முன்பெல்லாம் கிரிக்கெட் எப்போதாவது தலைப்புச் செய்தியில் இடம்பிடிக்கும். என் நினைவுக்கு எட்டியவரையில் அதை முதன்முதலில் தலைப்புச் செய்திக்குக் கொண்டு வந்தவர் கபில்தேவ். 1983-ல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது அந்த செய்தி முதல்பக்க செய்தியானது!




அதன்பிறகு, இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு முக்கியமான இடம் கிடைத்தது என்றாலும் மீண்டும் அது தலைப்புச் செய்தி அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது சச்சின் என்ற தனி மனிதனின் சாதனைகளின்போதுதான்! ஒரு நிலைக்குப் பிறகு சச்சின் தொட்டதெல்லாம் சாதனை என்னும் அளவுக்கு மாறியது நிலைமை.
அவர் சதம் அடித்தால் உலகில் அதிக சதம் கணடவர் என்ற சாதனையைப் படைத்தார்… ரன் அடித்தால் உலகின் அதிகபட்ச ரன்களுக்கு சொந்தக்காரர் என்றார்கள்… கிரிக்கெட்டின் பிதாமகன் பிராட்மேனே சச்சினை உச்சி முகர்ந்து பாராட்டினார்… எல்லா பவுலர்களுமே சச்சின் விக்கெட்டை எடுத்துவிட்டால் உலகையே வென்றது போல் கூச்சலிட்டார்கள்.
ஐஸ்வர்யா ராய்க்கும் வயோதிகம் வரும் (?!) என்பது போல சச்சினும் கிரிக்கெட்டில் ஒருநாள் ஓய்வுபெறுவார் என்ற கசப்பான உண்மையைக் காலம் சொன்னபோது கிரிக்கெட் ரசிகனின் மனம் ஒப்புக் கொள்ள மறுத்தது. சச்சினுக்கே உள்ளுக்குள் ஒரு நடுக்கம் ஓடிக் கொண்டே இருந்தது. தன் காலத்தில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லுமா என்ற கவலை உள்ளுக்குள் இருந்தது.
சேவாக், டிராவிட், கங்குலி, யுவராஜ் என்று அவ்வப்போது சச்சினுக்கு துணையாக யாராவது வந்தாலும் ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் தன் பக்கம் திருப்பும் ஆள் இல்லாமல் இருந்தது. சச்சினைப் போலவொரு வீரன் எப்போது வருவான் என்று ஏங்கிக் கிடந்தார்கள் ரசிகர்கள். சச்சின் ரசிகர்கள் மத்தியில் இருந்தே அப்படியொரு வீரன் வந்தான்.
சச்சின் ரசிகரான தன்னை வளர்த்துக் கொண்ட, தன் வீட்டு அறையில் சச்சின் படங்களை ஒட்டி வைத்து ரசித்து மகிழ்ந்த இளைஞன் புயல்போல உள்ளே நுழைந்தான். மகி என்று நண்பர்களாலும் தோனி என்று கிரிக்கெட் ரசிகர்களாலும் அழைக்கப்பட்ட மகேந்திர சிங் தோனி என்ற அந்த இளைஞன் இந்திய கிரிக்கெட்டை கரம் மசாலா கலந்த ஆக்ஷன் த்ரில்லர் சினிமா போல ஆக்கினான்.
கரடுமுரடான மலைப் பிரதேசமான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஞ்சியில் இருந்து இன்னும் கரடுமுரடான தோற்றத்துடன் வந்து சேர்ந்தான் அந்த இளைஞன்.
அந்த இளைஞனின் வேகத்துக்கு தோதாக இருபது ஓவர் உலகப் போட்டி வந்து சிக்கியது. சீனியர்கள் எல்லாரும் ஓய்வெடுத்துக் கொள்ள இளம் பட்டாளம் இந்த இளைஞனின் தலைமையில் களம் இறங்கியது. உலகின் முதல் இருபது ஓவர் போட்டி! அநாயசமாக கோப்பையை அள்ளிக் கொண்டு வந்தது இந்திய அணி.
