தொடர்கள்
ஆன்மீகம்
பழம் பெருமை வாய்ந்த உத்தரகோசமங்கை திருக்கோயில்- சுந்தரமைந்தன்.

The ancient and proud Uttarakosamangai temple…!!

இந்தியாவைப் புண்ணிய பூமி, புனித பூமி, ஞான பூமி என்று எல்லோரும் அழைக்கக் காரணம், நம் நாட்டில்தான் பல்வேறு புண்ணிய க்ஷேத்திரங்களும், தீர்த்தங்களும், மூர்த்திகளும் உள்ளன.
தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான மற்றும் புகழ்பெற்ற உத்தரகோசமங்கை மங்களநாயகி சமேத மங்களநாதசுவாமி கோயில் உலகின் முதல் சிவன் கோயில் என்று போற்றப்படுகிறது.
நவக்கிரகங்கள் முழுமையாக அறியப்படாத காலத்திலேயே, சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் மட்டுமே இங்கு வழிபடப்பட்டுள்ளன, இதிலிருந்தது இந்த கோயில் மிகவும் பழமையானது என்பதை நம்மால் அறியமுடிகிறது.

20260008221027544.jpg
இந்த ஸ்தலம் சிவபுரம், தட்சிண கைலாயம், சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம்,பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.
"உத்திரகோசமங்கை" என்பது 'உத்தரம்' (உபதேசம்) + 'கோசம்' (ரகசியம்) + 'மங்கை' (பார்வதி) சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேத ஆகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த புண்ணிய ஸ்தலம் என்பதால் "திரு' எனும் தெய்வ அடைமொழியுடன் திருஉத்தரகோசமங்கை எனப் பெயர் பெற்றது. சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் ஒன்றாகிய "வலைவீசிய லீலை' நடந்த இடமான பரதவர்கள் நிறைந்த கடற்பகுதி (ஏர்வாடி) உத்தரகோசமங்கைக்கு அருகில் உள்ளது. சிவபெருமான், பராசக்தியைப் பரதவர் (மீனவர்) மகளாகப் பிறக்கச் செய்து, பின் அவருக்கு விமோசனத்தைக் கொடுத்துத் தானே திருமணம் செய்து கொண்டு இத்தலத்திலேயே தங்கி வேதப்பொருளை உபதேசம் செய்தார். அவர் மணந்து கொண்ட மீனவப் பெண்தான் மங்களேசுவரி. இப்போது நமக்கு அருள் பாலிக்கும் அம்பாள். அவருக்கு ஈசன் ஆனந்த தாண்டவத்தை அறையில் ஆடிக் காட்டினார்.

The ancient and proud Uttarakosamangai temple…!!

தொன்மையான இக் கோயிலில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலந்தை மரம் (ஸ்தல விருட்சம்) உள்ளது.
இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக "மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது" என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது.
இத்தலத்தில் இருந்த சிவனடியார்கள், சிவயோகிகள் அறுபதாயிரம் பேருக்கும் ஞானோபதேசம் செய்து, அம்பிகையோடு மதுரை சேர்ந்ததாகப் புராணம் கூறுகிறது.
இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர். காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டுச் சென்றுள்ளார்.

The ancient and proud Uttarakosamangai temple…!!

மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சி கொடுத்த சிறப்பு ஸ்தலம்.
திருவாசகத்தில் முப்பத்தெட்டு இடங்களில் இத்தலம் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. கீர்த்தித் திருவகவலில் "உத்தரகோச மங்கையுள் இருந்து, வித்தக வேடம் காட்டிய இயல்பும்" என்று வருந்தொடர், இத்தல புராணத்தில் 8ஆம் சருக்கத்தில் சொல்லப்படும் - ஆயிரம் முனிவர்கட்கும் இறைவன் தன் வடிவம் காட்டிக் காட்சி தந்த வரலாற்றைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதையொட்டியே இத்தலத்து ஈசனுக்கு "காட்சி கொடுத்த நாயகன்" என்ற பெயரும் வழங்குகிறது.
அருணகிரியாரும் இத்தலத்தைப் பற்றிப் பல பாடல்களைப் பாடியுள்ளார். பாண்டித்தலங்கள் பதினான்கும் தோன்றும் முன்பே, ஓர் இலந்தை மரத்தின் அடியில் சுயம்புவாய் தோன்றியவரே மங்களநாதர் ஆவார். "மண் முந்தியோ, மங்கை முந்தியோ'' என்று தொன்று தொட்டு வழக்கத்திலிருந்து, மண்ணிலும் முந்தியது "மங்கை' என்னும் உத்தரகோசமங்கை தலம் என்பதை அறியலாம். இத்தலத்திற்கு ""தென் கைலாயம்'' என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

The ancient and proud Uttarakosamangai temple…!!

