தொடர்கள்
தொடர்கள்
போலாம் ரைட்! அத்தியாயம் 2 - இறைவனின் நிழல்!

போலாம் ரைட்! 
- ஜி.கௌதம்

20171104124922356.jpg

ஊடக உலகில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான அனுபவம் கொண்டவர் கட்டுரையாளர் ஜி.கௌதம். நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை.. நிஜமான அனுபவங்களை.. சுவாரசியமான எழுத்து நடையில் இங்கே பகிர்ந்து கொள்கிறார். அருகாமையில் இருக்கும் மனிதர்களை உற்றுப் பார்க்க வைக்கிறார். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான உணர்வைத் தரும் அவரது அனுபவப் பகிர்வு. யெஸ்.. போலாம் ரைட்!
*****

அத்தியாயம் 2
இறைவனின் நிழல்!


20171104125125850.jpg

திருவல்லிக்கேணி தீர்த்தாரப்பன் தெருவில் இருக்கிறது ராவுத்தரின் வீடு. தெருவில் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் அவரது சொந்தபந்தங்களே குடியிருக்கிறார்கள். முக்கால்வாசிப்பேர் இளையான்குடியில் இருந்து சென்னைக்குப் புலம் பெயர்ந்தவர்கள்.

 

பகல் ஒரு மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து சுடச்சுட சாப்பாடு வரும் ராவுத்தருக்கு. அலுவலகத்தில் இருக்கும் பெரும்பாலான நாட்களில் அவருக்கு வரும் சாப்பாட்டில்தான் என் வயிறும் நிரம்பும்.

மட்டன், சிக்கன், மீன், முட்டை, கருவாடு, உப்புக்கண்டம்.. ஏதாவது ஒன்று நிச்சயம் இருக்கும் கேரியரில். கவுச்சி இல்லாவிட்டால் ராவுத்தர் வீட்டுச் சாப்பாடு முழுமை பெறாது!

திடீரென ஒரு நாள்.. சுத்த சைவத்துக்கு மாறினார் ராவுத்தர். ஓரிரு நாட்கள் சாம்பாரும் ரசமுமாகவே கடந்தன.

“நான், வெஜிடேரியனா மாறப்போறேன் கொஞ்ச நாளைக்கு!” என ஆரம்பத்தில் சொல்லிக்கொண்டார் வேடிக்கைச் சிரிப்போடு.

பத்துப்பதினைந்து நாட்களானதும் திருவல்லிக்கேணி ராவுத்தர், கல்கத்தா ராவுத்தரானார்! மீன் மட்டும்  தினமும் வெவ்வேறு வடிவத்தில் இடம் பிடித்தது கேரியர் சாப்பாட்டில்!

“கல்கத்தாவுல மீன் வெஜிடேரியன்ல சேர்த்தி. அங்கே ஐயருங்ககூட மீன் சாப்பிடுவாங்க சார்.. தெரியும்ல!” என்று யாரும் கேட்காமலேயே விளக்கம் சொன்னார்.

அந்த விளக்கத்துக்குப் பின்னால், தொண்டைக் குழிக்குள் சிக்கிய மீன் முள் போல ஏதோ ஒரு விஷயம் ஒளிந்திருப்பதை நன்றாக யூகிக்க முடிந்தது. ஆனால் அது என்ன என்பதைத்தான் யூகிக்க முடியவில்லை!

 

*****
ரும் உறவுகளும் பக்ரீத் பெருநாளுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தன. பக்ரீத் கொண்டாட்டத்தின் மிக முக்கிய சடங்கு.. குர்பானி.

எல்லாம் வல்ல இறைவனுக்கு தன் மகனையே பலி கொடுக்கத் துணிந்த இப்ராஹிமைப் பார்த்து மகிழ்ந்த இறைவன், சிப்ரயில் என்ற வானவரை அனுப்பி இப்ராஹிமைத் தடுத்ததாகவும், ‘ஒரே ஒரு ஆட்டைப் பலி கொடுத்தால் போதும்’ எனக் கூறியதாகவும், அந்த சம்பவத்தை நினைவுகூரும் விதமாகத்தான் பக்ரீத் நாளில் பிராணிகள் பலி கொடுக்கப்படுவதாகவும் இஸ்லாம் கூறுகிறது. அதற்குப் பெயர்தான் குர்பானி.

 

ராவுத்தர் வீட்டுக்கு நேரெதிரே சின்னதாக பெட்டிக்கடை வைத்திருக்கிறார் அவரது மாமு. தூரத்து உறவினர். ஆரம்பத்தில் சென்னைக்கு வந்தபோது, அந்த பெட்டிக்கடையிலும் கொஞ்ச நாட்கள் வேலை பார்த்திருக்கிறார் ராவுத்தர்.

டிராவல்ஸில் வேலை பார்த்து, பிறகு ஒரு நாள் சொந்தமாகவே டிராவல்ஸ் ஆரம்பிக்கும் நிலைக்கு உழைப்பால் உயர்ந்தார். பெட்டிக்கடைக்கு எதிரே தான் குடியிருந்த வாடகை வீட்டையே விலைகொடுத்து வாங்கி, புதுப்பித்தார். நானூற்றி ஐம்பது சதுர அடி இடம்தான், அதில் இரண்டு மாடிகள் கட்டிக் கொண்டு வசித்து வந்தார்.

