தொடர்கள்
தொடர்கள்
நான் ஒரு ரசிகன் - இன்னா?... இன்னா?... - மதன்

 

20171104131421633.jpg

இன்னா?... இன்னா?...

மெரீனாவை ஒட்டியுள்ள பகுதி திருவல்லிக்கேணி. செல்லமாகதில்லக்கேணிஎன்று அழைக்கப்படும் இந்தப் பேட்டையை குட்டி இந்தியா என்று சொல்லலாம். மீனவர்கள், யாதவர்கள், பிராமணர்கள், முஸ்லிம் மக்கள் பக்கத்துப் பக்கத்தில் பெருவாரியாக வசிக்கும் பேட்டை இது.

சவாலே சமாளிகுடும்பங்கள் இங்கே நிறைய வசிப்பதால் அவர்களுக்கு நெருக்கடியில் உதவ மார்வாடிக் கடைகளும் நிறைய உண்டு.

எனக்குத் தெரிந்த வரை திருவல்லிக்கேணியில் ஜாதி, மத மோதல்கள் நிகழ்ந்ததில்லை. ஆனால் இளைஞர்களின் ஜமாக்கள் (அல்ப காரணங்களுக்காக) அவ்வப்போது மோதிக் கொள்வதுண்டு. ஒரு ஜமாவில் முஸ்லிம், பிராமணர், யாதவர் எல்லோரும் அடங்கியிருப்பார்கள்.

எனக்கும் ஒரு ஜமா இருந்தது. அதில் பார்த்தசாரதியும் உண்டு, ரெட்டியப்பனும் உண்டு, யாஸீனும் உண்டு, வெங்கோஜி ராவும் உண்டு!

எப்போதுமே ஒரு குழுவில் மிக தைரியசாலிகள் ஓரிருவர்தான் இருப்பார்கள் - டிராவிட், டெண்டுல்கர் மாதிரி (அடிதடியில்) சிக்ஸர் அடிக்கிறவர்கள் இவர்கள்இவர்கள் இல்லாமல் ஏதாவது பிரச்னையில் (எதிர்க் கோஷ்டியிடம்) மாட்டிக் கொண்டால் உதவிக்கு இவர்கள் வரும்வரை சமாளிப்பது ஒரு சிக்கலான கலை!

அதாவது தெண்டுல்கர், திராவிட் வரும்வரை பேசியே சமாளிக்க வேண்டும். நான் ஒருமுறை அப்படி ஒரு எதிரியிடம் சிக்கிக் கொண்டு, ‘என்ன?’ என்கிற ஒரு வார்த்தையை உபயோகித்தே நேரத்தைக் கடத்தியிருக்கிறேன். எதிராளியின் மிக அருகில் மூக்குகள் தொடும்படி நின்று கொண்டு கே.பி.சுந்தராம்பாள்என்ன என்ன என்ன என்ன?’ என்று பாடினாரில்லையா - அதையேஇன்னாஎன்று சற்று மாற்றிப் பயன்படுத்த வேண்டும். எதிராளிஇன்னா?’ என்பான். நானும்இன்னா?’ என்பேன். சுமார் 150 தடவை மாறி மாறிஇன்னா?’ என்று சொல்லியே நேரத்தைக் கடத்த வேண்டும். முடிந்தவரை குத்துச் சண்டையைத் தவிர்ப்பேன். என்னால் வலியை ரொம்பத் தாங்க முடியாது. இரண்டாவதாக மூக்குக் கண்ணாடி உடைந்துவிடும் என்கிற பயம். (அப்போதே பவர் - மைனஸ் 3.5!)

ஒருவேளை எதிரணி இன்ஸமாம் மாதிரி ஆளாக இருந்தால்? (அதாவது எடுத்தவுடனேஇன்னா?’வுக்கே போகாமல் அடிதடியில் இறங்கி விட்டால்?) அப்படி நடந்தால் அது பெரிய யுத்தத்தில் கொண்டு போய் விட்டு, மெரீனாவில் முழுப்படைகள் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும்.

