
"பழைய சோறு'... எப்போதோ, எங்கேயோ கேட்ட சொல் போல தெரிகிறதா?
'ஆம்' என்றால் நீங்கள் இக்கட்டுரையை நிச்சயம் படிக்க வேண்டும்.
ஜென் ஜி, ஜென் ஆல்பா தலைமுறைகள் பழைய சோறு சாப்பிட்ட அனுபவம் இருக்க வாய்ப்பில்லை. 'ஐஸ் பிரியாணி'என்ற பெயர் சூட்டி அதை அந்நியப்படுத்தி விட்டனர். ஆனால் தினமும் பழைய சோறு மட்டுமே உண்டு வளர்ந்த தலைமுறையினர் அதன் சுவையை, பயன்களை இன்னும் மறந்திருக்க முடியாது.
இரவே தண்ணீர் ஊற்றி கற்சட்டியில் ஊற வைத்த சாதம், காலையில் திறந்துப் பார்த்தால் லேசான புளிப்பு வாடையுடன், நொதித்து காலை உணவுக்குத் தயாராகி இருக்கும். கொஞ்சம் உப்பு போட்டாலே போதும், அப்படியே கரைத்து அருந்தலாம். கொஞ்சம் கட்டித்தயிர் சேர்த்தால் சுவை 'அமோகம்'.
பழைய சோற்றுக்கு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கொத்துமல்லி கிள்ளிப்போட்டு அலங்காரம் செய்வது வழக்கம். கூடவே மாவடு, எலுமிச்சை ஊறுகாய், மோர் மிளகாய், புதினா துவையல், பழைய குழம்பு என்று தொட்டுக் கொண்டால் சுவை அள்ளும். அசைவத்தில் சுட்ட கருவாடு, நேற்று வைத்த மீன் குழம்பு,கறிக்குழம்பு ஜோடி சேர்ந்தால் 'ஆஹா அமிர்தம்' என்பார்கள்.
நீராகாரம் குளிர்ச்சியைத் தந்து களைப்பை நீக்கும் பானம்.அக்காலத்தில் வயல் வேலை போன்ற உடல் உழைப்பு மிகுந்த வேலைகளை செய்பவர்கள் பழைய சோற்றை உண்டு விட்டுத்தான் சோர்வின்றி வேலை செய்தார்கள். உடலுக்கு சக்தியும், குளிர்ச்சியும் தருவதாலும், ஆண்களும் பெண்களும் இருவருமாக வயல்காட்டில் வேலை செய்ய வேண்டி இருப்பதாலும் , எல்லோருக்கும் பழைய சோறே காலை, மதிய உணவாக இருந்தது.
காலம் மாற, வேலைகளும் மாற நம் உணவு வழக்கங்களும் மாறி விட்டன. அனைவரும் இட்லி, தோசை பக்கம் வந்து விட்டோம். அதோடு நின்று இருக்கலாம், பரோட்டா, பிட்சா என்று துரித உணவுகள் நம் உணவில் ஒரு பகுதியாகி, நம் உடல் நலத்தைக் குறி பார்த்து தாக்குகின்றன.
இப்போது மீண்டும் நம்மை பழைய சோற்றுக்கு மாறுமாறு மருத்துவ உலகம் வேண்டி அழைக்கிறது.
பழைய சோறு பற்றிய ஆராய்ச்சியை நமது ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கி நடத்தி வருகிறது
இரைப்பை, குடல், அறுவை சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர்.ஜஸ்வந்த் கடந்த சில ஆண்டுகளாக தன் துறையுடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு, பழைய சோறு அளிக்கும் நன்மைகளை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
குடல் நோயால் பாதிக்கப்பட்ட உள் நோயாளிகளுக்கு மண் பாத்திரத்தில் வைத்து தயாரிக்கப்பட்ட பழைய சாதத்தைக் கொடுத்து வந்தனர். குடல் அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள், அறுவைச் சிகிச்சை தேவையின்றி குணம் பெற்றுள்ளனர்.
பழைய சோறு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் போட்டிகளை நடத்தியது ஸ்டான்லி மருத்துவமனை. மருத்துவமனையின் பேராசிரியர்கள், செவிலியர்கள் ஊழியர்கள் என 120 பேர் பொன்னி அரிசி முதல் மாப்பிள்ளை சம்பா வரை பலவிதமான அரிசிகளில் பழைய சோறு தயாரித்து அதன் பெருமைகளை விளக்கும் நிகழ்ச்சியை நடத்தினர் .
சமீபத்தில் இக்கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துக் கொண்டு இந்த ஆய்வின் முடிவுகளைப் பற்றி அறிவித்தார். பழைய சோறு நம் உடல்நலத்துக்காக ஆற்றும் நன்மைகளைப் பற்றி விவரமாக தெரிவித்தார்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் வியக்கத்தக்க வகையில், பழைய சோற்றின் மேன்மையை நமக்கு தெரிவிக்கின்றன. இந்த அற்புத உணவைப் பற்றிய நம் அறியாமையை, தவறான கருத்துக்களை மாற்றுகின்றன.