 

அடுத்தடுத்து ஹோட்டல், எக்ஸ்போர்ட்ஸ் என பல தொழில்கள் தொடங்கி கிடுகிடுவென உயர்ந்தபிறகும், செண்டிமெண்ட்டுக்காக தான் முதலில் வாங்கிய அதே தக்கணூண்டு வீட்டில்தான் இப்போதும் வசித்து வருகிறார் ராவுத்தர்.

குர்பானி கொடுப்பதற்காக வெளியூரில் இருந்து ஆடு ஒன்றை வாங்கினார் பெட்டிக்கடை மாமு. அதைக் கட்டிவைக்க கடையின் முன்பு இடமில்லை.

“மாப்ள.. இந்த ஆட்டை உங்க வீட்டுல நிறுத்தி வச்சுக்கறேன். டூவீலர் நிறுத்துற இடத்துல அது பாட்டுக்கு ஒரு ஓரமா நின்னுக்குரும்” என்றார் மாமு. ‘சரி’ சொல்லிவிட்டார் ராவுத்தர்.

மாமு சொன்னது போல அது ஆடு அல்ல.. ஆட்டுக் குட்டி. உடல் முழுவதும் புஸுபுஸுவென அடர்த்தியாய் ரோமம்.. மலை ஆட்டின் குட்டி. சல்லிசான காசுக்குக் கிடைக்கவே பக்ரீத்துக்கு ஒரு மாதம் முன்பே வாங்கிவிட்டார் மாமு.

 

ஆட்டுக்குட்டியை வாங்கிக் கட்டிய மாமு அதற்கு வேளாவேளைக்கு தீனி போட வேண்டாமா! எப்போதாவது எட்டிப்பார்த்து போனால் போகிறதென்று கொஞ்சம் இலை தழைகளைக் கொண்டுபோய்ப் போட்டதோடு சரி!

ஒரு நாள்.. பசியில் கூப்பாடு போட்ட ஆட்டுக்குட்டிக்கு தன் வீட்டில் இருந்த கீரை, காய்கறிகளைத் தூக்கிப் போட்டார் ராவுத்தர். அது சாப்பிடும் அழகை ரசித்தவர், அடுத்த நாளும் போட்டார்.

அதற்கடுத்த நாளில் இருந்து.. ஆட்டுக்குட்டிக்கென்றே ஸ்பெஷலாக கீரைகளும், கம்மி விலை காய்கறிகளும் வாங்க ஆரம்பித்து விட்டார்கள் ராவுத்தர் வீட்டில்!

ராவுத்தர், அவரது மனைவி, பெற்றோர், சகோதரி, குழந்தைகள்.. என எல்லோர் முகம் பார்த்தும் குஷியாக ‘ம்மே’ சொல்லப் பழகிவிட்டது அந்தக் குட்டி!

வந்தது பக்ரீத்!

 

குட்டியைத் தூக்கிக் கொண்டு போக வந்த மாமுவின் குறுக்கே நின்றார் ராவுத்தர்... “மாமு.. இந்த ஆட்டை குர்பானி கொடுக்க வேணாம். ரொம்ப சின்னதா இருக்கு. உங்களுக்கென்ன ஆடுதானே வேணும்? நான் இதை விட பெரிய ஆடா வாங்கித்தரேன்” என்றார். அப்படியே செய்தார்.

தன் சத்துக்கு சிறிய ஆட்டை குர்பானி கொடுக்க நினைத்திருந்த மாமுவுக்கு ராவுத்தர் புண்ணியத்தில் பெரிய ஆடே கிடைத்தது.

அப்புறமென்ன.. ராவுத்தர் வீட்டு செல்லக்குட்டியாக தன் பயணத்தைத் தொடர ஆரம்பித்தது  குர்பானிக்குத் தலை தப்பிய அந்த ஆட்டுக்குட்டி. ராவுத்தர் கையால் கொடுக்கும் தயிர் சாதத்தைக்கூட தேவாமிர்தமாக நினைத்துச் சாப்பிட்டது அது! காலையில் ராவுத்தர் அலுவலகம் கிளம்பும்போது டாட்டா கூறும் கடைசி ஆளாகவும், நள்ளிரவில் வீடு திரும்புகையில் துள்ளிக்குதித்து ஓடிவரக்காத்திருக்கும் முதல் ஆளாகவும் ஆகிப்போனது!

 

அந்த அன்புக்கு அடிமையானார் ராவுத்தர்! வீட்டில் மட்டன் வாங்குவதை சுத்தமாக நிறுத்தச் சொல்லிவிட்டார்!

மொத்தமாக சைவத்துக்கு மாறி, பின்னர் சில நாட்கள் கழித்து, தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டு மீன் சாப்பிட ஆரம்பித்திருந்தார்!

