
குஜராத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “புல்லட் ரயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள் மாட்டு வண்டியில் போகட்டும்” என்று பேசியிருக்கிறார். மும்பை - அகமதாபாத் இடையே அதிவேக புல்லட் ரயிலை இயக்க ஜப்பான் நாட்டு நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது மத்திய அரசு. இதனை காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்து வருகின்றனர். அவர்களை நக்கலடிக்கும் விதமாகத்தான் மாட்டு வண்டிப் பயணத்தைப் பரிந்துரை செய்திருக்கிறார் பிரதமர்.
இதே ரீதியில் மத்திய அரசின் ஏனைய திட்டங்களை எதிர்ப்பவர்களையெல்லாம் என்ன செய்யச் சொல்லலாம் என்று யோசித்துப் பார்த்ததில் தோன்றிய ஐடியாக்கள் இவை. காப்பிரைட்டெல்லாம் கிடையாது. பிரதமரோ, பாஜகவினரோ தாராளமாக எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம்.
* டிஜிடல் இந்தியா திட்டத்தை எதிர்ப்பவர்கள் துண்டு போட்டு ரகசியமாக மாட்டை விலை பேசும் பாணியில் பண்ட மாற்று வர்த்தகம் செய்து கொள்ளுங்கள்.
* தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒப்புக் கொள்ளாதவர்கள் எங்கே செல்ல வேண்டுமென்றாலும் நடந்தே செல்லுங்கள்.
* கருப்புப் பண ஒழிப்புக்காகச் செயல்படுத்தப்படும் சீர்திருத்தங்களை ஏற்காதவர்கள் சோமாலியாவுக்கு ஓடிவிடுங்கள்.
* புதுச்சேரி, தமிழ்நாடு என்று ஆளுநர்கள் நேரடியாக குறைகளைப் பார்க்கிறேன் என்று கிளம்பிச் சென்று ஆய்வு செய்வதைப் பிடிக்காதவர்கள் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு குடி பெயர்ந்து விடுங்கள்.
* மாதந்தோறும் ஒருநாள் பிரதமர் உரை நிகழ்த்தும் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியைக் கேட்கப் பிடிக்காதவர்கள், தினந்தோறும் ஸ்ம்யூல் செயலியில் பல பாத்ரூம் பாடகர்கள் கர்ண கொடூரமாகப் பாடும் பாடல்களைப் பல்லாயிரம் தடவை கேட்டுச் சாவுங்கள்.
* அடிக்கடி பிரதமர் வெளிநாடு போவதை நக்கலடிப்பவர்கள் டிவி, இண்டர்நெட்டையெல்லாம் கட் செய்யுங்கள்.
* எங்கிருந்தாலும் கேமராவைத்தான் பிரதமர் பார்க்கிறார் என்று குற்றம் சொல்கிறவர்கள் செல்ஃபி எடுப்பதை நிறுத்துங்கள்.
- சுபிக்ஷா

Leave a comment
Upload