ஷெர்லக்

ஆர்.கே. நகர் தேர்தலும் சுப்ரமணியம் சுவாமியும்
“என்ன பாஸ்! உங்க வீட்டு அம்மா ஊர் திரும்பவில்லையா இன்னமும்! நீங்கள் குஷியாக இருப்பதை பார்த்தாலே தெரிகிறதே” - உள்ளே வந்தவாறு ஷெர்லக்!
“வரட்டுமே மெதுவாக! நீங்கள் சொல்லுங்கள் தகவல்களை வேகமாக! ஆர்.கே. நகர் பக்கம் போனீர்களா?”
“போகாமல்?.. மாநில உளவுத்துறை வழக்கம்போல ஆளுங்கட்சிக்கு சாதகமான நிலை இருப்பதாக அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. மதுசூதனன் இரட்டை இலையை நம்புகிறார். ஆனால் அவருக்கு எதிராக சுப்பிரமணியம் சுவாமி ஏதாவது தலைவலி பிரச்னையை கிளப்பலாம் என்ற பயம் கிளம்பி இருக்கிறது!”
“அது என்ன?”

“சு.சுவாமி கிளப்பினால் தெரிந்துகொள்ளுங்கள்! அப்புறம் தினகரன் பலவிதங்களில் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதும் பார்த்தேன்.. தன் வேட்புமனு ஏற்க வேண்டுமே என்ற கவலை இருந்தது. இது எல்லாம் ஒருபுறம் இருக்க.. ஆர்.கே. நகர் வெற்றி தோல்வியை வைத்து, கிரிக்கெட் சூதாட்டம் போல - பெரிய சூதாட்டமே நடக்கிறதாம்!”
“அப்படி நடக்காவிட்டால்தான் ஆச்சரியம்!”
“அப்புறம்.. தமிழக அதிகாரிகள் மட்டத்தில் ஒரு பெரிய பீதி இருக்கிறது! பெரிய அளவில் மாணவர் போராட்டம் வெடிக்குமோ என்பதுதான் அது!”
“அதற்கு என்ன காரணம் இருக்கிறதாம்?”
“இந்திய அளவில் அண்மையில் கல்வித் தரம் பற்றி நடந்த ஆய்வில், பல கல்லூரிகள் - குறிப்பாக பொறியியல் கல்லூரிகளின் தரமும் தகுதியும் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரி உட்பட! ஒன்று இந்த கல்லூரி மூடப்பட வேண்டும், அல்லது கலை அறிவியல் கல்லூரியாக மாற்ற வேண்டும். அடுத்த கல்வி ஆண்டில் இந்த பொறியியல் கல்லூரிக்கு பெரும் நெருக்கடி ஏற்படும். இது ஒருபுறம். அரசு பணியாளர் தேர்வு எழுத பிற மாநிலத்தவருக்கு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் வேறு எங்கும் இப்படி இல்லை! தமிழ் நாட்டில் பல லட்சம் பேர் வேலையின்றி இருக்கும்போது, இது சரியா என்று கோபம் பரவுகிறது... எப்படி இந்த அரசு அறிவிப்பு வந்தது என்று கேள்வி கேட்கப்படுகிறது! இவை எல்லாம் சேர்ந்து மாணவர் போராட்டமாக வெடிக்கலாம் என்பதுதான் பீதி!”
“போராட்டம் வராமல் பிரச்னை தீர்ந்தால் சரி!.. ரஜினி இந்த இடைத்தேர்தலில் தலைகட்டுவாரா?”
“ ரஜினி இப்போது வரமாட்டார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இருக்கிறாரே, அவர் ரஜினியின் அன்பான நண்பர். அரசியல் விவகாரத்தில் நிதின் கட்கரியின் ஆலோசனையை மிஞ்சி ரஜினி எதுவும் செய்ய மாட்டார்! பி.ஜே.பி.க்கு ஆதரவாகத்தான் ரஜினி இருப்பார் - பொதுத்தேர்தலில்!”
“நம் கவர்னர் எப்படி இருக்கிறார்?”

“அது தெரியாது.. ஆனால் நடப்பது எல்லாம் சீக்கிரம் அவர் ஆட்சி வரும் என்பதற்கு அறிகுறி என்கிறார்கள்! சாந்தா ஷீலா நாயர் தகவல் ஆணையராக நியமித்திருப்பதையும் சேர்த்து! இந்த பதவி ஐந்து ஆண்டுகள்! வயது வரம்பு 65. சாந்தா ஷீலா நாயர் ஒன்றரை வருடம்தான் பதவியில் இருக்க முடியும்! ஏன் இந்த நியமனம் என்பது அதிகார வட்டார கேள்வி!”

“ஆமாம்! ரெய்டு விஷயம் என்ன ஆச்சு?”
“உங்களுக்கு ஏன் அதுபற்றி தெரியவேண்டும்? ரெய்டு அதிகாரிகளுக்கே காரணம் சரியாக புரியவில்லையாமே! நோக்கமே வேறு என்கிறார்கள்! முக்கியமாக ஏதோ ஒரு டாக்குமெண்டை தேடுகிறார்கள்! அதுபற்றியே விசாரணையும் நடக்கிறது!”
“‘ஜெ’யின் உயில் என்கிறார்களே.. அதையா?”
“இருக்கலாம் பாஸ்! உங்கள் அறிவு எனக்கு கிடையாதே! ரெய்டு லிஸ்ட்டில் இன்னும் ஆறு, ஏழு பெயர் இருக்கிறது.. திடீர் ரெய்டுதான்...”
“முதலமைச்சர் எடப்பாடி, சேக்கிழார் கம்பராமாயணம் எழுதியவர் என்று ....”
குறுக்கிட்டு, “பாஸ்! அதை ‘ரிபீட்’ செய்யாதீர்கள்... காது கூசுகிறது.. சொல்லப்போனால் அமைச்சர்கள் பலரும் இதுமாதிரி ஏதாவது பேசிக் கொண்டுதானே இருக்கிறார்கள்! இப்போது கூட துணை சபாநாயகர் ஜெயராமன், ‘புரட்சித்தலைவி எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவர் அம்மா’ என்று சொன்னரே.. அவர்களைக் கேட்டால் ஸ்டாலின் ஜனவரி 25 சுதந்திர நாள் என்று சொல்லவில்லையா?’ என்கிறார்கள்!”
“முதல்வர் எழுதியதை பார்த்துப் பேசும்போது இப்படி குழப்பம் வரலாமா?”
“சரி.. அதை விடுங்கள்.. முதல்வர் அதை எல்லாம் பேச்சை எழுதிக்கொடுத்த துறையின் மீது பழி போட்டு மறக்கடித்து விடுவார்! அப்புறம் போயஸ் தோட்ட வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றும்போது - ‘ஜெ’யின் மெழுகு சிலை அதில் இடம்பெறும்... அதற்கான பணி நடக்கிறது!”
“அப்படியா?”
“குட்பை, பாஸ்” - ஷெர்லக் கிளம்பிவிட்டார்!

Leave a comment
Upload