நீண்ட முடியும் நேர் கொண்ட பார்வையுமாக வந்த அந்த இளைஞன் அப்போதே சச்சினுக்கு மாற்றாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அங்கிருந்து வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடம், சாம்பியன்ஸ் கோப்பையில் வெற்றி என்று பயணித்து இரண்டாம் முறையாக உலகக் கோப்பையையும் தனதாக்கினார். கடைசிப் பந்தில் இலங்கை அணிக்கு எதிராக அவர் அடித்த சிக்ஸர் அந்த உலகக் கோப்பையில் ஒளிவீசியது.
சச்சின் ஓய்வுபெற்றபோது பரவாயில்லை… எங்களுக்கு தோனி இருக்கிறார்… சச்சின் மூலவர் என்றால் தோனி உற்சவர் என்று தங்களை சமாதானப்படுத்திக் கொண்டனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். ஆனால், தோனியின் பாணி கிரிக்கெட் வேறு. நுணுக்கங்கள் இருக்கும்… வெற்றிகள் இருக்கும்… வேகம் இருக்கும்… ஆனால், சச்சினைப் போல தனி மனித சாதனைகள் இருக்காது.
அணியாக வெல்வோம்… ஆனால் அடையாளமாக ஒருவர் தேவை… நாளை சச்சினின் சாதனையை ஒரு வெளிநாட்டு வீரன் முறியடித்துவிட்டால் வரலாறு சச்சினை மறந்து விடுமோ என்று கவலை கொண்டான் ரசிகன். அவனுக்கு பதிலாக வந்தவர்தான் விராட் கோலி.
ஒவ்வொரு புதுமுகமும் நுழையும்போது ஒப்பீடு எழுவது இயல்புதான். சச்சின் வந்தபோது மும்பையில் இருந்து இவருக்கு முன் வந்த கவாஸ்கர் போல இருக்கிறார் என்றார்கள். தோனி வந்தபோது கிரிக்கெட் ஆட வருபவர்கள் மும்பை, கொல்கத்தா, சென்னை, டில்லி போன்ற பெருநகரங்களில் இருந்துதான் வருவார்கள் என்ற மாயையை உடைத்த கபில்தேவைப் போன்றவர் என்று புகழ்ந்தார்கள். இப்போது விராட் கோலியை சச்சினோடு ஒப்பிடுகிறார்கள்.
விளையாட வந்த குறுகிய காலத்திலேயே கிடுகிடுவென்று நம்பர் ஒன் இடத்துக்கு வந்துவிட்டார். தோனியும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள (இல்லையென்றால் விலக்கி இருப்பார்கள் என்ற கருத்தும் உண்டு) கோலி தலைமையைப் பிடித்துவிட்டார்.
தோனிக்கு அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தபோது சரியாக பூஸ்ட் நிறுவனம் ஒரு போட்டி அறிவித்தது. எங்கள் விளம்பரத்தில் அடுத்து யார் நடிக்க வேண்டும் என்று! முதலில் கபில்தேவ்தான் பூஸ்ட் விளம்பரத்தில் வந்தார். அதில் ஒரு சிறுவன் கபில்தேவை வியந்து பார்ப்பான். அந்த சிறுவன்தான் பின்னாளில் சச்சினாக வந்தார். சச்சினை அடுத்து தோனி அந்த விளம்பரத்துக்கு வந்தார். இப்போது கோலி… ஆக இந்திய அணி தேர்வு செய்யும் முன்பே பூஸ்ட் தேர்வு செய்துவிட்டது.
இன்றைய இளம் தலைமுறையின் கிரிக்கெட் அடையாளம் கோலிதான். தொடர் வெற்றிகள், தனிப்பட்ட சாதனைகள் என்று சச்சினும் தோனியும் கலந்த கலவையாக இருக்கிறார். கூடவே ஆக்ரோஷ கேப்டன் என்று பெயர் எடுத்த தாதா கங்குலி போல இவரும் ஆக்ரோஷம் காட்டுகிறார்.
கோலியை கிரிக்கெட்டின் புதிய விடிவெள்ளி என்கிறார்கள். சாதிக்கட்டும்!
- சி.முருகேஷ் பாபு

Leave a comment
Upload