 880டன்($113 பில்லியன் மதிப்பு ), சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) உள்ளசிறப்பு நிதிஎடுப்பு உரிமைகள்(SDR), வெளிநாட்டு அரசாங்கப் பத்திரங்கள் மற்றும்பிற சந்தைப்படுத்தக்கூடிய பத்திரங்கள் ($559 பில்லியன் ) என இந்தியா எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் அளவு ஸ்திரமாக உள்ளது.

இன்று, இந்தியா உலகின் நான்காவது பெரிய அந்நிய செலாவணி கையிருப்பு($702 பில்லியன்) கொண்ட நாடு.

இந்தியாவை கரித்துக்கொட்டும் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் அந்நிய செலாவணி கையிருப்பு தலா $9, $6, $24 பில்லியன்கள் என்பது கொசுறு செய்தி.

சீனாவும் சாமானியப்பட்ட நாடல்ல.

இருந்தாலும் அமெரிக்காவின் மீது நேரிடையாக கோபத்தை காட்டாது.

சீனா ஏற்கனவே $1.3 ட்ரில்லியன் மதிப்புக்கு அமெரிக்க கடன் பத்திரங்களை வாங்கி வைத்திருந்தது.

தற்போது $750–800 பில்லியனுக்கு குறைத்திருக்கிறது.

இதை சீனா இன்னும் குறைக்கும்.

எண்ணெய் மற்றும் மற்ற வர்த்தகங்களை யுவான்/தங்கம் அடிப்படையில் தொடரும்.

பிரிக்ஸ்,தெற்கத்திய நாடுகளின் கூட்டணியை வலுப்படுத்துவதை சீனா தீவிரமாக முயற்சிக்கும்.

வெனிசுலா அமெரிக்கக்கட்டுப்பாட்டில் வந்துவிட்டதால் சீனாவால் இனி நிழல் வர்த்தகம் செய்வது கூட கடினம்.

நேரடியாக வாங்க வேண்டும் என்றால் அமெரிக்கா போடும் விதிமுறைகள் (டாலரில் வர்த்தகம், சரியான ஒப்பந்த பத்திரங்கள், முறையான காப்பீடு , நேரடியான வணிகம்) எண்ணெய் விலையை அதிகமாக்கிவிடும்.

இனி சீனா யுவானில் வர்த்தகம் செய்ய முடியாது.

ஏற்கனவே சீனா வெனிசுலா நாட்டில் பில்லியன் டாலர்கள் கணக்கில் முதலீடு செய்த நிலையில் தற்போது அதிக விலையில் எண்ணெய், அதுவும் டாலரில் எனும்போது சீனாவிற்கு நஷ்டமே!

சரியான இடத்தில் ட்ரம்ப் சீனாவுக்கு ஆப்பு வைத்து விட்டார்.

அதனால் இந்தியாவுக்கு ஒன்றும் ஆபத்தில்லையே என கேட்டால், இப்போதைக்கு சீனாவுக்கு தான் பிரச்சனை.

ஆனால் ட்ரம்ப் வரிசையாக எல்லாரையும் கடித்து வருவதால் இந்தியாவும் கவனமாக இருக்கிறது.

வெனிசுலா மூலம் சீனாவின் சோலியை முடித்த ட்ரம்ப், தற்போது “கிரீன்லாந்து ஏன் அமெரிக்காவுக்கு சொந்தமாக கூடாது? நேட்டோ அமைப்பில் அமெரிக்கா மட்டும் இல்லையென்றால் நீங்கள் அனைவரும் செல்லாக்காசு. அதனால் க்ரீன்லாந்தை எடுத்துக்கொள்ள போகிறேன்” என ஐரோப்பியநாடுகளை மிரட்ட, அதை கேட்டு அரண்டு போன இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் “ என்ன ?! எங்ககிட்டேயேவா!? வேணாம்!” என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

டென்மார்க் பிரதமரோ கோபமாக “ இதை பற்றி பேசினால் நேட்டோ அமைப்பை விட்டே நாங்கள் வெளியேறுவோம்.ஜாக்கிரதை!” என எகிறியிருக்கிறார்.

ட்ரம்பிடம் மிகவும் பிடித்த குணம் என்னவென்றால் யாரிடமும் பாகுபாடு காட்டமாட்டார்.

கற்பூரம் மாதிரி எல்லாருக்கும் ஒரே ஜோதி தான்.

க்ரீன்லாந்தை பிடிப்பதின் மூலம் ரஷ்ய,சீனாவின் கப்பல்கள், ஆர்க்டிக் பெருங்கடலில் நடமாடுவதை தடுத்து அமெரிக்க பாதுகாப்புக்கு பலம் சேர்க்க திட்டம் போடுகிறாராம்.

க்ரீன்லாந்தை ட்ரம்ப் ஆக்கிரமித்துவிட்டால், ஐரோப்பிய நாடுகளின் நிலைமையை கண்டு நாமும் மகிழ்ச்சியுடன் கனஜோராக கைத்தட்டலாம்.

எத்தனை நாள்தான் நாமே அடிவாங்குவது?!