A. விஷால் பத்தி அப்புறம் பார்க்கலாம்... ராதாகிருஷ்ணன் பத்தி தெரியணும் முதல்ல. பத்து இளைஞர்களிடம் கேட்டோம்... ‘ராதாகிருஷ்ணன் யாருங்க?’
B. 'மேயரா இருந்தவரு... கவுன்சிலரா இருந்தவரு... அது சாமி பேருங்க, ராதாகிருஷ்ணருக்கு கோயில்கூட இருக்கே! - இஷ்டத்துக்கு சொன்னார்கள்.
C. 'சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பேர்ல இருக்கற தொகுதிப்பா இது. அவர்தான் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி’ என்று நாம் கூறிய தகவல் அவர்களைக் கவரவில்லை.
D. மணலியும் எண்ணூரும் பக்கத்தில்... ஆகவே இந்தத் தொகுதியில் லாரி அதிகம் புழங்கும் புழுதி தெருக்கள்... நம் கண்ணெதிரேகூட ஒரு சிறு விபத்து. லாரியில் தொங்கிக் கொண்டிருந்த இரும்புச் சங்கிலி அடித்து பானிபூரி வியாபாரியின் தலையில் ரத்தம்!
E. இடிந்துவிழும் நிலையிலுள்ள கட்டடத்தில்கூட இந்திக்காரார்கள் குடியிருக்கிறார்கள். கூலி வேலைக்கு வந்த உத்தரப்பிரதேச, பீகார் சிறுவர்கள், இளைஞர்கள்! லாரி சோறு போடுகிறது. அவர்களை கெட்ட வார்த்தையால் திட்டும் நம்ம தமிழ் சிறுவர்களிடமிருந்து கெட்டவார்த்தையையும் தமிழையும் சேர்ந்தே கற்கிறார்கள் அவர்கள்.
F. 'இதோ இது நாகாலாந்து லாரி சார்... கோடவுன்ல நிறுத்தாம இங்க நிக்குது பாரு... கண்டிப்பா இதுல மிட்டாய் இருக்கும்’ என்றார் அந்த இளைஞர். மிட்டாய்?

'போன தடவை 4000. இன்னிக்கு 200’
G. மிட்டாய் இருக்கு, மஞ்சள் தூள் வருது, குங்குமம் இந்த தடவை நேரா மதுரைக்குப் போயிடுச்சு இதெல்லாம் பரிபாஷைகள்! மும்பை, டெல்லியிலிருந்து வரும் தடை செய்யப்பட்ட குட்கா வகைகள் மற்றும் சீன அயிட்டங்களைக் குறிக்கும்.
H. 'கஸ்டம்ஸ் நேத்து ரெய்டுக்கு வந்துட்டான்... சைனா ஊசி எதுலடா இருக்கு? சைனா ஜட்டி எந்த வண்டில இருக்குனுட்டு எல்லாத்தையும் கீறி கோடவுனுக்கே சீல் வெச்சுட்டான்’- இந்த டயலாக்கெல்லாம் பகிரங்கமாக நம் காதில் வந்து விழுந்தது.
I. கொருக்குப்பேட்டை ரவி அண்ணன் இருக்கறச்சே கவலை எதுக்கு?அவர் காப்பாத்துவார்... கஸ்டம்ஸ் வாயிலயே கில்லி அடிக்க நிறைய அட்வகேட்ஸ் வெச்சிருக்காரு என்றார் டீக்கடையில் ஒருவர். யார் அந்த ரவி அண்ணன் என்று தெரியவில்லை!


'அந்த கெழவி சொன்னதைப் போடாதீங்க’ -வீரப்பன்
J. எழில் நகர் தாண்டி குறுகலான நான்கு முனை சந்திப்பில் ரோட்டோர அம்மன் கோயிலில் ஒரு இளம்பெண்ணுக்கு முகத்தில் வேப்பிலை அடித்துக் கொண்டிருந்தார் முதிய பூசாரி. அவரிடம் வேப்பிலை அடி வாங்க இன்னும் சிலர் க்யூவில் நின்றனர். அருகிலேயே ஒரு இறைச்சிக் கடை. நேற்று வரை தலைநிமிர்ந்து வாழ்ந்த ஜீவராசிகள் தலை அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன!
K. போதுமா... இதான் ராதாகிருஷ்ணன் நகர்! தேர்தல் செய்திக்குப் போகலாமா? எப்படி இது நிகழ்ந்தது என தெரியவில்லை... சிரிச்ச மூஞ்சு சிங்காரம் அதான் டி.டி.வி. தினகரன் இந்த தொகுதியின் செல்லக்குட்டியாக மாறியிருக்கிறார்!
L. சுயேச்சைதானே தினகரன் என்று எவராவது நினைத்தால் முகத்தில் நிச்சயம் கரிதான்! ஜெயிக்கிறாரோ இல்லையோ செமத்தியா வோட்டு கிடைக்கும் என்பதை பாண்டு பேப்பரில் எழுதி தந்துவிடலாம்... அந்தளவுக்கு தலைவனுக்கு தொகுதில கெத்து!

