தொடர்கள்
பொது
"எம்.ஜி .ஆர். என்னை தூக்கிச்சென்றார்!"

­2017110610244681.jpg

1980 - ல்  தாய் பத்திரிகையில் 'மனதைத் தொட்ட மலர்கள்' எனும் தலைப்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றி 45 வாரங்களுக்கு தொடர்ந்தாற் போல் எழுதியிருக்கிறார். அதனை 'கவிதா பானு' பதிப்பகம் அதே  பெயரில் ஒரு புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறது. பரவலாக பலராலும் அறியப்படாத இந்த தொகுப்பில் தனக்கு பிடித்த தயாரிப்பாளரிலிருந்து, பிடித்த பைத்தியக்காரர் வரையிலும் விலாவாரியாகவே எழுதியிருக்கிறார்.

தனக்குப் பிடித்த 'பைபிள் கதை' என்பதில் ஜேக்கப் எனும் ரெண்டு பெண்டாட்டிக்காரன் மகன் ஜோசப் என்பவரது கதையை மாத்திரம் கிட்டத்தட்ட 45 பக்கங்களுக்கு சொல்லியிருக்கிறார். (கிறிஸ்துவ மதக்காரர்களுக்கு   இது தெரிந்தால் இதனை தனி புத்தகமாகவே  வெளியிடக்கூடும். சும்மா சொல்லக்கூடாது... எல்லா மதக்காரர்களும் படிக்கவேண்டிய கதைதான் இது! 'என்னதான் சூழ்ச்சி செய்தாலும் நல்லவர்களை வீழ்த்தமுடியாது. அவர்கள் கடைசி வரை நல்லவர்களாகவே வாழ்ந்து தமக்கு தீமை செய்பவர்களையும்  திருத்துவார்கள்!' பாணியான அருமையான கதை இது!)

தனக்கு பிடித்ததாக ஜெயலலிதா பட்டியலிட்டிருக்கும் மற்ற விஷயங்கள் சில... 

பிடித்த விலங்கு                -   யானை
பிடித்த பானம்                   -   தேநீர்
பிடித்த பாடல்                   - "சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா "
பிடித்த  ஞானி                  -  கலீல் ஜிப்ரான்
பிடித்த  ஆங்கில நாவல்    -  சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய 'டேவிட் காப்பர் ஃபீல்ட்'
பிடித்த  ஓவியம்                -  டாவின்சி வரைந்த 'மோனலிசா' ஓவியம்
பிடித்த தத்துவ மேதை      - சாக்ரடீஸ்
பிடித்த தயாரிப்பாளர்        -  'சின்னத கொம்பே' எனும் கன்னட படத்தில் 'ஜெ' வை அறிமுகப்படுத்திய பி.ஆர்.பந்துலு.                                                   

பிடித்த ஊர்                      -  ஜெய்ப்பூர். இங்கே அடிமைப்பெண் படப்பிடிப்பிற்காக சென்றபோது                 

                                          பாலைவனத்தில் வெற்றுக்காலில் டூயட் ஆடவேண்டிய நிலைமை,

                                          அப்போது சூடு தாளாமல் தள்ளாடி விழ இருந்த தன்னை எம்.ஜி.ஆர் சட்டென  தன்      கரங்களில் ஏந்தி சில மைல் தூரம் தூக்கிச்சென்றதை மறக்க இயலாது என்று சொல்லியிருக்கிறார்.

பிடித்த மேற்கோள்  - மாக்ஸிம் கார்க்கியுடையது.  "வாழ்க்கை துயரமானது என்பது உண்மையல்ல. அழுகையும் துயரமும் தவிர அதில் வேறொன்றுமில்லை என்பதும் உண்மையல்ல. மனிதன் எதையெல்லாம் தேடிக் கண்டுபிடிக்க விரும்புகிறானோஅவையெல்லாம் வாழ்க்கையில் கிடைக்கும். எது இல்லையோ அல்லது குறைவாக உள்ளதோ அதனை உருவாக்கிக்கொள்ளும் சக்தி மனிதனிடம் உண்டு!" என்பதுதான் 'ஜெ'வுக்கு பிடித்தமான மேற்கோள்.

இதை தவிர பிடித்த காதல் மொழிகள், காதல் நினைவு மண்டபங்கள், பிடித்த ஏமாற்றுக்காரர், பிடித்த பிடிவாதக்காரி, பிடித்த கறார் பேர்வழி, பிடித்த பைத்தியக்காரர், பிடித்த வக்கீல், பிடித்த சிறுவன் போன்ற பட்டியலும் புத்தகத்தில் உண்டு. ஆனால் மேற்படி விவகார பட்டியலில் ஏமாற்றுக்காரர்களுக்கு முகலாய மன்னரின் 'குஸ்ரோ' பெயரைச் சொன்ன ஜெயலலிதா, மற்றும் சில லிஸ்டுக்கு வெளிநாட்டு ஆட்கள் பக்கம் போய்விட்டார்.

ஒருவேளை 1980-கள் என்பதால் இப்படியோ?... அரசியலுக்கு வந்தபிறகு எழுதியிருந்தாரானால் நிச்சயம் லிஸ்ட் மாறியிருக்கும்.

தொகுப்பு : நமது நிருபர்