
எனக்குப் பிடித்த கவிதைகள் – ரவிசுப்பிரமணியன்.
பாகம் 1
துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் ஆங்கிலஇலக்கியமும் தமிழ் இலக்கியமும் பயின்றவர். கேரளாவில்
ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றிவர். நகுலன் கவிதைகளை எதிர் கவிதைகள் (Anti Poetry) என்று சொல்லலாம்.
இவ்வகைக் கவிதைகள் அலங்காரங்கள் ஏதுமின்றி வெகுசாதாரண உரைநடை போலத்தான் இருக்கும்.
நகுலன் கவிதைகள் எளியவை ஆனாலும் மெல்லிய தத்துவ சரடுகொண்டவை. அவர் கவிதைகளை
புரிந்துகொள்ள அவர் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்வது உதவியாய்இருக்கும்.
அவரது மூன்று எளிய சிறிய கவிதைகள்.
1. நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப் பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.
2. வந்தவன் கேட்டான்
என்னைத் தெரியுமா
தெரியவில்லையே
என்றேன்
உன்னைத்தெரியுமா
என்று கேட்டான்
தெரியவில்லையே
என்றேன்
பின் என்னதான் தெரியும்
என்றான்.
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும் என்றேன்.
3. அம்மாவுக்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத் தெரியவில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித் தடவி
அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக்குரல்
ஒலிக்கிறது.
நண்பா அவள்
எந்த சுவரில்
எந்த சித்திரத்தைத்
தேடுகிறாள்.

Leave a comment
Upload