சினிமாவில் தாதாக்களும், அடியாட்களும் வாட்டசாட்டமாக இருப்பது குறித்து எனக்கு ஆட்சேபணை உண்டு. நிஜவாழ்க்கையில் எனக்குத் தெரிந்தவரை பெரிய ரௌடிகள் தக்குனூண்டாகத்தான் இருக்கிறார்கள். என்னுடைய நண்பன் எட்டியப்பனைப் பார்த்தாலே பயமாக இருக்கும். உயரமாக, உருண்டு திரண்ட புஜங்களோடு இருக்கும் அவனுக்கு, ‘யாராவது தன்னை அடித்து விடுவார்களோஎன்கிற பயம் எப்போதும் உண்டு. அதுவே சோனி வெங்கோஜிராவ் எடுத்த எடுப்பில் பாய்ந்து எதிரியை சரமாரியாகக் குத்தி வீழ்த்தும் துணிச்சல் கொண்டவன்.

தாதாக்களை விட்டு அலெக்ஸாண்டருக்கு வருவோம். அலெக்ஸாண்டர்சோனிஇல்லையென்றாலும் முதல் அடி எப்போதுமே அவருடையதாகத்தான் இருந்தது.

புருஷோத்தமனுடன் அவர் ஈடுபட்ட யுத்தம் பற்றி அவரே தன் டயரியில் எழுதி வைத்திருக்கிறார். பிற்பாடு வரலாற்று ஆசிரியர் ப்ளூடார்க் தன்னுடைய 'Great Lives'  தொகுப்பில் அலெக்ஸின் டயரியிலிருந்து பல பகுதிகளைக் குறிப்பிட்டு நடந்த அந்தப் போரை விவரிக்கிறார்.

போரஸ் ஏழடிக்கும் மேல் உயரம். யானையில் அவர் வந்தபோது குதிரையில் அமர்ந்தது போலிருந்ததுஎன்று அலெக்ஸாண்டரே வர்ணிக்கிறார். இந்திய யானைகளைப் பார்த்து பல மன்னர்கள் (பாபர் உட்பட) மிரண்டதுண்டு. அலெக்ஸாண்டர் துளியும் பயப்படவில்லை. தன் படையை மூன்று பகுதியாகப் பிரித்து நேரிலும், பக்கவாட்டிலிருந்தும் இந்தியப் படையுடன் மோதினார். போரஸுக்கு உயரம், வீரம் இரண்டும் இருந்தது. யுத்தத்தில் கடைசிவரை அவர் பின்வாங்கவில்லை. ‘இந்தியர்களை வெற்றி காண்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதுஎன்கிறார் அலெக்ஸாண்டர்.

போரஸின் யானை, யுத்தகளத்தில் குதிரை போல லாகவமாகச் செயல்பட்டு ஆச்சர்யமான சாதனைகளைச் செய்ததாக ப்ளூடார்க் குறிப்பிடுகிறார். தன் எஜமானரான போரஸ் மீது பாய்ந்த அம்புகளைத் தன் தும்பிக்கையால் மென்மையாக அது எடுத்துப் போட்டதாக ப்ளூடார்க் குறிப்பிடுகிறார்.

போரஸ் சிறைப்பட்டதும் ஒரு முறையல்ல, இருமுறை. ‘உங்களை எப்படி நான் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று அலெக்ஸாண்டர் கேட்டது உண்மை. இருமுறையும்ஒரு மன்னரைப் போலஎன்று போரஸ் கம்பீராக பதில் சொன்னதும் உண்மை. உடனே ராஜ்யத்தை அவருக்குத் திருப்பித் தந்ததோடு, பதினைந்து குறுநில நாடுகளையும், ஐந்தாயிரம் ஊர்களையும் போரஸுக்குப் பரிசாகத் தந்தார் அலெக்ஸாண்டர்.

சிந்து நதி வழியாக பல சிறு நாடுகளை வென்று கொண்டே சென்ற அலெக்ஸாண்டரை மால்யர்கள் என்கிற பிரிவினர் எதிர்த்து நின்றார்கள்.