'உணவே மருந்து' என்று காலம் காலமாக நாம் பேசி வந்தாலும், நாம் உண்ணும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் செயற்கை உரம் சேர்த்து விளைவித்த உணவு வகைகள் நம் வயிற்றில் உள்ள நல்ல நுண்ணியிரிகளை அழித்து விடுகின்றன. பி 12 , வைட்டமின் K, ப்ரோபையோட்டிக் எனப்படும் குடல் நலத்தைக் காக்கும் "நல நுண்ணியிரிகளை" இந்த செயற்கை உணவுகள் அழிப்பதால் பல குடல் சம்பந்தமான நோய்கள் வருவதை அறிவோம்.
கடந்த முப்பது ஆண்டுகளில் வயிற்றுப் போக்கில் துவங்கி, வயிறு எரிச்சல், அஜீரணம் , வயிற்றுப் புண் ,குடல் அழற்சி, வயிறு உப்புசம் (Bloating) என்று பலவித நோய்கள் மக்களை வாட்டுகின்றன. தொடர்ந்து வயிற்றுப்புண், புற்றுநோய் என்று அடுத்தடுத்த சீர்கேடுகளுக்கு நாம் உள்ளாகிறோம்.
காரம், எண்ணெய் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் நம் புதிய உணவு முறையால் மட்டுமன்றி, நம் குடலில் இருந்து ஜீரணத்துக்கு துணை போகும் நல்ல பாக்டீரியா அழிக்கப்படுவதாலும் இத்தகைய வியாதிகள் பெருகி வருகின்றன.
நொதிக்கப்பட்ட (Fermented ) பழைய சாதத்தில் குடல் நலனுக்குத் துணை செய்யும் நல் நுண்ணியர்கள் இருப்பதால் அது நல்ல குடல் ஆரோக்கியத்தைத் தருகிறது. பலவித குடல் நோய்களுக்கும் அருமருந்தாக இருக்கிறது.நீண்ட நாட்களாக irritable bowel syndrome (IBS) எனப்படும் குடல் நோயால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து பழைய சாதத்தை உண்ணும் போது அதில் இருந்து அவர்கள் விடுதலை பெறும் வாய்ப்பு உள்ளது. குடல் அடைப்பு, குடல் ஓட்டை போன்ற நோய் வந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை அவசியம் என்றாலும், அதற்கு பின் விரைவில் குணமடையவும், ஆரோக்கியத்தை மீட்கவும் பழைய சாதம் உதவுகிறது.
"சர்க்கரை நோயாளிகள் பழைய சாதம் சாப்பிடக் கூடாது . அதனால் திடீர் சர்க்கரை உயர்வு (blood sugar spike ) " ஏற்படும் என்று மருத்துவர்கள் சொல்லி வந்தனர். இப்போது தினமும் சாப்பிடும் உணவின் கலோரி அளவில், தயார் செய்த பழைய சாதத்தை எடுத்துக் கொள்ளலாம். புழுங்கல் அரிசியில் அல்லது குறைந்த சர்க்கரை அளவு (Low Glycemic Index ) கொண்ட அரிசி வகைகளில் தயாரித்த பழைய சாதத்தை, சாதமாக எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது
பழைய சாதத்தில் இரும்புச் சத்து பல மடங்கு பெருகி உள்ளதாக இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது. 100கிராம் வடித்த சாதத்தில் 3.4 மி.கி இரும்புச் சத்து உள்ளது. ஆனால் 12 மணி நேரம் தண்ணீரில் ஊறிய பழைய சாதத்தில் 73.91 மி .கி, இரும்புச் சத்து உள்ளது. அதாவது 20 மடங்கு பெருகி விடுகிறது. எனவே கர்ப்பிணிப் பெண்கள் தாராளமாக சாப்பிடலாம். கருப்பை, தைராயிடு தொந்தரவுகள் உள்ளவர்களுக்கும் பழைய சாதம் நல்மருந்து.
அயல்நாடுகளில் பழைய சாதம் பற்றி ஏற்கனவே ஆரய்ச்சிகள் நடந்து வருகின்றன .நமது ஸ்டான்லி மருத்துவமனையின் ஆராய்ச்சி முடிவுகள் உலக நாடுகளுக்கும் பழைய சாதத்தின் மேன்மையை எடுத்துச் சொல்லும் என்று நம்புகிறோம்.
ஒரு கிண்ணம் சாதம் மீந்துப் போனால், அதை பிரிட்ஜில் வைக்க வேண்டாம். சாதம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குறைந்தது 8 மணி நேரம் நொதிக்க வைத்து பயன்படுத்த தொடங்குவோம்.
நம் ஆரோக்கியம் நம் கையில், அதை நம் தட்டில் உள்ள உணவே தீர்மானிக்கிறது

Leave a comment
Upload