'டெல்லி பருப்பு வேகாது!’

'இதுலதான் அது இருக்கு!’
M. ஆட்டு மந்தையை அழைத்துச் செல்வதைப் போல 200 பேர் கொண்ட பெண்கள் கூட்டம் ஒன்றை வழிநடத்தி சென்று கொண்டிருந்தனர் இளம் வேட்டிகள் மூவர்! கூட்டத்திலிருந்த ஒரு ஆட்டை ஓரம் கட்டினோம்...
N. ஆடு கதறியது... ‘ஆமா, தொப்பிக்காரங்கதான் இட்டுக்கினு போறாங்க. மனு தாக்கல் செய்ய தினகர் வர்றாரு... தலைக்கு 200 ரூபா தருவாங்க. ஐஸ்காரர்கிட்ட மொத்த பணத்தையும் கொடுத்துடுவாங்க. பொன்னி அதை வாங்கி எங்ககிட்ட தரும்!’
O. இந்தப் பெண்மணியைத் தேடி வந்த நேதாஜி நகர் பாகீரதியம்மாள் திருவாய் மலர்ந்தார்: “மருதுகணேசுக்காக(தி.மு.க. வேட்பாளர்) போன தடவை எல்லாருக்கும் பணம் கொடுத்தாங்க... வீரப்பன் அவன் வீட்டுலயே வெச்சுத் தந்தான். திடீர்னு போலீஸ் வந்ததும் அவன் பொண்டாட்டி மாடிக்கு ஓடறா... இவன் கக்கூசுக்குள்ள ஓடறான்... நாங்க ரோட்டுக்கு ஓடறோம்... களேபரி!”
P. வீரப்பன் கண்ணில்பட்டார். “மருதுகணேஷ் நேத்துகூட எங்க வீட்டுக்கு வந்தாருங்க. சால்வை போத்தினேன்... நான் போஸ்டிங்ல இருக்கேன். ஏதோ கெய்வி சொன்னதை பத்திரிகையில போடாதீங்க!”-கலகலவென சிரித்தபடி போட்டோவுக்கு போஸ் தந்தார்!
Q. இரட்டை இலையை பறிகொடுத்ததற்காக தினகரன் குழு இப்போது கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. தொப்பி எப்படியோ தொகுதியில் எஷ்டாப்ளிஷ் ஆகிவிட்டது. தொப்பி இல்லேன்னாதான் அவர்களுக்குப் பின்னடைவு!
R. 'தம்பிதுரை சொல்லிட்டாருப்பா 1 லட்சம் லீடிங்ல வருவோம்னு... ஜெயக்குமார் நேத்து சொன்னதைப் படிச்சியா? 50 ஆயிரம் வாக்குல மதுசூதனன் ஜெயிப்பாருன்னு!’- இப்படிப் பேசிக்கொண்டு திரியும் அதிகாரபூர்வ அ.தி.மு.க-வுக்கும் இங்கே மவுசு குறையவில்லை.'பொறுத்திருந்து பாருங்க... கப்பை நாங்க தூக்கறோம். இந்த ஏரியாவின் சந்து பொந்து இண்டு இடுக்கெல்லாம் மதுசூதனனுக்கு அத்துப்படி! அவர் அஞ்சாநெஞ்சன்!’என்கின்றனர்.
S. 'யார் அஞ்சாநெஞ்சன்? 35 வருஷத்துக்கு முன்னாடி போஸ்டர்ல தன் பேருக்கு முன்னாடி இவரா போட்டுக்கிட்டாரு... அதுக்கப்புறம் அஞ்சாநெஞ்சன் அழகிரினு ஒருத்தர் தி.மு.க.வுல டான்ஸ் ஆடினாரு. சத்தியமா சொல்றேன்... இவ்ளோ ரெய்டு நடந்தும் சிரிக்கிறாரே டி.டி.வி... அவர்தாங்க சைலண்டான அஞ்சாநெஞ்சன்!’