இந்தியாவில் மிக அதிக வீரம் படைத்தவர்கள் மால்யர்கள்என்கிறார் ப்ளூடார்க். குஜராத் அருகே உள்ள பகுதி அது என்று கேள்வி. மற்றபடி மால்யர்களைப் பற்றிய தகவல்கள் தற்போது இல்லை. அவர்களின் ’கொரில்லாதாக்குதலை மாஸிடோனியப் படைகளால் சமாளிக்க முடியவில்லை என்று தகவல். அலெக்ஸாண்டர் நேரடியாக கோட்டை மீதேறி மால்யத் தளபதிகளோடு வாள்சண்டை போட வேண்டியிருந்தது. அவர்களை வெட்டி வீழ்த்தி, வாளை அவர் உயர்த்தியபோது இன்னொரு வீரன் செலுத்திய அம்பு அலெக்ஸாண்டரின் இடுப்பைத் துளைத்து விட்டது.

மற்ற மாஸிடோனிய வீரர்கள் அலெக்ஸாண்டரைத் தூக்கிச் சென்று காப்பாற்றினார்கள். அந்த அம்பை சுலபத்தில் உடலிலிருந்து எடுக்க முடியாமல் வாளால் அறுத்து அகற்றினார்கள். அதில் ஆரம்பித்து பலமுறை மயக்கத்திலாழ்ந்தார் அலெக்ஸாண்டர்.

கங்கை நதியைக் கடக்க நினைத்த அவரது ஆசை நிறைவேறவில்லை. போரஸ் மன்னர் மாதிரி ஏராளமான அரசர்கள் இன்னும் பெரும் படையோடு அலெக்ஸாண்டருக்காகக் காத்திருக்கிறார்கள் என்ற செய்தி வந்து சேர, சற்றுத் துவண்டு போயிருந்த மாஸிடோனியப் படை, ‘ஊர் திரும்பலாம்என்று அலெக்ஸாண்டரை வற்புறுத்தியதும் உண்மை.

கடல், நதிகள் மூலமாக பாபிலோனியாவுக்கு மாஸிடோனியப் படை வந்து சேர ஏழு மாதங்கள் ஆனது.

பாபிலோனியாவில் ஜுரத்தால் படுக்கையில் (32 வயது) விழுந்தார் அலெக்ஸாண்டர். மலேரியா என்கிறார்கள் சிலர். அவருடைய குரு அரிஸ்டாட்டிலே, ‘சீடருக்கு சர்வாதிகார மனப்பான்மை வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டு விஷம் அனுப்பிக் கொலை செய்தார்என்றும் ஒரு கிசுகிசு அப்போது இருந்தது. ப்ளூடார்க் அதை மறுக்கிறார். சரியாக இருபத்தெட்டாம் நாளன்று அலெக்ஸாண்டர் இறந்த பிறகு ஒரு வாரத்துக்கு (புதைக்கும் வரை) அவர் உடல் துளிக்கூட அழுகவில்லை. நாற்றமெடுக்கவில்லை என்று ப்ளூடார்க் பலரிடம் விசாரித்து ஆச்சர்யத்துடன் எழுதி வைத்திருக்கிறார்.

எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதும் ப்ளூடார்க், ஒன்றை மட்டும் குறிப்பிடாமல் தவிர்க்கிறார். அந்த விஷயத்தைஅலெக்ஸாண்டர்திரைப்படத்தில் காட்டியபோது பல விமர்சகர்களுக்குத் திகைப்பு ஏற்பட்டது. காரணம், படத்தில் அலெக்ஸாண்டர் தன் நண்பனை உதட்டில் அழுத்தமாக முத்தமிடுகிறார்.

அப்படியென்றால் அலெக்ஸாண்டர் - ஹோமோ செக்ஷுவல்?!

-----------

(இதன் புத்தக வடிவு தங்கத்தாமரை பதிப்பகத்தில் கிடைக்கும்)

 

 

 

­