*****

டந்தது அனைத்தையும் சொல்லி முடித்தபோது ராவுத்தரும் நெகிழ்ந்து போயிருந்தார்.
 

அன்று மாலை.. சரியான மழை! வானம் கிழிந்து கொட்டோ கொட்டென்று கொட்டியது. ராவுத்தரையும் அந்த ஆட்டுக்குட்டியையும் நினைத்து நெகிழ்ந்தபடியே வீடு போய்.. அடுத்த நாள் காலையில் அலுவலகம் வந்தேன்.

 

ராவுத்தர் முகத்தில் எக்கச்சக்க பதற்றம்!

 

“நேத்து வீட்டுக்குப் போனதும் ரொம்ப கஷ்டமா போயிடுச்சு சார். ஆபிஸ்ல ஏ.ஸி. ரூமுக்குள்ள இருக்கேன் நான்.. எப்ப விடியுது எப்ப இருட்டுதுன்னு தெரியுறதில்லை.. எனக்குத்தான் வெளியே மழை இப்படி கொட்டுதுன்னு தெரியாமப் போச்சு. ஆனா வீட்ல இருக்கவங்களுக்கு என்ன சார்? அந்த ஆட்டை வாசல்ல அப்படியே விட்டுட்டு, உள்ளே அவங்க மட்டும் பாதுகாப்பா கதவைச் சாத்திக்கிட்டாங்க சார்.. பாவம் அந்த ஆடு.. சுவரோரமா சுருண்டு கிடந்துச்சு.. தொட்டுப் பார்த்தேன்.. மலை ஆடுல்ல.. நிறைய முடி.. அம்புட்டுலயும் தண்ணி தேங்கி.. கைவச்சதும்  கொட்டுது சார்..”

ராவுத்தரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.

 

“அப்புறம் அதை வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போய்ட்டேன்.. துண்டு எடுத்து நானே துவட்டி விட்டேன்.. இனிமே இது இங்கேயே இருக்கட்டும்னு சொல்லிட்டேன்..”

ராவுத்தர் முகத்தில் இறைவனின் நிழல்!

 

“ஆனா வீட்ல கொஞ்சம் சங்கடம் சார். என்னடா இவன் ஆட்டைக் கொண்டு வந்து நடு வீட்டுக்குள்ள நிறுத்திப்புட்டானேன்னு நினைக்கிறாங்க. ரொம்பச் சின்ன வீடுல்ல.. என்ன பண்றதுன்னு தெரியலை சார்..” என்றவரின் முகம் சட்டென மலர்ந்தது!

இண்டர்காமை எடுத்து, “உடனே என் ரூமுக்கு  வாய்யா” என்றார். ஓடி வந்து நின்றார் அவரது மேனேஜர் சுரேஷ்.

“யோவ்.. நீ பொன்னேரிலதான  இருக்கே! உங்க வீட்ல செடி கொடியெல்லாம் இருக்குல்ல.. ஒரு ஆடு தரேன்.. வளர்த்துக்கறியா?” என்றார்.

 

தலையாட்டினார் சுரேஷ்.

 

“நம்ம குட்டியானை வண்டியை எடுத்துக்க. நேரா என் வீட்டுக்குப் போ. நான் வீட்டுக்குப் போன் பண்ணி சொல்லிடறேன். வீட்ல ஒரு ஆட்டுக்குட்டி இருக்கும். வண்டில ஏத்திக்க. அக்கவுண்ட்ஸ்ல பணம் வாங்கி வண்டிக்கு டீசல் போட்டுக்க. உங்க வீட்டுக்கு இப்பவே கொண்டு போயிரு..”

 

ஓசியில் ஆடு கிடைக்கப்போகும் மகிழ்ச்சியோ என்னவோ மறு பேச்சு பேசாமல் மறுபடியும் தலையாட்டினார் சுரேஷ்.

 

“யோவ்.. இலை, தழை, கீரை, காய்னு வாங்கிப்போட்டு வளர்க்கணும். காசு பணம் பத்தலைன்னா என்கிட்ட அப்பப்ப கேட்டு வாங்கிக்க. நல்லபடியா ஆட்டைப் பார்த்துக்கணும். ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி நான் உன் வீட்டுக்கு வந்து அது உயிரோட இருக்கான்னு பார்த்துட்டே இருப்பேன்.. ஜாக்கிரதை!”

 

நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ராவுத்தர். சுரேஷ் வெளியேறினார்.

 

அதன்பின்னர் சில நாட்களில் எனக்கும் ராவுத்தருக்கும் சின்னதாக ஒரு மனஸ்தாபம்! நான் அவரைச் சந்தித்து பல வாரங்கள் ஆகிவிட்டன. மறுபடியும் அவர் மட்டன் சாப்பிட ஆரம்பித்து விட்டாரா என்று தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்...


இந்த ஜென்மத்தில் அந்த ஆட்டுக் குட்டியை யாரும் சாகடிக்க விடமாட்டார் ராவுத்தர்!

*****
- அடுத்த வாரம்.. இன்னொரு அனுபவம்!

(கட்டுரையாளர் மின்னஞ்சல் முகவரி: ggowtham@ggowtham.com)

­