T. விஷால் கதி? விஷால் பற்றிப் பேசினாலே 'ப்ச்..’ என்று முகம் திருப்பிக் கொள்கிறார்கள் தொகுதிவாசிகள் பலரும். அவரை தேர்தல் கமிஷன் போலவே மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது.
U. சரி... அப்படின்னா பி.ஜே.பி.? 'இப்போதைக்கு இங்கு என்ன அலை அடிக்கிறது என்பதே குழப்பமாக இருக்கிறது. எந்த அலை அடித்தாலும் அதில் டெல்லி பருப்பு வேகாது என்றே தோன்றுகிறது. அவங்களுக்கு என்னங்க... 10 வோட்டு கூடுதலா வாங்கினாலே தமிழ்நாட்டுல வளர்ற கணக்குல சேர்த்துடுவாங்க. எப்படி இருந்தாலும் தொகுதி இப்படி திருவிழா கணக்கா இருக்கறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று மகிழ்ச்சியடைகிறார் சாமான்யரான அரூபா. பெயர் வித்தியாசமா இருக்கே என்றோம். 'என் பேரு ராஜேந்திரன்... யோகா மாஸ்டர் இந்தப் பேரை ஆசையா எனக்கு வெச்சாரு... யோகாவை விட்டுட்டேன்.. பேரை விடலே!’
V. வரப்போகும் நாட்கள் ரொம்ப சென்சிட்டிவாக இருக்கும்... அ.தி.மு.க.வுக்கும் தினகரன் அணிக்கும் பெரிய சண்டை சச்சரவுகள் வரலாம் என்று பெண்கள் கவலைப்படுகின்றனர். முன்னாடி நிலவியது பங்காளிச் சண்டை... இப்ப அப்படி இல்லியே!
W. தி.மு.க. அமைதியாக இருக்கிறது... ரெண்டு பேரும் அடித்துக்கொள்வதில் கவனமாக இருக்க, இரையைக் கவ்வி விட இவர்கள் கவனம் செலுத்துவது தெரிகிறது.
X. மிஸ்டர் எக்ஸ் மாதிரி வாக்காளர்கள் குழப்பத்தில் இருப்பது நிஜம். இறுதியாக தங்கள் வாக்கை யார் கணக்கில் சேர்க்க இருக்கிறார்கள் என்பது எல்லா கட்சிக்காரர்களையும் கலவரப்படுத்தியிருக்கிறது. இன்னும் சூடு பிடிக்கட்டும் என வாக்காளர்கள் காத்திருக்கின்றனர்! எப்போதுமே க்ளைமாக்ஸில் நல்ல முடிவுதான் எடுப்பார் மிஸ்டர் எக்ஸ்!
Y. தொகுதியில் விறுவிறுப்பு கூடியிருக்கிறது... மறைந்த முதல்வர் தொகுதி ஆயிற்றே அந்த கம்பீரம் போகுமா? பல மாநில மீடியாக்களின் வண்டிகள் வந்தவண்ணம் இருக்கின்றன. தற்காலிக டோல்கேட் பல இடங்களில் அமைக்கப்பட்டு ராப்பகலாக போலீஸ் அலர்ட்டாக இருக்கிறது!
Z. ஏசியா நெட் மலையாள வாசகம் பொறிக்கப்பட்ட அந்த காரின் முன் பகுதியில் லேப்டாப்புடன் அமர்ந்திருந்த இளம்பெண் அழகாக இருந்தார். அங்கங்கே வண்டியை நிறுத்தி இறங்கி கேரளமும் தமிழும் கலந்து பேசி ஏதோ கருத்துக் கணிப்பு நடத்திக் கொண்டிருந்தார். இளைஞர்களும் தொகுதி மக்களும் அந்த இளம்பெண்ணை ஆசையாகப் பார்த்தனர். தொகுதியே ரம்யமாக காட்சி தந்தது!
-ஆதியோகி சிவா

Leave a comment
Upload