மரகத நடராஜர்:
உத்திரகோசமங்கை திருக்கோயிலின் வடக்கில் ஐந்தரை அடி உயர மரகத நடராஜருக்குத் தனிக்கோயில் ஒன்று உள்ளது. நடராஜப்பெருமாள் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும், மதுரையில் கால் மாறி ஆடியதாகவும், உத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு. இத்தலம் "இரத்தினசபை' என்றும், சிதம்பரத்தில் ஆடும் முன்பே இங்கு வந்து ஆடி காட்சி கொடுத்ததால் "ஆதிசிதம்பரம்' எனவும் அழைக்கப்படுகிறது.
ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் இருக்கும்.

The ancient and proud Uttarakosamangai temple…!!

உலகிலேயே மிகப்பெரிய நவரத்தினங்களில் ஒன்றான மரகத நடராஜரை, மார்கழி மாத திருவாதிரை தினத்திற்கு முந்தைய நாள் நடக்கும் முப்பத்து இரண்டு வகையான அபிஷேகத்தின் போது, பச்சை வடிவாய் மரகத மேனியனாய் தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்குக் காணக் கிடைக்காத காட்சியாகும். அன்று இரவே புதிய சந்தனம் சாத்தப்படும். ஆண்டு முழுக்க மரகத நடராஜப்பெருமாள் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்துக் குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

இராவண-மண்டோதரி திருமணம் நடந்த ஸ்தலம்:
உத்திரகோசமங்கை திருக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் இராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் இராமாயண காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது. இராவணன் இங்கே வந்து வணங்கிச் சென்றிருக்கிறான். இங்குள்ள மங்களேச்சுவரர் மண்டோதரிக்கு அருளியவர். உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத் தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருந்தது. பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே இராவணனை கரம் பிடித்தாள். மேலும் இராவணன்– மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது.

தாழம்பூவிற்குச் சாப விமோசனம்:
சிவன் கோயில்களிலும், சிவ வழிபாடுகளிலும் சிவபெருமானைத் தாழம்பூவால் வழிபடுவதில்லை. ஆனால் உத்திரகோசமங்கை திருக்கோயிலில் மட்டும் சிவபெருமானுக்குத் தாழம்பூ வைத்து பூஜை செய்யப்படுகிறது.

The ancient and proud Uttarakosamangai temple…!!

சிவபெருமானின் அடியையும், முடியையும் காணும் போட்டி விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் நடந்தது. இதில் ஈசனின் முடியைக் கண்டு விட்டதாகப் பொய் சொன்ன பிரம்மனுக்கு ஆதரவாக, தாழம்பூ சாட்சி சொன்னது. இதனால் சிவவழிபாட்டில் தாழம்பூ இருக்காது என்று ஈசன் சாபம் கொடுத்தார். சாபம் பெற்ற தாழம்பூ, சாப விமோசனம் வேண்டி தாழம்பூ உத்தர கோச மங்கை கோயிலில் இறைவனை வழிபட்டு தவம் செய்தது. அதன் சாபம் நீங்கி, 'இந்தக் கோயிலில் தாழம்பூ பூஜைக்குப் பயன்படும்' என்று இறைவன் அருளியதாகவும் தல வரலாறு கூறுகிறது.

ஸ்தல விருட்சம் - மூவாயிரம் ஆண்டுகளாகப் பூத்துக்குலுங்கும் இலந்தை மரம்

ஸ்தல தீர்த்தம் - அக்கினி தீர்த்தம். கோயிலுள்ள உள்ளது. இது தவிர, கோயிலுக்கு வெளியில் பிரம்ம தீர்த்தமும், சற்றுத் தள்ளி 'மொய்யார் தடம் பொய்கை'த் தீர்த்தமும், வியாச தீர்த்தமும் சீதள தீர்த்தம் முதுலியனவும் உள்ளன. கோயிலில் மங்கள தீர்த்தமும் உள்ளது.

வழிபாட்டுப் பலன்கள்:
திருமணத் தடைகள் நீங்குதல், திருமண நல்லிணக்கம் உண்டாதல், களத்திர தோஷங்கள் நிவர்த்தி, முற்பிறவி பாவங்கள் நீங்கி மன அமைதி பெறுதல், செல்வ வளம், தீராத பிரச்சனைகள், மற்றும் ஞனம், மோட்சம் அடைதல் போன்ற பலன்கள் கிடைக்கும்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

கோயிலுக்குப் போவது எப்படி:
இராமேசுவரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், இராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.

ஸ்தலத்தின் மகத்துவம்:
திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பார்கள். இங்கே உத்தரகோசமங்கை மண்ணை மிதித்தாலே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
"தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" என்ற வாக்கியம் உருவாவதற்குக் காரணமான இருந்த இடமும் இதுதான்.

The ancient and proud Uttarakosamangai temple…!!

இப்படி பற்பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்ட மிகப் பழம் பெருமை வாய்ந்த உத்திரகோச மங்கை திருக்கோயிலுக்கு ஒரு முறை நாம் சென்று வந்தால் நமக்கு மன நிறைவையும், ஆன்மிக அனுபவத்தையும் தரும்.

"தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"

​The ancient and proud Uttarakosamangai temple…!!